எவரெஸ்டை எட்டிப்பிடித்த சின்ஹா | Arunima Sinha


மனவுறுதி என்பது அருணிமாவின் இரத்தத்தில் கலந்ததாகத்தான் இருக்கவேண்டும் என்று அனைவரும் பாராட்டும் அளவிற்கு, அவரைப்பற்றிக் கேட்பவர்களையெல்லாம் உந்தித்தள்ளும் அளவிற்கு, இவருடைய வாழ்வு அமைந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. 
 

உத்திரப்பிரதேசம் மாநிலம் அம்பேத்கார் நகரில் 1989 ஜூலை 20 இல் ஒரு இராணுவ பொறியாளருக்கு மகளாகப் பிறந்தார். இவரோடு பிறந்தவர்கள் 4 பேர். இவருடைய தந்தையை இளம் வயதில் இழந்ததால் இவருடைய வாழ்வு மிகவும் கடினமானதாகவும், போராட்டம் நிறைந்ததாகவும் இருந்தது. இவருடைய இருப்பிடத்திலுள்ள அரசினர் பெண்கள் பள்ளியில் தன்னுடைய படிப்பினை தொடர்ந்தார். தோட்டக்கலை, படம் வரைதல், யோகா, பயணம் செல்லுதல் மற்றும்; பாடல் கேட்பது போன்றவைகளைப் பொழுதுபோக்காகக் கொண்டிருந்தார். கைப்பந்துப் போட்டியில் தேசியப் போட்டிக்காகத் தேர்வுசெய்யப்பட்டார். 7 முறை தேசிய கைப்பந்துப் போட்டிகளில் பங்குகொண்டுள்ளார். 
 

துணை இராணுவத்தில் சேர்வதற்காக 12 ஏப்ரல் 2011 அன்று பத்மாவதி விரைவு இரயிலில் டெல்லியை நோக்கிப் பயணம் சென்றார். டெல்லியில் சிஐஎஸ்எப் தேர்விற்காகச் சென்ற இவரின் வாழ்வுப்பாதையே மாறப்போகிறது என்பதனை அப்போது அவர் உணர்ந்திருக்கவில்லை. 
 

இவருடைய இரயில் பயணத்தின்போது, திருடர்கள் கூட்டம் வந்தது, அனைவருடைய ஆபரணங்கள், பணத்தையும் பறித்தார்கள். இவருடைய கழுத்தணியை அவர்கள் பறிக்கமுயன்றபோது, இவர் அவர்களைத் தடுத்தார். கடைசியில் அவர்கள் இவரை இரயிலில் இருந்து தள்ளிவிட்டார்கள். இவர் மயக்கநிலை அடைந்தார். அதன்பின்பு நடந்தது எதுவும் ஞாபகமில்லை, ஆனால்; ஒன்றுமட்டும்தான் நினைவில் இருந்தது அவருடைய இடது காலில் மற்றொரு இரயில் ஏறிச்சென்றது மட்டும்தான்.  
 

அவருடைய இடதுகால் துண்டிக்கப்பட்டது. ஆனால் அவர் மனவலிமை பெற்றவராகவே இருந்தார். தன்னை பயிற்சிக்குள்ளாக்கினார். இரண்டு கால்களும் இருந்தும் எங்கும் பயணிக்கமுடியாமல் பலர் இருக்கின்றபோது, எவரெஸ்ட் மலைக்கு ஏறி தன்னுடைய தடம் பதித்தார். இன்னும் உலகின் பல்வேறு உயர்ந்த மலைகளில் ஏறி சாதனைப் படைத்திருக்கிறார்.
 

எல்லாம் இருந்தும் முயற்சி செய்யாமல் பலர் இருந்துகொண்டிருக்கும்போது, வாழ்வின் எல்லாத் தோல்விகளுக்கு மத்தியிலும், வலிமை கொண்டு, உயர்ந்து நிற்கிறார் அருணிமா சின்ஹா.
 

வாழ்க்கையில் தோல்வியை சந்தித்தவர்கள்தான். தோற்றுக்கொண்டே வாழ்ந்த இவர்கள்தான் சாதனையாளர்களாகவும் வரலாறுகளாகவும் மாறியிருக்கிறார்கள், மாறுகிறார்கள். தடைகளைத் தகர்தெரிந்தார்கள், வாய்ப்புகள் தவறும்போதும், மறுக்கப்படும்போதும் அவர்கள் வாய்ப்புகளை உருவாக்கினார்கள். அவர்களே வாய்ப்புகளாக மாறினார்கள்.
 

Add new comment

5 + 0 =