உடல்நலம்பெற உள்மனக் காயங்கள் ஆற்றப்படவேண்டும்


pixabay

நான் என் சொந்த ஊரில் பள்ளி பயின்றபோது இருந்தபோது பலரும் கேரளாவில் உள்ள டிவைன் தியான மையத்திற்கு சென்று இயேசுவை தங்கள் வாழ்வில் பெற்றுக்கொள்ளும் அனுபவம் பெற்றுவந்தார்கள். தன்னுடைய முதுமையை நோக்கிய வயதிலும் மிகவும் துடிப்புடன் இருந்த என்னுடைய தாத்தா ஒருவர் தன்னுடைய சகோதர சகோதரிகளிடம் பல ஆண்டுகளாக உறவே இல்லாத நிலையிலிருந்தார். திடிரென்று ஒருநாள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார், பயனில்லை. 

சில மாதங்களுக்கு பிறகு, டிவைனுக்கு அழைத்துச்செல்லப்பட்டார். தியானத்தில் கலந்துகொண்ட அவருக்கு, தன்னுடைய நோய்க்கு அடிப்படையில் தனக்கும் தன்னுடைய சகோதர சகோதரிகளுக்கும் இடையேயுள்ள உறவு சரியில்லாத காரணத்தால் விளையும் மனஅமைதியின்மையும் அங்கலாய்ப்பும்தான் காரணம் என்பதை உணர்ந்தார். 

அப்பொழுதுதான் தன்னுடைய இழந்த உறவுகளைப் புதுப்பிக்கவேண்டிய அவசியத்தையும், ஒப்புரவின் முக்கியத்துவத்தையும் உணர்ந்தார். ஒப்புரவு அருள் அடையாளத்தில் ழுழுமையாக பங்குகொண்டார். குணம் பெற்றார். வீடுதிரும்பியபோது தன்னுடைய சகோதர சகோதரிகளிடம் மீண்டுமாக உறவைப் புதுப்பித்துக்கொண்டார். ஆலயம் சென்று, உணவு பகிர்ந்து கொண்டு உறவைக் கொண்டாடினார். 

ஒப்புரவு என்பது நம் நல்வாழ்விற்கும், உடல் நலத்திற்கும் மிகவும் அவசியமானதாகும். பல நேரங்களில் நமக்கு பிடிக்காதவர்கள் நம் எதிரே வந்தாலோ, தூரத்தில் நின்றாலோ நம்முடைய மனத்தில் ஆயிரம் எண்ணங்கள் தோன்றும், நம்முடைய உடலில், மனநிலையில் ஒரு அமைதியின்மையை நாம் காணமுடியும். இது தொடர்கின்றபோதுதான் நாம் முழுமையாக அமைதியை இழந்து, வாழ்வைத் தொலைத்துவிடுகின்றோம்.

அப்படி வாழ்வை தொலைக்காமல் இருக்க ஒப்புரவு அவசியம். ஏதோ சொல்லப்படாதக் காரணத்திற்காக நம்முடன் உறவை முறித்தவர்கள், நம்மை எதிரியாக நினைத்துகொண்டிருக்கிறார்;கள் என்று நாம் நினைப்பவர்கள், நம்மைப் பற்றி தவறாக பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று நாம் நினைத்துக்கொண்டிருப்பவர்களிடம் திடீரென்று சென்று பேசிப்பாருங்கள். நாம் நிஜம் என்று நினைத்தவை அனைத்தும் நம்முடைய கற்பனையே – நாம் ஒரு சிறந்த கதை ஆசிரியராக இருப்பதற்கான எல்லா தகுதியும் நமக்கு இருக்கின்றது என்னும் நம்முடைய திறமையும் நமக்கு வெளிப்படும். 

நானும் இத்தகைய முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றேன். ஏன் நாம் பேச வேண்டும், நாம் தவற செய்தோம், அவர்கள் நம்மிடம் பேசவிட்டால், நம்மை அவமானப்படுத்திவிட்டால் என்ற கற்பனையெல்லாம் முட்டுக்கட்டையாக வரும்போது அதையும் மீறி சென்று பேசிப்பாருங்கள், பழகிப்பாருங்கள். அப்பொழுது உணர்வீர்கள் நீங்கள்தான் சிறந்த கற்பனையாளர் என்று. அதன்பின்பு வருகின்ற அமைதிக்கும் நிம்மதிக்கும் அளவே இருக்காது. இத்தனை ஆண்டுகள் நாம் இப்படி வீணடித்துவிட்டோமே என்ற எண்ணம்கூட தோன்றும். இது ஒரு திரில்லர் படம் போல தோன்றும். ஆனால் அது ஒரு குடும்ப காமெடி படம் என பின்புதான் உணர்வீர்கள்.

விவிலியத்தில், கடவுளுக்கு எதிராக பாவம் செய்த மக்கள் கடவுளிடம் மீண்டும் வருவதற்கு முன்பாக அவர்களும் பல கற்பனைகள் செய்தார்கள். அந்த கற்பணையில் கடவுள் தங்களை ஏற்றுக்கொள்ளமாட்டார் என்று எண்ணியவர்கள் தங்கள் வாழ்வை அழித்துக்கொண்டார்கள் யூதாசைப் போல. ஆனால் கடவுள் ஏற்றுக்கொள்வார் என்று ஒப்புரவு செய்ய நினைத்தவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, உடன்படிக்கையைப் புதுப்பித்து, வாழ்வு பாதையை மாற்றியமைத்தார்கள் - இஸ்ரயேல் மக்கள், தாவீது, பேதுரு போன்றவர்கள். 

இயேசுகூட உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன, நலமாகு என்றுதான் கூறுவதை பார்க்கின்றோம். ஆம், தன்னை மட்டுமே மையப்படுத்தி மற்றவர்களின் உணர்வுகளை மதிக்க மறந்த தருணங்களில் நாம் நம்முடைய மனத்திலும் தொடர்;ந்து அதன் விளைவாக உடலிலும் பாதிக்கப்படுகின்றோம், பாதிப்பை ஏற்படுத்திக்ககொண்டே இருக்கின்றோம். திருப்பாடல் (32:5) ஆசிரியர் கூறுவார்: ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக்கொள்வேன் என்று சொன்னேன். நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர். 

ஆண்டவரிடம் நம்மை ஒப்படைக்கவேண்டும். அதற்காகதான் தாய் திருஅவையானது ஒப்புரவு அருள் அடையாளத்தின் முக்கியத்துவத்தை அதிகமாக உணர்த்துகின்றது. நாமும் மறந்த, மறக்கப்பட்ட, தான் என்ற அகந்தையால் வருகின்ற உறவுச் சிக்கல்களை நீக்க முயலுவோம். ஒப்புரவு அருள் அடையாளத்தில் இணைவோம். நான் இப்பொழுதெல்லாம் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் ஒப்புரவு அருள் அடையாளத்தில் பங்கு கொள்கின்றேன். அது பாவத்தை செய்து அது நமக்கு பழக்கமாக மாறுகின்ற நிலையிலிருந்து நம்மை விலக்கி, நம்மை தூய்மைப்படுத்திக்கொண்டே இருக்கின்றது.

தன் குற்றப்பழிகளை மூடிமறைப்பவரின் வாழ்க்கை வளம் பெறாது; அவற்றை ஒப்புக் கொண்டு விட்டுவிடுகிறவர் கடவுளின் இரக்கம் பெறுவர் நீமொ 28:13.
 

Add new comment

10 + 2 =