Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இப்படி செஞ்சிட்டாரே இவரு!
'தனக்கு மிஞ்சியே தானமும் தர்மமும்' என்று எண்ணி நாம் வாழ்ந்து கொண்டிருந்தாலும், இந்த உலகிற்கு வரும்பொழுது எதுவும் கொண்டு வராத நாம் அதைவிட்டு செல்லும்போதும் எதுவும் கொண்டுசெல்ல போவதில்லை. இந்த பூமியில் நாம் வாழும் காலத்தில் செய்யும் நல்ல காரியங்களே நம்முடைய இறப்பு எவ்வாறு இருக்கும் என்பதை முடிவு செய்யும்.
இப்படி இருக்க, அமெரிக்காவைச் சேர்ந்த மிகப்பெரிய கோடீஸ்வரரான சார்லஸ் சக் ஃபீனி தான் ஏழையாக இறக்க விரும்புவதாக கூறியுள்ளதோடு தனது சொத்துக்கள் முழுவதையும் தானமாக வழங்கியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
89 வயதான சார்லஸ் சக் ஃபீனி, ராபர்ட் மில்லர் என்பவருடன் இணைந்து 1960 ஆம் ஆண்டு டூட்டி பிரீ ஷாப்பர் கடைகளை திறந்தார்.
கடின உழைப்பின் பலனாக பல நாடுகளில் தங்களது வணிகத்தை விரிவு செய்த இவர்கள் அமெரிக்காவின் முக்கிய பணக்காரர்களாகவும் மாறினர். தொடக்கம் முதலே பிறருக்கு உதவுவதில் ஆர்வம் கொண்டிருந்த ஃபீனி, மிகப்பெரிய அளவிலான தொகையை அறக்கட்டளைகளுக்கு வழங்கி வந்தார்.
இதுவரை இவர், குழந்தைகளின் கல்விக்கு மற்றும் சுமர் 3.7 பில்லியன் டாலர்கள் நன்கொடையை கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாம், வியட்நாமில் சுகாதாரத்தை மேம்படுத்த 270 மில்லியன் டாலர் எனப் பல உலக நாடுகளுக்கு தொடர்ந்து உதவி வந்துள்ளார், ஃபீனி.
40 ஆண்டுகளுக்கும் மேலாக நன்கொடை வழங்கி வந்த இவர், ஏழையாக இறக்க வேண்டும் என்ற தனது ஆசையை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில், தனக்கு சொந்தமான 58888 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பல்வேறு அறக்கட்டளைகள் வழியாக நன்கொடையாக வழங்கியுள்ளார்.
தனக்காகவும் தனது மனைவிக்காகவும் இரண்டு மில்லியன் டாலர்கள் மட்டும் வைத்துகொள்ளவதாக தெரிவித்துள்ள அவர், சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஒரு சிறிய வீட்டில், தனது மனைவியுடன் வசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்த நற்செயல்கள் குறித்து பேசிய ஃபீனி, இது போன்ற செயல்களால் தான் மிகவும் திருப்தி அடைவதாக கூறினார். மேலும் தனது காலத்திலேயே இதைச்செய்து முடிப்பதைப் பற்றி மிகவும் நன்றாக உணர்வதாக கூறினார்
Add new comment