Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
அன்பின் சிகரம் அன்னை தெரசா! | Stella Ruby
"பெரிய காரியங்களை உணர்வில்லாமல் செய்வதை விட சிறிய காரியங்களை பேரன்புடன் செய்யப் பழகுங்கள். அது உங்கள் வாழ்க்கையை இன்பமாக்கும்" - அன்னை தெரசா.
செப்டம்பர் - 5 அன்னையின் நினைவு நாள். 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளின் அதிபர்கள், பல நாட்டு உயர் அதிகாரிகள் அன்னையின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார்கள். இந்திய நாட்டில் அண்ணல் காந்தியடிகளுக்குப் பிறகு தனியாக அன்னை தெரசாவுக்கு இராணுவ மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்கு நடைபெற்றது. இது இந்திய நாடு அவரது அளப்பரிய தொண்டிற்குச் செய்த மரியாதை ஆகும்.
'எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே .. அது நல்லவர் ஆவதும், தீயவர் ஆவதும் அன்னையர் வளர்ப்பினிலே.....'
உலகில் எல்லா குழந்தைகளுக்குமே அம்மா இருப்பாங்க. அம்மா இல்லாத குழந்தை ஏதுங்க? ஆனால் பிறக்குற குழந்தைகள்ல எத்தனை பேருக்கு அம்மா கிட்ட இருந்து வளர்ற கொடுப்பினை இருக்கு சொல்லுங்க? பெண்கள் எல்லோரும் அன்னையர் ஆயிட முடியாதுங்க. அன்னையராயிட்ட எல்லோராலும் அன்னை தெரசா ஆகிட முடியாதுங்க.
துரும்பென மெலிந்து தேகம்
துலங்கிடும் குளிர்ந்த பார்வை
இரும்பினும் வலிய உள்ளம்
இனியவையே செய்யும் எண்ணம்
கரும்பினும் இனிய சொற்கள் - இவர்தான்
ஆக்னஸ் என்னும் அருட்சகோதரி
அன்னை தெரசா!
தெரசா மன உறுதியும், பிறருக்கு உதவும் குணமும் அதிகம் கொண்டவர். மூன்று குழந்தைகளை வைத்துக் கொண்டு வாழ்க்கையுடன் போராடிப் போராடி வெற்றி கொண்டார். அதே விடாமுயற்சி, மன உறுதி, இரக்கக் குணம் என்று தாயின் குணங்களைக் கொண்ட ஆக்னசுக்கு சேவை புரிவதில் நாட்டம் அதிகம். அவள் அருட்சகோதரி ஆனதும் கற்பு, எளிமை, கீழ்படிதல் சகிப்புத் தன்மையும் அவளுடன் சேர்ந்து கொண்டது.
"ஒடுக்கப்படுபவனும். வீதியில் அனாதையாய் திரிபவனும், இறந்து கிடப்பவனும், தொழுநோயால் உடல் நைந்து உள்ளம் வெதும்புபவனும் நானே அவர்களுக்குச் செய்த சேவை எனக்கே செய்த சேவை என்ற கர்த்தரின் குரல் அடிக்கடி அசிரீரியாய் அவள் கேட்கும் குரல் ஆனது. தன் நாட்டை விட்டு இந்தியா வந்த அன்னையை அழுக்கடைந்த, ஜன நெரிசல் மிக்க, ஏழைகள் வாழ்ந்த கொல்கத்தா நகரம் அன்னையைக் கைகளில் ஏந்திக்கொண்டது.
தெரசா தனியே சேவை இயக்கம் நடத்த எண்ணுகிறாள் என்பது தலைமை மடத்திற்குப் பிடிக்கவில்லை. கட்டுப்பாடுகள் மிகுந்த சபையில் இருந்து கொண்டு சுதந்திரமாகத் தன் சேவைகளைச் செய்ய அன்னையாலும் முடியவில்லை. தான் தொடங்க இருக்கும் இயக்கம் தனித்துச் செயல்பட்டாலும், கிறிஸ்தவ மதக் கோட்பாடுகளுக்கு உட்பட்டே இருக்கும் என்ற உறுதிமொழியுடன் அவள் வாடிகன் நகருக்கு அனுப்பிய கடிதத்திற்கு அங்கிருந்து 'எஸ்' என்ற பதில் வந்தவுடனேயே அன்னையின் வெற்றி துவங்கிவிட்டதுங்க. அது வாடிகன் நகரில் இருந்து கிடைக்கவில்லை, வானகத்தில் இருந்து கிடைத்த கடவுளின் அங்கீகாரம்!
மூன்று மாதத் தேவையின் பொருட்டு மருத்துவப் பயிற்சி பெற்றபின் தன் அடையாளம் மாற்றிக் கொண்டாள் அன்னை. விலை மலிவான வெள்ளை நிறச் சேலை, வெள்ளை முழுக்கைச் சட்டை, சேலையின் ஓரம் மூன்று நீல நிறக் கோடுகள் கொண்ட கரை கைகளில் பைபிள், கழுத்தில் தொங்கும் சிலுவைச் சின்னம், ஒரு ஜோடி மலிவான செருப்பு.
மரத்தடியில் மண் தரையில் நாலைந்து குழந்தைகளுடன் ஆரம்பித்தாள். அன்றிலிருந்து போராடினாள். போராடினாள். ஒவ்வொன்றுக்கும் தனி மனுஷியாக நின்று மன உறுதியுடன் போராடினாள். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பார்கள். தெரசா ஏழைகளுக்குச் செய்த சேவையில் இறைவன் மகிழ்ந்து சிரித்தார். சகிப்புத் தன்மைக்கு இன்னொரு பெயர் தாழ்ச்சிங்க. “இதோ ஆண்டவரது அடிமை என்று கூறி மரியா தனக்கு வந்த அனைத் துத் துன்பங்களையும் சகித்துக் கொண்டதால் தான்…
காலஞ்சென்ற பெரியோர்களின் நினைவாக தபால் தலைகள் வெளியிடுவது வழக்கம். அதை மாற்றி வாழ்ந்து கொண்டு இருக்கும்போதே நம் நாட்டின் தபால் தந்திதுறை அன்னையின் உருவப் படம் தாங்கிய தபால் தலை வெளியிட்டது இந்தியா முழுவதும் கட்டணமின்றி தொடர் வண்டி பயண அனுமதி, இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்களில் இலவசமாக பயணம் செய்ய அனுமதி என்று சலுகைகள் குவிந்தன.
நோபல் பரிசு, பிரிட்டிஷ் நாட்டின் மிகப்பெரிய விருதான ORDER OF MERIT பட்டம், ராஜிவ் காந்தி சத்பாவனா விருது, எண்ணற்ற நாடுகளில் டாக்டர் பட்டங்கள், பரிசுகள், பாராட்டுதல்கள், நன் கொடைகள் என்று அன்னையிடம் வந்து குவிந்தன.
அன்னையின் இல்லத்தில் வாசலில் உள்ள கரும்பலகையில் எழுதி உள்ளது ஒரு வாசகம். இதை அன்னை தினமும் படிப்பார்களாம் அதில் “வறுமையிலும், பசியிலும், பிணியிலும் அல்லல்படும் எங்கள் சக மனிதர்களுக்குச் சேவை செய்யத் தகுதி உடையவர்களாக எம்மை ஆக்குவீர்களாக!" என்று எழுதி இருக்குமாம்.
அன்னை புனிதர் ஆனாள். அனைத்திலும் உயர்ந்து நின்றாள். உலகம் அன்புக்குத்தான் ஏங்கியது. அதை அன்னைக்குப் பின் தர அவள் ஏற்படுத்திய அன்பின் தூதுவர்கள் இன்றும் அன்பை உலகுக்குக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்
அன்னையின் ஆன்மா அனைத்தையும் பார்த்துச் சிரித்துக் கொண்டு இருக்கிறது. அன்னையே உம் ஆசீரைத் தாரும் அம்மா...!
சகோ. ஸ்டெல்லா ரூபி
இந்த பதிவு 'இருக்கிறவர் நாமே' புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. இது போன்ற மேலும் பல பதிவுகளுக்கு,
ஆசிரியர்,
இருக்கிறவர் நாமே
[email protected]
என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளவும்.
Add new comment