வியக்க வைக்கும் பெரிய இணையதள வணிக நிறுவனம் : அமேசான் 


MarketWatch

அமேசான் நிறுவனத்தை தொடங்கிய போது, அதன் நிறுவனர்களுக்கே அந்த நிறுவனம் குறித்து நம்பிக்கை இல்லை. ஜெஃப் 1999 ஆம் ஆண்டு, "அமேசான். காம் நிறுவனம் வெற்றிகரமான நிறுவனமாக இருக்குமென எந்த உத்தரவாதமும் இல்லை. நாங்கள் செய்ய முயல்வது சிக்கலான ஒரு விஷயம்." என்று கூறி இருக்கிறார். அதுவும் நிறுவனம் தொடங்கி 5 ஆண்டுகளுக்கு பிறகு. அமேசான் நிறுவனம் தொடங்கி இந்த ஆண்டோடு 25 ஆண்டுகள் ஆகின்றன. உலகத்தின் மதிப்புமிக்க நிறுவனங்களில் இப்போது அதுவும் ஒன்று. உலக பணக்காரர்களின் ஜெஃபும் ஒருவர்.

ஒரு ஆன்லைன் புத்தக விற்பனை நிறுவனமாக தொடங்கப்பட்ட நிறுவனம் இந்தளவுக்கு சாதித்தது எப்படி? அமேசான் நிறுவனத்தின் வணிகம், அதன் பொருளாதாரம் நம்மை வியக்க வைக்கிறது. கடந்தாண்டு அந்த நிறுவனத்தின் மதிப்பு 1 ட்ரில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டிருக்கிறது. சர்வதேச அளவில் ஆப்பிள் நிறுவனத்திற்கு அடுத்ததாக அமேசான் உள்ளது. அமேசானின் ஆண்டு வருமானமும் அனைவரையும் மலைக்க வைக்கிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் அதன் விற்பனை 275.06 பில்லியன் டாலராக இருக்குமென்றும், 2020 இறுதிக்குள் அதன் வருமானம் 320 பில்லியன் டாலராக இருக்குமென்றும் கணிக்கப்படுகிறது.

சாத்தியமான வெற்றி

உலகெங்கும் தமது நிறுவனத்தை விரிவாக்கம் செய்தது மட்டும் அமேசானின் வெற்றிக்கு காரணமில்லை. பல தரப்பட்ட விஷயங்களை அமேசானிற்குள் கொண்டுவந்ததுதான், அதன் வெற்றிக்கு காரணம், அதாவது வீடியோ ஸ்ட்ரீமிங், ப்ரைம் ஆடியோ, அண்மையில் கொண்டுவரப்பட்ட காய்கறி விற்பனை என இந்த நிறுவனம் பல துறைகளில் கால்பதித்து வெற்றி கண்டிருக்கிறது. இந்த நிறுவனம் நேரடியாக ஃபேஸ்புக், ஆப்பிள், கூகுள், நெட்ஃபிளீக்ஸுடன் போட்டி போடுகிறது. அவை அனைத்துக்குமான தொடக்க புள்ளி புத்தக விற்பனைதான்.

ஆன்லைன் புத்தக விற்பனை 

"நாங்கள் நான்காண்டுகளுக்கு முன்பு முதல்முதலாக புத்தக விற்பனை செய்த போது, அனைவரும் எங்களை கிண்டல் செய்தார்கள். இந்த கணிணி கூட்டத்துக்கு புத்தகம் குறித்து என்ன தெரியுமென பகடி செய்தார்கள். அது உண்மையும் கூட" என்று 1999 ஆம் ஆண்டு ஜெஃப் கூறினார். ஆனால், அமேசான் புத்தக விற்பனையில் மாபெரும் சாதனை படைத்தது. இ புக்ஸ் அறிமுகமான போது, அமேசான் நிறுவனம் அந்த சந்தையையும் கைப்பற்றியது. 90களின் பிற்பகுதியில் புத்தகம் மட்டும் அல்லாமல் இசை டிவிடிகள் விற்பனையிலும் அமேசான் நிறுவனம் இறங்கியது. அதன் பின்னால், எலெக்ட்ரானிக் டாய்ஸ் மற்றும் சமையலறை பொருட்கள் விற்பனையிலும் இறங்கியது. அதன்பின் பத்தாண்டுகளில், அமேசான். காம் இணைய விற்பனையில் மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்தது.

அமேசான் பிரைம் 

2005 ஆம் ஆண்டு அமேசான் நிறுவனம் பிரைம் சேவையை தொடங்கியது. ஏறத்தாழ இந்த நிறுவனத்திற்கு இப்போது 10 கோடி சந்தாதாரர்கள் இருக்கிறார்கள். சர்வதேச அளவில் பணம் கொடுத்து சந்தாதாரர்கள் இணையும் இரண்டாவது பெரிய நிறுவனம் அமேசான். 2007 ஆம் ஆண்டு கிண்டில் என்னும் இ புக் ரீடரை அறிமுகம் செய்தது அமேசான் நிறுவனம் அதிலும் வெற்றிகொடி நாட்டியது அந்நிறுவனம். அதன் பின் எக்கோ ஸ்பீக்கர் அலெக்ஸாவை அறிமுகம் செய்தது. இப்போது அமெரிக்காவில் ஸ்மார்ட் டிவைசஸ் விற்பனையில் மூன்றாவது இடத்தில் உள்ளது அமேசான் நிறுவனம். வளர்ச்சியை மட்டுமல்ல வீழ்ச்சியையும் கண்டுள்ளது இந்த நிறுவனம்.

2018ம் ஆண்டு பிற்பகுதியில், இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு வீழ்ச்சியை கண்டது. ஆனால், அதிலிருந்து மீண்டது. இணைய விற்பனையில் உச்சியை தொட்ட இந்த நிறுவனம், நேரடி விற்பனைக்காக கடைகளையும் திறக்க திட்டமிட்டுள்ளது.

(நன்றி: பிபிசி தமிழ்)
 

Add new comment

2 + 4 =