Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
மேற்கிந்திய அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரை வென்றது இந்தியா
மேற்கிந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லக்னோவில் எகனா மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற மேற்கிந்திய அணி முதலில் பந்துவீச தேர்வு செய்தது. எனவே, முதலில் பேட்டிங்கை துவக்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும் களம் இறங்கினர்.
முதலில் நிதானமாக ரன்களை சேகரித்து இந்த ஜோடி படிப்படியாக வேகத்தை அதிகரித்தது. குறிப்பாக ரோகித் சர்மாவின் ஆட்டத்தின் அனல் பறந்தது. பவுண்டரிகளும் சிக்சரும் ரோகித் சர்மா அசத்தினார். விக்கெட் இழப்பின்றி இந்திய அணி 100 ரன்களை கடந்தது. 13.6 ஓவர்களில் 123 ரன்களை இந்திய அணி எட்டியிருந்த போது, ஷிகர் தவான் 43 ரன்களில் (41 பந்துகள்) வெளியேறினார்.
அபாரமாக விளையாடிய ரோகித் சர்மா, கடைசி ஓவரில் சதம் அடித்து அசத்தினார். சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் ரோகித் சர்மா அடிக்கும் 4-வது சதம் இதுவாகும். 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் இந்தியா சேர்த்தது. 196 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய மேற்கிந்திய அணி வீரர்கள் சீரான இடைவெளியில் வெளியேறினர்.
மேற்கிந்திய மீவுகள் கிரிக்கெட் அணியில் அதிகபட்சமாக பிராவோ 23 ரன்கள் எடுத்தார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்று 20 ஓவர் தொடரையும் கைபற்றியுள்ளது. இன்னும் ஒரு 20 ஓவர் போட்டி நடைபெறவுள்ளது.
Add new comment