Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
மீண்டும் மரணதண்டனை சட்டத்தை அமலாக்க தயார்நிலையில் இலங்கை
இலங்கையில் அமலில் இருக்கும் மரண தண்டனை தடைச் சட்டத்தை இரத்து செய்து, போதைப்பொருள் குற்றவாளிகளாகத் தீர்ப்பிடப்பட்டுள்ள நான்கு பேருக்கு, மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு, அரசுத்தலைவர் மைத்திரிபால ஸ்ரீசேனா அவர்கள் தீர்மானித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், மனித உரிமை ஆர்வலர்கள்.
“நீதியை செயல்படுத்து, மக்களை அல்ல”; “மரண தண்டனை, குற்றங்களை அல்ல, மக்களைக் கொலை செய்கின்றது” போன்ற விளம்பரத் தட்டிகளை வைத்துக்கொண்டு, ஜூன் 29, கடந்த சனிக்கிழமையன்று, மனித உரிமை ஆர்வலர்கள், இலங்கையின் பெரிய, வெளிக்காடா சிறையின் முன்பாகப் போராட்டம் நடத்தினர்.
அரசுத்தலைவர் மைத்திரிபால ஸ்ரீசேனா அவர்கள், தனது தீர்மானத்தை திரும்பப் பெற வேண்டுமென்றும், அவர்கள் குரல் எழுப்பினர்.
அரசுத்தலைவர் மைத்திரிபால ஸ்ரீசேனா அவர்கள், மரண தண்டனையை மீண்டும் அமலுக்குக் கொண்டுவரும் சட்டத்திற்கு அனுமதியளித்து, ஜூன் 26 ஆம் தேதி கையெழுத்திட்டார்.
மேலும், இலங்கையில், போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளவர்கள், ஏறத்தாழ மூன்று இலட்சமாக அதிகரித்திருப்பது, கடும் தேசிய பிரச்சனையாகவுள்ளவேளை, இதனை ஒழிப்பது அத்தியாவசியத் தேவை என்று, அரசுத்தலைவர் மைத்திரிபால ஸ்ரீசேனா அவர்கள், கூறியுள்ளார்.
இதற்கிடையே, இலங்கையில் 1976 ஆம் ஆண்டிற்குப் பின்னர், இதுவரை மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(UCAN, வத்திக்கான் நியூஸ்)
Add new comment