மக்கள் மீண்டும் தங்கள் உணர்வுக்குத் திரும்பினார்கள்


Dr. Simon Hercules

மருத்துவர் திரு. சைமன் ஹெர்குலஸ் அவர்களின் திடீர் மறைவு மருத்துவ வரலாற்றில் ஒரு மறக்கமுடியாத தாக்கத்தை விட்டுச் சென்றிருக்கின்றது, நம்முடைய இதயத்தையும், உணர்வுகளையும் அசைத்துப் பார்த்திருக்கின்றது, நம்முடைய சுயநலச் செயல்களுக்கு ஒரு நல்ல பாடத்தையும் விட்டுச் சென்றிருக்கின்றது. 

யார் இந்த மருத்துவர் திரு. சைமன் ஹெர்குலஸ்?

58 வயது நிரம்பிய திரு. சைமன் அவர்கள் ஒரு நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிருபுணர். சென்னை கீழ்பாக்கம் விண்ணேற்ற ஆண்டவர் ஆலயப் பங்கினைச் சார்ந்தவர். இவருடைய மனைவி திருமதி ஆனந்தி சைமன். இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் இருக்கின்றது.

நியு ஹோப் மருத்துவமனை

சென்னை கீழ்பாக்கத்திலுள்ள இவருடைய நியு ஹோப் மருத்துவமனை மூளை மற்றும் முதுகெலும்பு நோய்களுக்கு சிறப்பு மருத்துவம் அளித்து வருகின்றது. மருத்துவமனைக்கு வருகின்ற ஒவ்வொரு நோயாளிக்கும் குழுவாக இணைந்து மருத்துவம் செய்வதுதான் இவர்கள் சிறப்பு. ஒவ்வொரு நோயாளிக்கும் ஒரு முழுமையான மருத்துவ உதவி செய்யவேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு  நோயாளிக்கு கொடுக்கப்படவேண்டிய மருத்துவம் பற்றி மருத்துவக் குழுவில் பேசியபின்பு  மருத்துவம் அளிக்கப்படுகின்றது. 

1992 ஆம் ஆண்டு ஜுலை 1 ஆம் தேதி டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் இவருக்கு சிறந்த மருத்துவர் பட்டத்தைக் கொடுத்துக் கவுரவித்தது. என்.ஏ.பி.எச் இந்த மருத்துவமனைக்கு அதன் தரம், சேவை, எதிர்நோக்கிற்கான சான்றிதழை அளித்துள்ளது.

இவரைப் பற்றி மருத்துவர் திரு. பிரதீப் குமார் அவர்கள் திரு. சைமன் அவர்களுடன் அவருடைய அனுபத்தைச் சொல்கின்றபோது: மருத்துவர் சைமன் அவர்கள் ஒரு கடின உழைப்பாளி, இரக்கக் குணம் உடையவர் எல்லாவற்றிற்கும் மேலாக இவர் ஒரு நல்ல மனிதர். நோயாளிகளுக்காக இருந்தவர். ஒருபோதும் நோயாளிகளை பார்க்கமாட்டேன் என்று சொன்னதில்லை. ஒவ்வொரு நோயாளியையும் தன்னுடைய உறவுகளாக கவனிப்பார். இவர் யாருடனும் பகையாக இருந்ததில்லை.

மருத்துவர் திரு. பாக்கியராஜ் அவர்கள், திரு. சைமன் அவர்கள் சிறந்த மருத்துவர், அவர் அதை தன் வாழ்வில் நிருபித்துக்காட்டினார் என்று சொல்கின்றபோது அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது.

திரு. சைமன் அவர்கள் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு மருத்துவம் அளித்தபோது கொரோனா தொற்றுநோய்க்கு ஆளானார். அவர் சென்னையில் அப்போலோ மருத்துவமனையில் 15 நாட்கள் சிகிச்சைக்குப்பின் 19 ஏப்ரல் 2020 அன்று இரவு இறந்தார். கொரோனா தொற்று அவருடைய மகளையும் பாதித்துள்ளது. எனவே அவரால் அவருடைய தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கு கொள்ள இயலவில்லை. ஏன், யாராலும் அவருடைய இறுதிச்சடங்கில் பங்குகொள்ள முடியவில்லை. ஏனென்றால் அவருக்கு இறுதிச்சடங்கு என்ற ஒன்று நடைபெறவே இல்லை. என்ன நடந்தது?

எங்கே அவருடைய உடல் புதைக்கப்பட்டது?

அவருடைய உடலானது சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வேலங்காடு இடுகாட்டில் புதைக்கப்பட்டது. அவருடைய குடும்பத்தினர் அவருடைய உடலை கீழ்பாக்கம் ஆலய கல்லறைத்தோட்டத்தில் அடக்கம் செய்ய விரும்பினார்கள். ஆனால் கீழ்பாக்கத்தில் புதைப்பதால் பிரச்சனைகள் வரலாம் என்று அவர்கள் நினைத்து அவருடைய உடலை அன்றிரவே வேலங்காடு இடுகாட்டில் புதைக்க முயன்றார்கள், இறுதியில் புதைத்தார்கள். 

திரு. சைமன் அவர்களின் இறப்பு உலக மக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. மாறாக அவருடைய உடல் புதைக்கப்பட்ட நிலைதான் உலகையே வருத்தத்தில் ஆழ்த்தியது. மொத்த நிகழ்வையும் அந்த இடத்திலிருந்த மருத்துவர் பிரதீப் அவர்கள் இந்த நிலை நம் எதிரிக்குக்கூட வரக்கூடாது என்று ஒரே வார்த்தையில் சொல்லிமுடித்தார். 

என்ன நடந்தது?

சமூக ஊடகங்களும் தொலைக்காட்சிகளும் விலைக்கு வாங்கப்பட்டு, மனிதனின் உணர்வுகளை ஏலமிட்டு சம்பாதிக்கத் துணியும் இக்காலக்கட்டத்தில், சமூக ஊடகங்கள் கீழ்பாக்கம் ஆலயத்தில் மையம் கொண்டு, ஆலய நிர்வாகம் அவருடைய உடலை அடக்கம் செய்ய அனுமதிக்கவில்லை என்ற காழ்புணர்ச்சியையும், வெறுப்புப் பிரச்சாரங்களையும், ஆதாரமற்ற செய்திகளையும் கையிலெடுத்தது சுவராஸ்யமாக அரங்கேற்றியது. ஆனால் என்ன நடந்தது என்ற உண்மையை சரியாக மக்களுக்கு எடுத்துச் செல்ல மறந்துவிட்டன.

மருத்துவர் பிரதீப் கூறுகையில்: நான் மக்களை குற்றப்படுத்தவில்லை. ஏனென்றால் தவறான செய்திகளால் மக்கள் வழிநடத்தப்பட்டிருக்கிறார்கள். மக்களுக்கு கொரோனா பற்றிய சரியான விழிப்புணர்வு கொடுக்கப்படவில்லை. மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் போராடினார்கள் காரணம் இறந்தவர்கள் உடலின் வழியாக கொரோனா நோய் பரவும் என்று மக்கள் நம்பினார்கள். ஆதலால் அவர்கள் திரு. சைமன் அவர்களின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்கவில்லை. எங்களுடைய பாதுகாப்பு உடைகளைப் பார்த்து மக்கள் அச்சமடைந்தனர். நாங்கள் சென்றபோது கற்களை எங்கள் மேலும், ஆம்புலன்ஸ் மேலும் எறிய ஆரம்பித்தார்கள். நாங்கள் உயிருக்காக பயந்து ஓடினோhம். எங்கள் நினைவுக்கு வரமுடியவில்லை.

மருத்துவர் பாக்கியராஜ் சொல்கின்றபோது, நாங்கள் தாக்கப்பட்டோம். சுகாதார அதிகாரி மிகவும் தாக்கப்பட்டார். கடைசியாக காவல்துறையினரின் பாதுகாப்புடன் அவருடைய உடலானது வேலங்காடு இடுகாட்டில் புதைக்கப்பட்டது. அப்பொழுது அவருடைய குடும்பம் அங்கு இருக்கமுடியவில்லை.

இதனை சுகாதார அமைச்சர் திரு. பாஸ்கரன் அவர்கள் கண்டித்து,  இத்தகைய நிகழ்வுகள் வரும் காலங்களில் நிகழக்கூடாது என்று கூறினார்கள்.

இறந்த உடல்களின் வழியாக கொரோனா தொற்றுநோய் பரவுமா?

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் அடிப்படையில் கொரோனாவினால் இறந்தவர்களை அடக்கம் செய்யும்போது எந்த முறையில் அவர்கள் உடலை கையாள்வது, அடக்கம் செய்வது, என்ன சடங்குமுறைகளை பின்பற்றலாம் என்பதையெல்லாம் அந்த வழிகாட்டுதலில் குறிப்பிட்டவாறு பின்பற்றினால் எந்த பிரச்சனையும் இருக்காது. 

அவருடைய மனைவி ஆனந்தி, உலக சுகாதார அமைப்பின் அறிவிப்பின்படி இறந்தவரின் உடலில்  கொரோனா நோய் கிருமியானது 3 மணிநேரமே இருக்கும் என்று கூறினார். அவர் அவருடைய கணவனின் விருப்பப்படி அவருடைய உடலை வேலங்காட்டிலிருந்து, கீழ்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய முதலமைச்சர் அனுமதி கேட்டார். ஆனால் பாதுகாப்பின்மை காரணமாக அவருடைய கோரிக்கையை நிறைவேற்றமுடியாது என்று சென்னை மாநகராட்சி அறிவித்தது.

சென்னை-மயிலை பேராயரின் அறிக்கை

சென்னை மயிலை பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோனிசாமி அவர்கள் மருத்துவர் திரு. சைமன் அவர்களின் இறப்பை பற்றியும், அவருடைய அடக்கம் தொடர்பான உண்மையான தகவல்களையும், சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியை கண்டித்தும் 22 ஏப்ரல் 2020 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டார்கள். 

திரு. சைமன் இறப்பானது உறுதிசெய்யப்பட்டபோது, அவருடைய உறவினர் திரு. சுசில் ஆதாம் அவர்கள் கீழ்பாக்கம் பங்குத்தந்தையை 19 ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு சந்தித்தார்கள். 20 ஆம் தேதி கீழ்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்வதற்கான எழுத்துப்பூர்வமான கடித்தத்தைப் பங்குத் தந்தையிடமிருந்து அவர் பெற்றுக்கொண்டார். திரு. சைமன் அவர்கள் கொரோனாவினால் இறந்ததால் அப்பொழுது அவருடைய உடல் சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தது. 

இதற்கிடையில் சென்னை மாநகராட்சி நிர்வாகம் அவருடைய உடலை அன்றே கீழ்பாக்கம் மாநகராட்சி கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்வதென முடிவுசெய்தது. அதேவேளையில் திரு. சைமனின் உடலானது கீழ்பாக்கத்தில் அடக்கம் செய்யப்பட இருக்கும் செய்தி எல்லா இடங்களுக்கும் பரவியது.  கீழ்பாக்கம் மாநகராட்சி கல்லறையைச் சுற்றியுள்ளவர்கள் இதனால் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை. எனவே அவரின் உடலை வேலங்காடு இடுகாட்டில் புதைக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவுசெய்தனர். ஆனால் கீழ்பாக்கம் ஆலய நிர்வாகம் அனுமதிக்காததால்தான் அவரின் உடல் வேலங்காட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது என்ற தவறான செய்தியும் பரப்பப்பட்டது. 

வேலங்காடு இடுகாட்டிற்கு அவருடைய உடல் கொண்டு செல்லப்பட்டபோது, மருத்துவர், சுகாதார அதிகாரி, ஆம்புலன்ஸ் தாக்கப்பட்டது. எனவே அவர்கள் திரும்பி வந்துவிட்டனர். பின்னர் போலிஸ் பாதுகாப்புடன் அவருடைய உடல் புதைக்கப்பட்டது. அப்பொழுது அவருடைய குடும்பத்தினர் அங்கு இல்லை.  

மருத்துவர்கள் தங்கள் குடும்பத்தைப் பற்றி கவலைப்படாமல் எந்த பாகுபாடின்றி மனிதநேய அடிப்படையில் இந்த நெருக்கடியான சூழ்நிலையில் உழைக்கின்றார்கள். அவர் மருத்துவர் என்பதைவிட அவரும் ஒரு மனிதர். எனவே மனித மாண்புடன் அவரை புதைப்பது நமது கடமை. இப்படிப்பட்ட நேரங்களில் நாம் மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், காவல்துறையினர் போன்றவரை மதிப்புடன் நடத்தவேண்டும். நன்றியுடன் நினைத்துப்பார்க்கவேண்டும்.

பேராயர் அவர்களும் திரு. சைமன் அவர்களின் குடும்பத்தை தொடர்புகொண்டு, அவர்களுக்கு ஆறுதல் கூறியிருக்கின்றார். திருஅவையின் உடனிருப்பை அவர்களுக்கு உறுதிப்படுத்தியிருக்கின்றார். 

மருத்துவரின் குமுறல்

மருத்துவர் திரு. பாக்கியராஜ் அவர்கள் அவருடைய பேட்டியின்போது நான் உங்களைக் கெஞ்சிக்கேட்கின்றேன். உங்களைப் போல நாங்களும் பயந்துகொண்டுதான் வேலைசெய்கின்றோம். நாங்களும் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவம் அளிக்காமல் எங்களை பாதுகாக்க நினைத்தால், உயிர்கள் இழப்பு அதிகரிக்கும். உங்கள் உறவினர்கள் நண்பர்கள் வந்தாலும் நாங்கள் தொடமுடியாது என்று சொன்னால் என்ன நிகழும். நாங்கள் உங்களுக்கு உதவி செய்யவே இருக்கின்றோம். திரு. சைமன் அவர்களின் இத்தகைய இறப்பிற்கும் அடக்கத்திற்கும் உரியவர் அல்ல. நாங்கள் எங்கள் போட்டோக்களையும், எங்களைப் பற்றிய நல்ல வார்த்தைகளையும் உங்கள் ஸ்டேட்டஸில் வைத்துக்கொள்ளச் சொல்லவில்லை, ஆனால் எங்களுக்குரிய மதிப்பையும் மாண்பையும் கொடுங்கள் என்றுதான் கேட்கின்றோம் என்றார். 

நிதானமாக சிந்திப்போம்

•    சமூக வலைதளங்கள் நினைத்தால் எதையும் செய்யமுடியும் என்ற நிலை. எனவே அவற்றை சரியாக பயன்படுத்துவோம். மக்களுக்கு விழிப்புணர்வு கொடுப்பதற்குப் பயன்படுத்துவோம். தவறாக பயன்படுத்தினால் அதனால் வருகின்ற இழப்பினை நம்மால் ஈடுசெய்யமுடியாது.

•    நம்முடைய சுயத்திற்கு, உயிருக்கு எதாவது ஆபத்துவருகின்றபோது, நாம் யாரையும் காயப்படுத்த, தூக்கி ஏறிய, கொலைசெய்யக்கூட தயாராக இருக்கின்றோம். ஏன்?

•    நமக்காக நேரடியாகவோ, மறைமுகமாகவோ பல்வேறு மக்கள் பணிசெய்துகொண்டிருக்கின்றார்கள். அவர்களை பாராட்டவில்லை என்றாலும், அவர்களுடைய பணியை சற்று அங்கிகரிப்போம். 

•    மனித மாண்பே தெய்வீகம் என்பதனை உலகுக்கு நம்முடைய செயல்களால் அறிவிப்போம்.

Add new comment

4 + 1 =