Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
பப்புவா நியூ கினியின் புதிய தமிழ் அமைச்சர்
பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவுக்கும், நியூசிலாந்துக்கும் இடைப்பட்ட நீர்ப்பரப்பில் அமைந்துள்ள 16 தீவு நாடுகளில் மிகப் பெரிய நாடாக விளங்கும் பப்புவா நியூ கினியின் மத்திய அமைச்சராக பதவியேற்கும் முதல் தமிழர் மட்டுமல்ல முதல் இந்தியரும் சசீந்திரன் முத்துவேல்தான். மத்திய அமைச்சராக ஜூன் 7 ஆம் தேதி பதவியேற்பதற்கு முன்புவரை, இவர் அந்நாட்டிலுள்ள நியூ வெஸ்ட் பிரிட்டன் மாகாணத்தின் ஆளுநராக ஆறாண்டுகளாக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டாசுக்கு பெயர்போன சிவகாசியில் பிறந்து, தமிழ்வழியில் பள்ளிக் கல்வி முடித்து, கல்லூரியில் விவசாயம் படித்த சசீந்திரன், எப்படி பப்புவா நியூ கினி எனும் தமிழர்களுக்கு பரீட்சயமற்ற நாட்டின் மத்திய அமைச்சராக உயர்ந்தார் என்பதை அவரிடமே கேட்டோம். சிவகாசியில் அச்சு தொழிலை செய்து வந்த குடும்பத்தில் பிறந்த சசீந்திரன், 10 ஆம் வகுப்புவரை தமிழ்வழிக் கல்வியில் பயின்றார். பிறகு, தனக்கு கிடைத்த உதவித் தொகையை பயன்படுத்தி ஆங்கில வழியில் மேல்நிலை கல்வியை முடித்தார்.
"நான் தமிழ்வழிக் கல்வியில் காட்டிய திறனை ஆங்கிலத்தில் வெளிப்படுத்த முடியாததால், மேல்நிலைக் கல்வியில் சிறந்த மதிப்பெண்ணை பெற முடியவில்லை. சிவகாசிக்கும் எங்களது குடும்பத்துக்கும் சம்பந்தமில்லாத விவசாயத்தில், பெரியகுளத்திலுள்ள கோவை வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு பயின்றேன்.
விவசாயத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்காததால் மலேசியாவுக்கு சென்று இரண்டாண்டுகள் பல்பொருள் அங்காடி ஒன்றில் மேலாளராக பணியாற்றினேன். அப்போது, பப்புவா நியூ கினி நாட்டில் வேலைவாய்ப்பு இருப்பதாக நண்பர்கள் தெரிவித்ததையடுத்து, 1999 இல் அந்நாட்டிலுள்ள நியூ வெஸ்ட் பிரிட்டன் எனும் மாகாணத்திற்கு சென்றேன்," என்று கூறுகிறார்.
2017 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 82.5 லட்சம் மக்கள் தொகையை கொண்ட பப்புவா நியூ கினியில் 850க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகிறது. ஆங்கிலத்தின் தாக்கம் அதிகமில்லாத இந்த நாட்டில், ஆங்கிலமும், ஜெர்மன் மொழியும் கலந்த பிஜின் எனும் மொழியே இணைப்பு மொழியாக உள்ளதாகவும், அதை மூன்றே மாதத்தில் தான் கற்றுக்கொண்டதாகவும் இவர் கூறுகிறார்.
மூன்று தமிழர்கள் மட்டுமே வாழ்ந்த நாடு
"எனக்கு மொழியைவிட மிகவும் கடினமானதாக இருந்தது உணவுதான். ஏனெனில், கிறித்தவ நாடான பப்புவா நியூ கினியில் அசைவம்தான் பிரதான உணவு. ஆனால் நானோ சைவத்தை கடைபிடிப்பவன். எப்படியோ சிரமப்பட்டு, காலத்தை கடத்திக்கொண்டிருந்த நிலையில், நான் வேலை செய்த கடையின் உரிமையாளர், கடையை விற்றுவிட்டு தனது சொந்த ஊரான சிங்கப்பூருக்கு செல்வதாக கூறி அதிர்ச்சி அளித்தார்.
தீவிர யோசனைகளுக்கு பிறகு, 2000 ஆவது ஆண்டு நானே அந்த கடையை குத்தகைக்கு ஏற்று நடத்துவதற்கு முடிவு செய்தேன். 2007ஆம் ஆண்டு பப்புவா நியூ கினியின் குடியுரிமை பெறுவதற்குள் அம்மாகாணத்தின் பல்வேறு இடங்களிலும் பல்பொருள் அங்காடியை விரிவாக்கம் செய்தேன்" என்று சசீந்தரன் தனது பப்புவா நியூ கினியின் தொடக்க கால வாழ்க்கையை விவரிக்கிறார்.
அரசியல் பிரவேசம்
2007 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை தனது தொழிலை மென்மேலும் பெருக்குவதில் கவனம் செலுத்தியதாக கூறும் சசீந்திரன், ஊரக மற்றும் போக்குவரத்து வசதியற்ற காட்டுப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேவையான பொருட்களை அவர்களது இடத்துக்கே கொண்டுசென்று விநியோகம் செய்தது அப்பகுதி மக்களிடையே நற்பெயரை ஏற்படுத்தி தந்ததாக கூறுகிறார்.
"உள்ளூர் மக்கள் பேசும் மொழி மட்டுமின்றி அவர்களது வாழ்க்கைப்போக்கையும் நான் நன்றாக புரிந்துக்கொண்டு அதற்கேற்றவாறு செயலாற்ற ஆரம்பித்தேன். 2007 ஆம் ஆண்டே எனக்கு அந்நாட்டு குடியுரிமையை பெற்றிருந்தாலும், அதைவிட முக்கியமான ஒன்றான மக்களின் ஆதரவை 2010 ஆம் ஆண்டு பெற்றேன். அதாவது, 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் உள்ளூர் பழங்குடி மக்கள் என்னை அவர்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டு பாரம்பரிய முறைப்படி விழா நடத்தினர்.
அதே சூழ்நிலையில், எனது தொழில் வளர்ச்சிக்கு வித்திட்ட பப்புவா நியூ கினி மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்ததால், 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு நியூ வெஸ்ட் பிரிட்டன் மாகாணத்தின் ஆளுநராக பதவியேற்றேன்" என்று தனது அரசியல் பிரவேசத்தை விவரிக்கிறார் சசீந்திரன் முத்துவேல்.
இந்தியாவை போன்று பப்புவா நியூ கினியில் மாகாணத்தின் ஆளுநரை மத்திய அரசு நியமிப்பதில்லை. தங்களது ஆளுநரை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கின்றனர். அந்த வகையில், 2012 ஆம் ஆண்டு நியூ வெஸ்ட் பிரிட்டன் மாகாணத்தின் ஆளுநராக பதவி ஏற்ற சசீந்திரன், அடுத்ததாக கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக ஆளுநராக தொடர்ந்த அவர், எப்படி மத்திய அமைச்சரானார் என்று கேட்டோம்.
"எண்ணெய், எரிவாயு போன்ற இயற்கை வளங்களும், நீண்ட கடல் பரப்பு, வணிகமயக்கப்படாத சுற்றுலா இடங்கள் மட்டுமின்றி பாரம்பரிய விவசாயத்தையும் 850க்கும் மேற்பட்ட மொழிகளையும் கொண்ட பப்புவா நியூ கினி நாட்டில் ஊழல் என்பது மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் நாட்டில் நிகழ்ந்த அரசியல் மாற்றத்தின் காரணமாக ஜேம்ஸ் மாராப்பே தலைமையில் புதிய அணி உருவாக்கப்பட்டு அவர் பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில், மத்திய அரசின் அமைச்சரவையில் பங்கேற்பதற்கு எனக்கு கடந்த மாதம் அழைப்பு விடுக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நான் கடந்த ஏழாம் தேதி பப்புவா நியூ கினியின் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் முதலீட்டு அமைச்சகத்தின் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டேன்," என்று பெருமையுடன் கூறுகிறார்.
'தமிழக மக்களின் நிலைப்பாடு மாற வேண்டும்'
"வேறொரு நாட்டை சேர்ந்த என்னை பப்புவா நியூ கினி மக்கள் ஏற்றுக்கொண்டதற்கான காரணம் ஒன்றல்ல, இரண்டல்ல. நான் அவர்களது மொழி, கலாசாரம், பழக்கவழக்கங்கள் போன்றவற்றை ஏற்றுக்கொண்டு என்னாலான சேவையை செய்தது உள்பட பல்வேறு காரணங்களை மையப்படுத்தியே மக்கள் என்னை தேர்ந்தெடுத்துள்ளார்கள்.
இதேபோன்று, தமிழக மக்களும், காலங்காலமாக கட்சியை மையப்படுத்தி வாக்களிப்பதை விடுத்து, தங்களுக்கான பிரதிநிதி குறித்து நன்றாக தெரிந்துகொண்டு வாக்களிக்க வேண்டும். இதுவே நான் தமிழகத்தில் இருந்திருந்தால் இந்நிலைக்கு வந்திருக்க முடியாது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்," என்று சசீந்திரன் கூறுகிறார்.
பப்புவா நியூ கினியின் நாடாளுமன்ற உறுப்பினராக 36 ஆண்டுகள் இருந்த சர் பீட்டர் லுஸ்ஸுடன் சசீந்திரன் முத்துவேல். திருநெல்வேலியை சேர்ந்தவரை 2000ஆவது ஆண்டு திருமணம் செய்து கொண்ட சசீந்திரனுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தாங்கள் எப்போதுமே வீட்டில் தமிழ் மொழியில் பேசுவதையே வழக்கமாக கொண்டுள்ளதாக இவர் கூறுகிறார்.
"நான் பப்புவா கினிக்கு வந்தபோது, ஒட்டுமொத்த நாட்டிலும் பத்துக்கும் குறைவான தமிழர்களே இருந்தனர். ஆனால், தற்போது தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மற்ற நாடுகள் போலன்றி தொழிற்கலை தெரிந்தால் மட்டும் பப்புவா நியூ கினிக்கு வந்துவிட முடியாது. குறைந்தது ஒரு பட்டப்படிப்பாவது முடித்தவர்கள், மேலாளர், பேராசிரியர் போன்ற வேலைகளுக்கு இங்கே வரலாம்.
சீனாவின் ஆதிக்கம் எங்களது நாட்டிலும், பிராந்தியத்திலும் அதிகரித்து வருவதை இந்தியா விரும்பவில்லை. எனவே, இந்திய அரசு நிறைய முதலீடுகளை பப்புவா நியூ கினியில் மேற்கொள்வதற்கு ஆர்வம் காண்பித்து வருகிறது. அதே வேலையில், தமிழகத்துக்கும், பப்புவா நியூ கினிக்கும் இடையே கலாசார ரீதியிலான உறவை ஏற்படுத்துவதற்கு நான் முயற்சிகளை எடுத்து வருகிறேன்" என்று சசீந்திரன் கூறுகிறார். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு வழங்கப்படும் 'பிரவாசி பாரதிய சம்மன்' விருதுகள் உள்பட பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் விருதுகளை இவர் பெற்றுள்ளார்.
மோசமான நிலையில் இருக்கும் பப்புவா நியூ கினியின் பொருளாதார நிலையை சரிசெய்வதே தன் முன் இருக்கும் மிகப் பெரிய சவால் என்று சசீந்தரன் கூறுகிறார். "பல்வேறு நாட்டு அரசுகளிடமிருந்து பெற்ற கடன் தொகை பல்கி பெருகி உள்ளது. அதே சூழ்நிலையில், நாட்டின் வளர்ச்சிக்கு உதவ விரும்பும் நாடுகளிடமிருந்து நிதியுதவிகளை பெறுவதற்கு நீண்ட காலதாமதமும் நிலவுகிறது. இவற்றையெல்லாம் சரிசெய்வதற்கு, அரசின் பலமாக விளங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் குறிப்பிட்ட அளவு தனியார் முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள உள்ளேன்.
அதுமட்டுமின்றி, ஏகப்பட்ட வாய்ப்புகள் இருந்தும், கட்டமைக்கப்படாத நாட்டின் சுற்றுலாத்துறையை எழுப்புவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மேலும், மக்கள் விரும்பும் வகையில், ஊழல் இல்லா அரசை நடத்துவோம்," என்று உறுதியளிக்கிறார் சசீந்திரன் முத்துவேல்.
(நன்றி: பிபிசி நியூஸ்)
Add new comment