Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
நெகிழி மாசுபாட்டை தடுக்க புதிய வழி
ஒரு காலத்தில் “கழிப்பறை கிண்ணம்”என்ற புனைப்பெயருடன் அழைக்கப்பட்ட, பிலிப்பீன்ஸ் நாட்டின் மனிலா வளைகுடா கடற்கரை, அதுதானா என வியக்கும் அளவுக்கு தற்போது அவ்வளவு சுத்தமாக இருக்கிறதாம். இந்த மாற்றத்தைப் பார்த்து அப்பகுதி மக்களே ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றார்களாம். இவ்வாண்டு சனவரி 27ம் தேதி, ஐந்தாயிரம் தன்னார்வலர்கள் இணைந்து அந்தக் கடற்கரையில் குவிந்திருந்த குப்பைகளை அகற்றும் பணிகளைத் தொடங்கினர். தற்போது அந்தக் கடற்கரையில் 45 டன்களுக்கு அதிகமான குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.
இதற்கு முதல் காரணம், 2018ம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில், புரூக்ளினை மையமாகக் கொண்ட பௌண்ட்டீஸ் என்ற வலைத்தள அமைப்பு, மனிலா வளைகுடா பகுதியின் ஒரு சிறு குழுவினருக்கு, பெரும்பாலும் மீனவ மக்களுக்கு, ஒரு சிறிய டிஜிட்டல் தொகையைக் கொடுத்து, இரண்டே நாள்களில் மூன்று டன்கள் குப்பைகளை அகற்றச் செய்தது. ஒவ்வொரு குப்பைக் குழியை சுத்தம் செய்வதற்கு, டிஜிட்டல் பணம் வழங்கப்பட்டது. இந்த பணத்தை வைத்து குறிப்பிட்ட கடைகளில் மக்கள் பொருள்கள் வாங்கலாம்.
இந்த முறையில் ஆர்வம்கொண்ட பிலிப்பீன்ஸ் மீனவர்கள், டிஜிட்டல் முறையில் சிறிய தொகையைப் பெற்றுக்கொண்டு, மனிலா வளைகுடா கடற்கரையைச் சுத்தம் செய்துள்ளனர். இந்த வலைத்தள அமைப்பினர், இந்த முறையின் வழியாக, பெருங்கடல் மாசுபாட்டைக் குறைப்பதற்கு முயற்சித்து வருகின்றனர்.
அதேபோல், 2018 ஆம் ஆண்டு செப்டம்பரில், வான்கூவர் நகரை மையமாக வைத்து செயல்படும் ப்ளாக்சைன் என்ற நிறுவனம், பிலிப்பீன்ஸ் நாட்டின், லுசோன் பெரிய தீவின் தென்பகுதியிலுள்ள நாகா நகரில், டிஜிட்டல் பணம் கொடுத்து, மறுசுழற்சி செய்யும் பொருள்களை வர்த்தகம் செய்ய உதவியுள்ளது.
இதற்கிடையே பெருங்கடல்களில் குவிந்திருக்கும் நெகிழி குப்பைகளில் ஏறத்தாழ எண்பது விழுக்காடு, கடும் வறுமை நிலவும் வளரும் நாடுகளிலிருந்து கொட்டப்பட்டவை என்று, ஐபிம் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது என பிபிசி ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.
(நன்றி: வத்திக்கான் நியூஸ்)
Add new comment