கொரியாவில் அமைதி ஏற்படும் நம்பிக்கை 


The New York Times

இரு கொரிய நாடுகளுக்கும் எல்லையிலுள்ள பன்முஞ்சோம் என்ற இடத்தில், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்களும், வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் அவர்களும் சந்தித்திருப்பதையொட்டி, கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளனர், கொரிய கத்தோலிக்கர்.

இவ்விரு தலைவர்களின் சந்திப்பு, கொரிய கத்தோலிக்கருக்கு மிகுந்த மகிழ்வையும், நம்பிக்கையையும் அளித்துள்ளது என்றுரைத்த, கொரிய ஆயர் பேரவையின் சமுதாய பணிக்குழுத் தலைவர், ஆயர் லாசருஸ்  யு  ஹீயுங் -சிக் அவர்கள், இச்சந்திப்பு குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஞாயிறு மூவேளை செப உரையில் குறிப்பிட்டதுபோல, இது, சந்திப்பு கலாச்சாரத்தின் அழகு என்று தெரிவித்தார்.

இரு கொரிய நாடுகளுக்கிடையே போர் தொடங்கியதன் 69ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, பன்முஞ்சோம்  என்ற இடத்திற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில், ஜூன் 25ம் தேதியன்று, ஆயர் ஹீயுங் -சிக்  அவர்கள் தலைமையில், இருபதாயிரத்திற்கு அதிகமான விசுவாசிகள் கூடி செபித்தனர்.

அந்நிகழ்வில் உரையாற்றிய, ஆயர் ஹீயுங் -சிக்  அவர்கள், ஏறத்தாழ எழுபது ஆண்டுகளாக, இரு கொரிய நாடுகளின் உறவுகள், பிரிவினைகள், காழ்ப்புணர்வுகள் மற்றும் முற்சார்பு எண்ணங்களால் குறிக்கப்பட்டுள்ளன, கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவுவதற்கு, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளன என்று கூறினார்.

கொரியத் தீபகற்பத்தில் அமைதிக்காக எடுக்கப்படும் முயற்சிகளை, தூய ஆவியார் மற்றும், கொரிய மறைசாட்சிகளிடம் அர்ப்பணிப்பதாகவும், ஆயர் ஹீயுங் -சிக்  அவர்கள், ஆசியச் செய்தியிடம் கூறினார்.

(நன்றி: வத்திக்கான் நியூஸ்)

Add new comment

2 + 13 =