Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
குல்பூஷன் ஜாதவின் மரணதண்டனையை மறுபரிசீலிக்க சர்வதேச நீதிமன்றம் உத்தரவு
இந்திய உளவாளி என்ற குற்றச்சாட்டின் பேரில் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு மரண தண்டனையை விதிக்கப்பட்ட குல்பூஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சீராய்வுக்கும், மறுபரிசீலனைக்கும் உட்படுத்தவேண்டும் என்று ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விசாரணை செய்த அமர்வில் 15 பேர் மறுபரிசீலனை செய்வதற்கு ஆதரவாகவும், ஒருவர் எதிராகவும் தீர்ப்பளித்தனர்.
இந்தியா தொடர்ந்த வழக்கை விசாரிக்க சர்வதேச நீதிமன்றத்துக்கு உரிமை உள்ளது என்று முன்னதாக ஒருமனதாக தீர்மானித்தது இந்த நீதிமன்றம். தூதரக உறவுகள் தொடர்பான 1967 ஆம் ஆண்டின் வியன்னா ஒப்பந்தத்தின்கீழ் இந்த முடிவுக்கு வந்ததாக நீதிமன்றம் கூறியது. இந்தியா தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பதற்கு பாகிஸ்தான் தெரிவித்த ஆட்சேபனைகளை இந்த நீதிமன்றம் நிராகரித்தது.
அத்துடன், சர்வதேச தூதரக உறவுகள் தொடர்பான வியன்னா ஒப்பந்தத்தின் உறுப்புரை 36 இல் குறிப்பிட்டுள்ளபடி அவருக்குள்ள உரிமைகளை கைது செய்யப்பட்டவுடன் தாமதமின்றி தெரிவிக்காததன் மூலம் இந்த ஒப்பந்தத்தின் படி தங்களுக்குள்ள கடமையை ஆற்ற பாகிஸ்தான் தவறிவிட்டது என்று சர்வதேச நீதிமன்றம் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
தீர்ப்பின் இந்த அம்சத்துக்கும் அமர்வின் தலைவர் யூசூப் உள்ளிட்ட 15 பேர் ஆதரவாகவும், தாற்காலிக நீதிபதி ஜிலானி ஒருவர் மட்டும் எதிராகவும் தீர்ப்பளித்துள்ளனர். குல்பூஷன் ஜாதவை கைது செய்தது குறித்து தாமதமின்றி இந்திய தூதரக அதிகாரிகளிடம் தெரிவிக்காததன் மூலம் ஜாதவுக்கு உதவி வழங்குவதற்கும், அவரை அணுகுவதற்கும் இந்தியாவுக்கு உள்ள உரிமையை பாகிஸ்தான் பறித்துவிட்டதாகவும் இந்த நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
யார் இந்த குல்பூஷன் ஜாதவ்?
46 வயதான குல்பூஷன் ஜாதவ் மும்பையை சேர்ந்தவர். பத்தாண்டுகளுக்கு மேல் இந்திய கடற்படையில் அதிகாரியாக இருந்தவர். திருமணமாகி அவருக்கு குழந்தைகளும் உள்ளன. சொந்தமாக தொழில் தொடங்க, கடற்படையில் இருந்து ஜாதவ் விலகியதாகவும், இரானில் உள்ள சாபஹார் துறைமுகத்தில் பணியாற்றி வந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். ஆனால், உளவு பார்த்த குற்றச்சாட்டில் 2016 ஆம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டார். 2016 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி இவர் கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் கூறுகிறது,
பாகிஸ்தானின் பதற்றமான பகுதியான பலூசிஸ்தானில், உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் அவர் பலூசிஸ்தானில் கைது செய்யப்பட்டதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பலூசிஸ்தானில் தனிநாடு கோரி பிரிவினைவாதக் கிளர்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதன் பின்னணியில் இருப்பது இந்தியா என பாகிஸ்தான் குற்றஞ்சாட்டுகிறது.
இந்நிலையில், "பாகிஸ்தான் ராணுவச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்ட உளவாளிக்கு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது" என்று பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ செய்தித் தொடர்பாளர் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி வெளியிட்ட ஓர் அறி்க்கையில் தெரிவித்தார். ஜாதவ் எப்போது தூக்கிலிடப்படுவார் என்பது அறிவிக்கப்படவில்லை.
கைது செய்யப்பட்டவுடன், பாகிஸ்தான் வெளியிட்ட காணொளியில், குல்பூஷன் ஜாதவ் உளவு பார்த்ததை அவர் ஒப்புக்கொண்டதாகத் கூறுவதைப் போல் இருந்தது. குல்பூஷன் ஜாதவ் இந்திய குடிமகன் என்று கூறிய இந்திய அரசு, அவர் உளவு பார்த்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது. அவர் பலூசிஸ்தானில் கைது செய்யப்படவில்லை என்றும், இரானில் இருந்து கடத்தப்பட்டார் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை, கேலிக்கூத்தானது என்று இந்தியா கண்டனம் தெரிவித்தது. "ஜாதவ், 2016 ஆம் ஆண்டு இரானிலிருந்து கடத்தப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் பாகிஸ்தானில் இருப்பது தொடர்பாக எந்த நேரத்திலும் வெளிப்படையாக விளக்கமளிக்கப்படவில்லை" என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது.
ஜாதவ் - குடும்பத்தினர் சந்திப்பு
ஜாதவுடன் ராஜாங்க ரீதியான தொடர்புகள் மேற்கொள்ள, 13 முறை கோரிக்கை வைக்கப்பட்ட போதிலும் பாகிஸ்தான் அதற்கு அனுமதியளிக்கவில்லை என்றும், அவர் மீது விசாரணை நடத்தப்படும் தகவலும் எந்த நேரத்திலும் வெளியிடப்படவில்லை என்றும் இந்தியா தெரிவித்தது. எனவே, தற்போது விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை நிறைவேற்றினால் அதை திட்டமிடப்பட்ட படுகொலையாகவே இந்தியா கருதும் என்றும் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
சர்வதேச நீதிமன்றம் தடை
குல்பூஷன் ஜாதவின் வழக்கு விசாரணையில் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடைபெறவில்லை என்று இந்தியா சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டது. இதனை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், குல்பூஷன் ஜாதவுக்கு மரண தண்டனை நிறைவேற்ற இடைக்கால தடை விதித்தது. இந்த நீதிமன்றத்தில் மேலும் வலிமையான வாதங்களை வைத்து குல்பூஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய முயற்சிகளை மேற்கொள்வோம் என அப்போதைய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாகிஸ்தான் அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு குல்பூஷன் ஜாதவின் குடும்பத்தினர் அவரை சந்திப்பதற்கு இந்தியா நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால், இத்தகைய சந்திப்பை, பாகிஸ்தான் பரப்புரை கருவியாக பயன்படுத்திக்கொண்டது என்று சுஷ்மா ஸ்வராஜ் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். சர்வதேச நீதிமன்றம் வழங்குகின்ற தீர்ப்பை ஏற்றுகொள்ள வேண்டும் என்பது கடமை. ஆனால், இது வழங்கும் தீர்ப்புகள் உறுப்பு நாடுகளால் எல்லா நேரங்களிலும் ஏற்றுகொள்ளப்படவில்லை.
(நன்றி : பிபிசி நியூஸ்)
Add new comment