கர்நாடக இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு


Women to vote

கர்நாடக மாநில இடைத்தேர்தலில், 14 ஆண்டுகளுக்கு பிறகு பெல்லாரி நாடாளுமன்றதொகுதியை பாரதிய ஜனதா கட்சி இழந்து படுதோல்வி அடைந்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி, ஷிவமோகா, மாண்டியா ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளுக்கும், ராம் நகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 3ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதிகளில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியாக போட்டியிட்டன. இந்தக் கூட்டணிக்கு எதிராக பாஜக மட்டுமே போட்டியிட்டது.

செவ்வாய்க்கிழமை பெல்லாரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஎஸ் உக்ரப்பா, தனக்கு எதிராக போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பாஜக வேட்பாளருமான ஜே.ஷாந்தாவை விட சுமார் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். பெல்லாரி தொகுதியில் 2004-க்குப் பிறகு, பாஜக முதல் முறையாக தோல்வியடைந்திருப்பது தேசிய அரசியலில் அக்கட்சிக்கு கிடைத்துள்ள பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. மாண்டியா தொகுதியில் மத சார்பற்ற ஜனதா தளத்தின் வேட்பாளர் சிவராம கௌடா வென்றுள்ளார்.

ஷிமோகா தொகுதியில் மட்டும் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் பி.எஸ்.ராகவேந்திரா குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இதே தொகுதியில் எடியூரப்பா 3.63 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருந்தார். ராம் நகர் சட்டப்பேரவை தொகுதியை மத சார்பற்ற ஜனதா தளத்தின் சார்பாக போட்டியிட்ட கர்நாடக மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சர் குமாரசுவாமியின் மனைவியான அனிதா வென்றுள்ளார். ஜமகண்டி சட்டப்பேரவை தொகுதியை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆனந்த் சித்து நாம கொளடா வென்றுள்ளார். 

Add new comment

4 + 0 =