இணைந்து பணியாற்ற அழைப்பு


உலகம் முழுவதிலும் கொரோனா நோயின் தாக்கம் மிகவும் அதிகரித்து கொண்டிருக்கும் வேளையில், நோயாளிகளை குணப்படுத்துவதில் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரின் சேவை இன்றியமையாத ஒன்றாய் விளங்குகிறது. 

இந்த நிலையில், சென்னையில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வரும் இந்த கால கட்டத்தில், அந்நோயாளிகளுக்கு பணியாற்றுவதற்காக சென்னை - மயிலை உயர்மறைமாவட்டம் உருவாக்கியுள்ள நலவாழ்வு பணியாளர் குழுவிற்கு, செவிலியர் பணிக்கென பயிற்சி பெற்ற அருட்சகோதரிகளை தந்து உதவுமாறு துறவு சபைகளின் தலைவர்கள் மற்றும் மாநிலத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். 

சென்னை -  மயிலை பேராயர், ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களின் வழிகாட்டுதலில், உயர்மறைமாவட்டத்தின் தலைமையகத்திலுள்ள ஒரு சில அருட்பணியாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களைக்கொண்டு இந்த பணிக்குழு உருவாக்கப்பட்டுள்ளது என்றும், அக்குழுவில் இணைந்து பணியாற்ற ஆர்வமுள்ள செவிலியர் பணிக்கென பயிற்சிபெற்ற அருட்சகோதரிகள் தேவைப்படுகின்றனர் என்றும் சென்னை உயர்மறைமாவட்டத்தின் துறவிகள் அமைப்பின் தலைவர், சலேசிய சபையின், அருட்பணியாளர் தேவா ஜோ அவர்கள் கூறியுள்ளார். 

இந்த கொள்ளைநோய் உருவாக்கும் நெருக்கடி வேளைகளில், துரிதமாக செயல்பட்டு உதவும் வழிகளில் ஈடுபடவும், இக்குழு ஆராய்ந்து வருகிறது என்றும், இப்பணிக்குழுவோடு இணைந்து பணியாற்ற விரும்பும் செவிலியர்களின் பெயர்களை உடனடியாகத் தெரிவிக்குமாறும், துறவு சபைகளின் தலைவர்களை கேட்டுக்கொண்டுள்ளார், அருட்பணி தேவா ஜோ அவர்கள்.

கொரோனா தாக்கத்தின் மூன்று கட்டங்களில் எவ்வாறு செயல்படவேண்டும் என்ற வழிமுறைகளையும் குறிப்பிட்டுள்ள அருட்பணி தேவா ஜோ அவர்கள், இந்நோயினால் பாதிக்கப்படுகிறவர்களுக்குச் சிகிச்சை வழங்குவதற்குத் தயாராக இருக்குமாறு, துறவு சபைகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 
 

Add new comment

1 + 0 =