ஆகஸ்ட் 5  ஆம் தேதி வேலூர்  மக்களவை தேர்தல் 


Hindustan Times

அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின்போது ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்வதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏப்ரல் 16 ஆம் தேதி அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பு இரண்டு வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

ஒன்று இதுவரை இவ்விதமாக தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு மக்களவைத் தேர்தல் ஒன்று ரத்து செய்யப்பட்டது அதுவே முதல் முறை. தவிர, தற்போது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 543 இடங்களில் வேலூர் தொகுதிக்கு மட்டும்தான் தேர்தல் நடைபெறவில்லை.

கடந்த மார்ச் 30 ஆம் தேதியன்று, முன்னாள் தி.மு.க. அமைச்சரும் அக்கட்சியின் பொருளாளருமான துரைமுருகன் இல்லத்திலும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதில் துரைமுருகன் வீட்டிலிருந்து கணக்கில் வராத பணம் 10.5 இலட்ச ரூபாய் மீட்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்தப் பின்னணியில்தான் வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் திமுக வேட்பாளராகவும், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் அதிமுக கூட்டணி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டிருந்தனர்.

ஆனால், தேர்தல் ரத்து செய்யப்பட்டு தற்போது மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதால் புதிதாக வேட்புமனுத்தாக்கல் செய்யவேண்டியிருக்கும். இரு அணிகளிலும் அதே பழைய வேட்பாளர்கள் போட்டியிடுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

புதியதாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அட்டவணையின்படி ஜூலை 11 ஆம் தேதி வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் அறிவிக்கை வெளியிடப்படும். ஜூலை 18 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள். மறு நாள் வேட்புமனு பரிசீலிக்கப்படும். 22 ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள். ஆகஸ்ட் 9 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

(நன்றி: பிபிசி நியூஸ்)

Add new comment

7 + 10 =