Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
அதிர்ச்சி தகவல் : கஞ்சா
மேற்கு சீனாவில் உள்ள பழங்கால கல்லறைகளில் இருந்து கஞ்சா பயன்பாட்டிற்கான ஆரம்பகால ஆதாரங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். தற்போது கிடைத்துள்ள மாதிரிகளை ஆய்விற்கு உட்படுத்தியதில், இவை சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் புகைக்கப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. மதரீதியிலான சடங்குகளின் ஒரு பகுதியாக இது பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பழங்கால கல்லறைக்கு உட்பட்ட பகுதியிலுள்ள தீச்சட்டி ஒன்றில் கஞ்சா பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. கஞ்சாவில் மூளையை பாதிக்கக் கூடிய டெட்ரா-ஹைட்ரோ-கன்னாபினால் எனும் சேர்மங்கள் அதிகம் உள்ளன. இதை அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்களும் நன்கு அறிந்திருக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
கஞ்சா செடிகள், அவற்றின் எண்ணெய் விதைகள் மற்றும் நார்ச்சத்துக்காக கி.மு 4,000 முதல் கிழக்கு ஆசியாவில் பயிரிடப்படுகின்றன. மேற்கு சீனாவிலுள்ள பாமிர் மலையின் உச்சியில் அமைந்துள்ள ஜிர்சங்கால் கல்லறையில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பழங்காலத்தை சேர்ந்தவர்கள், தீச்சட்டியில் சூடான கற்களையும், கஞ்சா செடியின் இலைகளையும் போட்டு அதிலிருந்து வரும் புகையை சுவாசித்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
மலை சார்ந்த இந்தப் பகுதியில் அதிக டெட்ரா-ஹைட்ரோ-கன்னாபினால் எண்ணிக்கை கொண்ட கஞ்சா செடிகள் வளர்ந்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதுமட்டுமின்றி, குறைந்த வெப்பநிலை, ஊட்டச்சத்து அளவுகள் மற்றும் மலைசார்ந்த மற்ற காரணிகள் இவற்றின் வளர்ச்சிக்கு வித்திட்டிருக்கலாம். மேலும், காடு சார்ந்த கஞ்சா வகைகளைவிட மூளையை பாதிக்கக் கூடிய கஞ்சா செடி ரகங்களையே அதிகளவில் பயிரிட்டிருக்கக் கூடும்.
மூளையை பாதிக்கக்கூடிய பண்புகளுக்காக கஞ்சா பயன்படுத்தப்பட்டது இதுவே முதல் முறையாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இறுதிச் சடங்குகளின் போது இவை எரிக்கப்பட்டு புகை கிளப்பப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.தீச்சட்டியில் கண்ணுக்கு தெரியாத நிலையில் இருந்த சேர்மங்களை கண்டறிவதற்காக ஆராய்ச்சியாளர்கள் குரோமடோகிராபி-மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி என்ற செயல்முறையை பயன்படுத்தி கஞ்சாவின் இருப்பை உறுதி செய்துள்ளனர். தனிமைப்படுத்தப்பட்ட சேர்மங்களின் வேதியியல் அமைப்பு கஞ்சாவின் ரசாயன அமைப்புடன் சரியாக பொருந்தி இருந்ததை கண்டு விஞ்ஞானிகள் ஆச்சர்யமடைந்தனர்.
இந்த கண்டுபிடிப்பு, இதற்கு முன்னர் வடக்கு சீனாவின் சிஞ்சியாங் பிராந்தியத்திலும், ரஷ்யாவின் அல்தாய் மலைகளிலும் கிடைக்கப்பெற்ற கஞ்சா இருப்பதற்கான பிற ஆரம்பகால மாதிரிகளுடன் ஒத்துப்போகிறது.
அத்துடன், மேற்குறிப்பிட்ட கல்லறைகளிலுள்ள மனித உடல்களின் எலும்புகளை எடுத்து ஆய்விற்கு உட்படுத்தபோது, அவை அந்தந்த பகுதிகளை சேர்ந்தவர்கள் கிடையாது என்றும் தெரிய வந்துள்ளது.
"கஞ்சா செடிகள் முதலில் மத்திய கிழக்கு ஆசியாவில் பயன்படுத்தப்பட்டு, பின்பு உலகின் மற்ற பகுதிகளில் பரவி இருக்கலாம் என்ற கருத்தை ஆதரிக்கும் வகையில் இந்த ஆய்வு முடிவுகள் வந்துள்ளன," என்று கூறுகிறார் ஜெர்மனியிலுள்ள மாக்ஸ் பிளாங்க் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் நிக்கோலே போய்வின். 'சயின்ஸ் அட்வான்சஸ்' எனும் சஞ்சிகையில் இந்த ஆராய்ச்சி குறித்த முடிவுகள் வெளிவந்துள்ளன.
2500 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்டாலும், நாம் பயன்படுத்தும் விதம் சரியாக இருக்கவேண்டும் என்பதுதான் இது கற்று கொடுக்கும் பாடம் .
Add new comment