விமர்சனங்களை விலக்குவோமா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


criticism

திருவருகைக் காலத்தின் இரண்டாம் வெள்ளி - I. எசா: 48:17-19; II. திபா: 1:1-2,3,4,6; III. மத்: 11: 16-19

ஒரு பங்கிலே அருட்பணியாளர் ஒருவர் பணிசெய்து வந்தார். இளம் வயதினராய் இருந்தார். துடிப்புடன் செயல்பட்டார். பல புதிய வழிமுறைகளைக் கொண்டுவந்தார். அவ்வூரிலே இருந்த ஒருசில பழமை விரும்பும்  மனிதர்களுக்கு இவருடைய அணுகுமுறைகள் பிடிக்கவில்லை. எப்பொழுதும் குறைகூறிக்கொண்டே இருந்தனர். மற்றவர்களையும் அப்பணியாளருக்கு எதிராகத் தூண்டிவிட்டனர். இதனால் ஒருகட்டத்தில் மனம் உடைந்து போன அவர் இனிமேல் இம்மக்களுக்கு எதுவும் செய்யக்கூடாது எனத் தீர்மானித்தார். ஒருநாள் கடவுளின் சந்நிதியில் அமர்ந்து தியானித்துக் கொண்டிருக்கையில் அவருக்கு மனத்தெளிவு கிடைத்தது. "விமர்சனங்களுக்கு மதிப்பளித்திருந்தால் இயேசு வல்ல செயல்களைச் செய்திருக்க முடியாது. விமர்சனங்களைத் தூக்கிப் பிடித்திருந்தால் பல தலைவர்கள் தலைவர்களாய் மாறயிருக்க இயலாது. நானும் யாருடைய விமர்சனங்களையும் பொருட்படுத்தப் போவதில்லை. நற்காரியங்களைத் தொடர்ந்து செய்வேன்." அதன்பிறகு அவர் யாருடைய தேவையற்ற வார்த்தைகளுக்கும் மதிப்பளிக்கவில்லை. நாளடைவில் அவ்வாறு பேசியவர்களின் சப்தமும் அடங்கியது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இப்படிப்பட்ட மனநிலை கொண்டவர்களை இயேசு சாடுவதைக் காண்கிறோம். இயேசுவின் இவ்வார்த்தைகள் நமக்கும் பொருந்துகிறதா எனச் சோதித்தறிவது நமது கடமை. நாம் பெரும்பாலும் பிறருடைய விமர்சனங்களை எதிர்பார்க்கிறோம். அவை புகழ்ச்சிக்குரியவையாகவும் நேர்மறையாகவும் இருக்கவும் வேண்டும் என்பது நமது எதிர்பார்ப்பு. இவ்வெதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும் போது நமது மனம் சோர்ந்து விடுகிறது. நாமும் முடங்கிப் போகிறோம். இது ஒருபுறமிருக்க நாமும் பலருக்கு எதிர்மறையான விமர்சனங்களைக் கொடுத்திருக்கிறோம். நம்முடைய விமர்சனங்களால் பிறரின் நற்செயல்களைத் தடுக்கிறோம்.பிறருடைய விமர்சனங்களைப் பெரிதாக மதிப்பதால் நாம் நற்செயல்கள் செய்வதிலிருந்து தடுக்கப்படுகிறோம்.

விமர்சனம் கொடுப்பதை யாராலும் நிறுத்த முடியாது. அது அவர்களுடைய சுதந்திரம். ஆனால் அந்த விமர்சனங்களால் பாதிக்கப்படுவதும், அதை சட்டை செய்யாமல் இருப்பதும் நம் கையில்தான் இருக்கிறது. ஒருவர் புகழ்வதால் நாம் ஏற்றம் பெறுவதுமில்லை. ஒருவர் இகழ்வதால் நாம் தாழ்ந்து போவதுமில்லை. இவ்வுண்மையை உணர்ந்தால் நாம் மனரீதியாக சமநிலையைக் கொண்டவர்களாய் வாழ்வில் முன்னேற முடியும். அதற்கு சிறந்த முன்மாதிரி நம் இயேசு. வல்ல செயல்களைக் கண்டு மக்கள் புகழ்ந்து ஓசான்னா பாடிய போதும், இவன் பெருந்தீனிக்காரன், கடவுளைப் பழிக்கிறான் எனக் கூறப்பட்ட போதும் சமநிலையைக் காத்தார். தொடர்ந்து நல்லதை மட்டுமே துணிச்சலாய் செய்தார். 

இன்றைய முதல்வாசகத்தில் நமக்கு பயனுள்ளவற்றைக் கற்பித்து நல்வழி நடத்துவதாக கடவுள் வாக்களிக்கிறார். தேவையற்ற நம் வளர்ச்சிக்கு உதவாத விமர்சனங்களை உதறிவிட்டு கடவுளின் வார்த்தையை இறைவேண்டல், விவிலியம் மற்றும் அனுபவம் மிகுந்த நம் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட மூத்தோர்களின் அறிவுரைகளின் வழியாகக் கேட்டு அதன்படி வாழும் பொழுது எத்தகைய எதிர்ப்பும் நற்செயல்கள் புரிவதிலிருந்து நம்மைத் தடுக்க முடியாது. நம்மை வளர்ச்சியின் பாதையிலிருந்து யாராலும் தடுக்க இயலாது. இத்தகையோராய் வாழவே நம் இறைவன் விரும்புகிறார். அதற்கான வரத்தை வேண்டுவோம்.

இறைவேண்டல்

எம்மை உம் வார்த்தைகளால் நல்வழியில் நடத்தும் இறைவா பிறருடைய வெற்று வார்த்தைகளுக்கு மதிப்பளித்து எம் வளர்ச்சியை நாங்களே முடக்கும் மனநிலையை எம்மிடமிருந்து அகற்றும். விமர்சனங்களால் நாங்களும் தாழாமல்,பிறரையும் தாழ்த்தாமல் தொடர்ந்து உம் வழியில் பயணிக்கும் அருள்தாரும் ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

17 + 2 =