விதைகளை வளர வைப்போமா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் 24 வெள்ளி; I: 1திமொ: 6: 13-16; II: தி.பா: 100: 1-2. 3-4. 5; III :  லூக்: 8: 4-15

 

இந்த மண்ணில் ஒரு விதை வளர வேண்டுமென்றால் இந்த விதைக்கேற்ற நல்ல சூழல் நிலத்தில் இருக்க வேண்டும். நிலம் பண்படுத்தப்பட்டதாகவும்  களைகளில்லாததாகவும் பலன் கொடுக்கக் கூடிய வகையிலும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அது மிகுந்த விளைச்சலைக் கொடுக்க முடியும். எனக்கு விவசாயம் செய்த அனுபவம் உண்டு. ஆடி பிறந்தாலே அனைத்து விவசாயிகளும் விதைக்கத் தயாராவர். நல்ல பண்படுத்தப்பட்ட
நிலத்தில் விதைத்த விதைகள்
சிறப்பாக பயிராக வளர்ந்து
மிகுந்த விளைச்சலைக் கொடுத்திருக்கின்றன. ஆனால் தரிசு நிலமாக இருந்த அந்த நிலத்தில்   விதைக்கப்பட்ட விதைகள் சற்று பலன் குறைவாகவே கொடுத்தன.இது நமக்கு ஒரு வாழ்வியல் பாடம். நாம் முழுமையாக பலன் கொடுக்க வேண்டுமெனில் நமது வாழ்வில் நல்ல சூழல்,  பண்பட்ட உள்ளம், களைகளில்லாத மனம் வேண்டும்.

நல்ல சூழல் என்பது என்ன? மகிழ்வான சமயங்களா. அல்ல. எல்லாச் சூழலையும் நமக்கு சாதகமாக ஏற்றுக்கொள்ளும் திறன் அது. அத்திறனை நமக்குத் தருவது இறைவேண்டல். இறைவேண்டலில் இறைவனுடன் நிலைத்திருக்கும் போதும் ,இறைவார்த்தைகளை உள்வாங்கும் போதும் எத்தகைய துன்பத்திலும் மகிழ்வாக இருக்க முடியும். கனிதரவும் இயலும்.

பண்பட்ட உள்ளம். பண்பட்ட உள்ளம் என்பது இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகப் பார்க்கும் மனநிலை. வலிகளைத் தாங்கும் மனத்திடம். நம்முடைய வாழ்வு பலன் தருவதாகவும் கிறிஸ்தவ மதிப்பீடுகளுக்குச் சான்று பகர்வதாகவும் அமைய இம்மனநிலை மிகவும் முக்கியமாகும்.

களைகளில்லாத மனம் என்பது தூய மனநிலையைக் குறிக்கும். உலக மாயைகளும், உலகம் சார்ந்த கவலைகளும் இல்லாத மனநிலையே இது. கர்வம், ஆணவம், தற்பெருமை, பேராசை, பொறாமை, சிற்றின்ப ஆசைகள் இவற்றோடு தாழ்வு மனப்பான்மை, தேவையற்ற சோகம், சோம்பேறித்தனம் போன்ற பலவித களைகளை நாம் அகற்றி எறிய வேண்டும். அப்போது நமது மனம் தூயதாக மாறும். இறையேசுவின் வார்த்தை என்ற விதைகள் வளரக்கூடிய நிலமாக வாழ்வு மாறும்.

"நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ, சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு,
அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்களைக் குறிக்கும்'' (லூக்கா 8:15) என்ற வார்த்தைக்கேற்ப பலன் தரும் வாழ்வுவாழ நமது உள்ளத்தை தகுந்த சூழலுள்ளதாக, பண்பட்டதாக, களைகளில்லாததாக மாற்றுவோம். 

இறைவேண்டல்
அன்பு இயேசுவே! உமது வார்த்தை என்ற விதைகளை எம் வாழ்வால் வளர்த்தெடுத்து கனிதர அருள் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

 

Add new comment

9 + 7 =