Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
விண்ணேற்பு அன்னையின் வழியில்... | திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு
இன்றைய வாசகங்கள் (15.08.2020) - பொதுக்காலத்தின் 19 ஆம் சனி - தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு - I. தி.வெ. 11:19a;12:1-6,10ab; II. தி.பா. 45:9,10-11,15; III. 1கொரி. 15:20-26; IV. லூக். 1:39-56
இன்றைய நாளில் நம் தாய் திருஅவையோடு இணைந்து தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு பெருவிழாவை கொண்டாடி மகிழ்கின்றோம். திருத்தந்தை 12ம் பத்திநாதர் 1950 ஆம் ஆண்டு அன்னை மரியா உடலோடும் ஆன்மாவோடும்விண்ணகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார் என்று விண்ணேற்பு அடைந்ததை நம்பிக்கை கோட்பாடாக அறிவித்தார். இயேசுவை ஈன்றெடுத்த நம் தாய் அன்னை மரியாவின் உடலை இம்மண்ணிற்கு கையளிக்காது; அன்னை மரியாவின் உடலையும் ஆன்மாவையும் இறைவன் தாமே விண்ணகத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார் என்ற நம்பிக்கையை இன்றைய நாள் விழா நமக்கு சுட்டிக்காட்டுகிறது.
பழைய ஏற்பாட்டில், கடவுளின் பேழையை தாவீது அரசர் மேளதாளத்துடன், தாரை தப்பட்டைகள் முழங்க எருசலேம் நகருக்கு எடுத்துச் சென்றார். (2சாமு 6:1-23). அதேபோல தன்னை பெற்று வளர்த்து இறையாட்சி பணியில் முழுவதுமாக உடனிருந்து கல்வாரி வரைக்கும் பயணித்த அன்னை மரியாவை, இறைவனும் தம் திருமகன் இயேசுவின் பேழையாகிய அன்னை மரியாவை விண்ணகத்திற்கு ஆரவாரத்தோடும், மகிழ்ச்சியோடும் தம் திருநகராகிய விண்ணகத்திற்கு அழைத்துச் சென்ற நிகழ்வையே இன்றைய நாள் விழா நமக்கு நினைவூட்டுகிறது. மேலும் இன்றைய நாளில் நம் நாட்டின் சுதந்திர தின விழாவை கொண்டாடுகிறோம். நம் தாய் அன்னை மரியாள் விடுதலையின் தாயாக இருக்கின்றார். அவரின் வாழ்வும் முன்மாதிரியும் நமக்கு விடுதலையை கொடுப்பதாக இருக்கின்றது.
நமது நாட்டின் 74 ஆவது சுதந்திர தின விழாவை தான் கொண்டாடினாலும் உண்மையான சுதந்திரம் நமக்கு இருக்கிறதா? என்று சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம். வெள்ளையர்களிடம் இருந்து பெற்ற சுதந்திரம் கொள்ளையர்கள் கையில் இருக்கின்றது என்று சொல்லுமளவுக்கு ஊழலும் அநீதியும் தலைவிரித்தாடுகிறது. சுதந்திர இந்தியாவில் எண்ணற்ற ஏழை எளிய மக்கள் அடிமைகளாக வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய நிலையில் வாழும் நம் நாட்டு மக்களுக்கு நம் தாய் அன்னை மரியா விடுதலையின் தாயாகவும்விண்ணேற்றத்தின் தாயாகவும் இருக்கின்றார்.
இன்றைய நாள் விழா ஒரு நம்பிக்கையின் மறைபொருளை வெளிப்படுத்தினாலும் கடவுள் அற்புதங்களையும் அதிசயங்களையும் நிகழ்த்த வல்லவர் என்ற ஆழமான சிந்தனையை வலியுறுத்துகிறது. மேலும் கடவுளால் முடியாதது எதுவுமே இல்லை என்பதற்கு உதாரணம் அன்னை மரியாவின் விண்ணேற்பு பெருவிழா. அன்னை மரியா விண்ணகத்திற்கு உடலோடும் ஆன்மாவோடும் எடுத்துக்கொள்ளப்பட்டதற்கு இரண்டு முக்கிய காரணங்களை விவிலியம் எடுத்துரைக்கின்றது.
முதலாவதாக, அன்னை மரியா மீட்புப்பணியில் ஒத்துழைப்புக் கொடுப்பவராக இருந்தார். கபிரியேல் வானதூதர் அன்னை மரியாளை இறைமகன் இயேசுவின் தாயாக மாற அழைப்பு விடுத்தபோது, "இதோ ஆண்டவரின் அடிமை" என்று கூறி இறைத்திருவுள்ளத்திற்கு தம்மையே கையளித்தார். இப்படி கையளிப்பது என்பது சாதாரண ஒன்று கிடையாது. ஏனெனில் அன்னைமரியா வாழ்ந்த காலகட்டத்தில் யூதர்கள் ஆணாதிக்க சிந்தனை கொண்டவர்களாக இருந்தனர். பெண்களுக்கு எதிரான சட்டங்கள் எண்ணற்றவை இருந்தன. குறிப்பாக ஒரு பெண் திருமணத்துக்கு முன்பாக கருவுற்றால் அவர் கல்லால் எறிந்து கொல்லப்பட வேண்டும். இப்படிப்பட்ட சட்டங்கள் இருக்கின்றது என்பதை அன்னைமரியா தெரிந்த பொழுதிலும் மீட்பு பணிக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்ற ஆழமான நம்பிக்கையோடு தன்னை முழுவதுமாக ஒப்புக் கொடுத்தார். இயேசு முதன்முதலில் வல்ல செயல் செய்வதற்கு அன்னை மரியாள் தான் கானாவூர் திருமணத்தில் வழி காட்டுபவராக இருந்தார். இயேசு தான் செய்த மூன்றாண்டு இறையாட்சி பணியில் அன்னை மரியாள் பக்கத்துணையாக இருந்து மீட்பு பணியில் உதவி செய்தார். கல்வாரியில் சிலுவையில் தொங்கி இயேசு தன் இரத்தத்தின் வழியாக இவ்வுலகை மீட்க தந்தையின் திருவுளத்தை ஏற்ற பொழுது அன்னை மரியாள் உடனிருந்தார்.
இரண்டாவதாக, அன்னை மரியாவின் சீடத்துவம் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணேற்றம் அடைய அடிப்படையாக இருந்தது. சீடத்துவ வாழ்வு என்பது இயேசு விட்டுச் சென்ற இறையாட்சி மதிப்பீடுகளான உண்மை, அன்பு, பரிவு, நீதி, சமத்துவம், பிறர்நலம், அமைதி, துன்பங்களை ஏற்கும் மனநிலை போன்ற பண்புகளை உள்ளடக்கியதாகும். நான்கு நற்செய்தியாளர்களும் சீடத்துவ வாழ்வின் மேன்மையை சுட்டிக்காட்டியுள்ளனர். மத்திய நற்செய்தியை பொருத்தவரை உண்மையான சீடர் என்பவர் புதிய திருச்சட்டமாகிய மழைப்பொழிவின் நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பவர் ஆவார். மாற்கு நற்செய்தியை பொருத்தவரையில் உண்மையான சீடர் என்பவர் இயேசுவை முழுமனதோடு பின்பற்றி வாழ்வின் சிலுவைகளை பொறுமையோடு தூக்கி செல்பவர் ஆவார்.
லூக்கா நற்செய்தியாளரைப் பொருத்தவரை உண்மையான சீடர் என்பவர் கடவுளின் வார்த்தைகளை கேட்டு, அதை உள்ளத்தில் இருத்தி அதன்படி வாழ்பவர் ஆவார். யோவான் நற்செய்தி பொருத்தவரைஉண்மையான சீடர் என்பவர் கடவுளுடைய விருப்பத்தை அறிந்து அதன்படி செயல்படுபவர் ஆவார். இந்த நான்கு நற்செய்தியாளர்களும் சீடத்துவம் வாழ்வை பற்றி சுட்டிக்காட்டிய சீடத்துவ வாழ்வைப் பற்றி சுட்டிக்காட்டியப் பண்புகள் அனைத்தும் அன்னை மரியாவிடம் காணப்பட்டது.
அன்னை மரியா மழைப்பொழிவில் ஆண்டவர் இயேசு கூறிய வாழ்வில் மதிப்பீடுகளைத் தனது வாழ்வில் வாழ்ந்து காட்டினார். அதேபோல இயேசுவை கருவில் தாங்கியது முதல் கல்வாரியில் கையளித்தது வரை ஏற்பட்ட துன்பம் நிறைந்த சிலுவைகளை ஒரு சீடத்துவ மனநிலையில் ஏற்றுக்கொண்டார். கடவுளுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டு கீழ்ப்படிதல் வழியாக சீடத்துவ வாழ்வுக்கு சான்று பகர்ந்தார். இதற்கு மிகச்சிறந்த உதாரணம் "இதோ ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே நிகழட்டும்". அதேபோல அன்னை மரியாள் கடவுளின் திருவுளத்தை ஏற்றுக்கொண்டு அது தனது மகன் வழியாக நிறைவேற அவரோடு உடனிருந்தார் . இவ்வாறாக அன்னை மரியாள் இயேசுவின் சீடத்துவ வாழ்வுக்கு சான்று பகர்ந்ததால் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணேற்றமடைய கடவுள் திருவுளம் கொண்டார்.
இன்றைய நற்செய்தி வாசகம் கருவுற்ற வயதான தன் உறவினர் எலிசபெத்துக்கு உதவி செய்யக்கூடிய நிகழ்வை சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது. தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட எலிசபத் அம்மாளின் "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர் ;உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?" என்ற வாழ்த்தை கேட்குமளவுக்கு அன்னை மரியாள் புனிதத்துவ வாழ்வில் இணைந்திருந்தார். கடவுளின் மீட்புப்பணியில் ஒத்துழைப்பவராகவும் இயேசுவின் சீடத்துவப் பணியில் தன்னை இணைத்துக் கொண்டவராகவும் இருந்தார். எனவே உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துச்செல்லப்படும் அளவுக்கு தன்னை கடவுளுக்கு உகந்த பாத்திரமாக மாற்றிக்கொண்டார். கடவுளால் இயலாதது எதுவும் இல்லை. இதை கடவுளே அவருக்கு பரிசாக கொடுத்தார்.
எனவே நம்முடைய அன்றாட வாழ்விலும் கடவுள் நமக்கு இத்தகைய பரிசை வழங்க நாம் கடவுளின் மீட்புப்பணியில் ஒத்துழைப்பு கொடுக்க அழைக்கப்பட்டுள்ளோம்.அதேபோல இயேசு விரும்பக்கூடிய உண்மையான சீடர்களாக சான்று பகர அழைக்கப்பட்டுள்ளோம். அப்பொழுது நிச்சயமாக கடவுள் அன்னை மரியாவுக்கு கொடுத்த பரிசை நமக்கும் கொடுப்பார். அன்னை மரியாவை போல விண்ணகப் பேரின்ப வீட்டிலே இடம் பிடிக்க தேவையான அருளை வேண்டுவோம்.
இறைவேண்டல்
விடுதலையின் நாயகனே இறைவா! அன்னை மரியாள் இந்த உலகம் மீட்பின் வழியாக விடுதலை பெற உம் திருமகன் மண்ணில் பிறக்க அவரை ஒரு கருவியாகப் பயன்படுத்தினீரே. அதேபோல இந்த விடுதலை இந்தியாவில் அனைவரும் விடுதலையை சுவைக்க எங்களையும் ஒரு கருவியாகப் பயன்படுத்தும். அதற்கு தேவையான அன்னைமரியா கொண்டிருந்த மனநிலையைத் தாரும். ஆமென்.
திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment