Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
விண்ணரசுக்காக விழித்திருத்தல் | யேசு கருணா
8 நவம்பர் 2020 ஆண்டின் பொதுக்காலம் 32ஆம் ஞாயிறு - I. சாலமோனின் ஞானம் 6:12-16 II. 1 தெசலோனிக்கர் 4:13-16 III. மத்தேயு 25:1-13
திருவழிபாட்டு ஆண்டு நிறைவுபெறுகின்ற வேளையில், இன்று தொடங்கி, வருகின்ற மூன்று ஞாயிற்றுக் கிழமைகளில் விண்ணரசு பற்றிய இயேசுவின் உவமைகளை நாம் வாசிக்கவிருக்கின்றோம். மேலும், திருவருகைக்காலம் அருகில் இருப்பதைக் காட்டுவதற்காக, இவ்வாசகங்கள் இயேசுவின் இரண்டாம் வருகை மற்றும் அதற்குத் தேவையான நம் தயார்நிலை பற்றியும் பேசுகின்றன.
'விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக ஒப்பிடலாம்' என்று தொடங்குகின்ற இயேசு, பத்துப் பேர் அல்லது பத்துக் கன்னியர் அல்லது பத்துத் தோழியர் எடுத்துக்காட்டை முன்மொழிகின்றார். உவமையின் இறுதியில், 'விழிப்பாய் இருங்கள். அவர் வரும் நாளோ, வேளையோ உங்களுக்குத் தெரியாது' என அறிவுரை பகர்கின்றார்.
விண்ணரசு பற்றி இந்த உவமை சொல்வது என்ன?
(அ) விண்ணரசு என்பது இயேசுவின் இரண்டாம் வருகையைக் குறிப்பதாக உள்ளது.
(ஆ) விண்ணரசு எப்போது வேண்டுமானாலும் வரலாம்.
(இ) விண்ணரசை எதிர்கொள்ள விழிப்புநிலை அவசியம். இங்கே விழித்திருத்தல் என்பது கண்களைத் திறந்து வைத்திருத்தல் அல்ல. மாறாக, தயார்நிலையில் இருத்தல். ஒரு போர்வீரர் போல, அல்லது ஒரு வாகன ஓட்டுநர் போல விழித்திருத்தல், மற்றும் ஆபத்துகளை எதிர்கொள்ளும் தயார்நிலையில் இருத்தல்.
(ஈ) சிலர் விண்ணரசுக்குள் நுழைவர், சிலர் மறுக்கப்படுவர்.
இயேசு தன் சமகாலத்தில் நடந்த திருமண நிகழ்வுகளின் ஒரு வழக்கத்தை எடுத்துக்காட்டாக முன்வைக்கின்றார். திருமண நிகழ்வு மணமகனின் வீட்டில் நடக்கும். திருமண நிகழ்வு முடிந்து, திருமணக் விருந்து மற்றும் கொண்டாட்டங்களுக்காக மணமகன் தன் மனைவியை அழைத்துக்கொண்டு தன் அறை அல்லது புதிய இல்லத்திற்குத் திரும்புவான். அப்படி வருகின்ற மணமகனை, மணமகளின் தோழிகள் எதிர்கொண்டு வரவேற்பர். இரவு நேரத்தில் நடக்கும் அந்த நிகழ்வுக்காக, கைகளில் விளக்குகளோடு தோழிகள் காத்திருப்பர்.
இந்த உவமையில் குறிப்பிடும் பத்துப் பேரில் ஐந்து பேர் அறிவிலிகள் என்றும், ஐந்து பேர் முன்மதி உடையவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. மணமகள் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை. தெருவில் நின்று மணமகனை எதிர்கொள்ள வேண்டிய தோழியர், அவர் அறைக்குள் சென்றவுடன் தட்டுகின்றனர். விருந்தின் ஆரவாரத்தின் நடுவில் மணமகன் மேற்கொண்ட உரையாடல் - 'எனக்கு உங்களைத் தெரியாது' - சாத்தியமா? என்பது தெரியவில்லை. நடுஇரவில் கடைகள் திறந்திருக்குமா? விளக்குகள் அணைந்த பெண்கள் அந்த இரவில் எங்கு சென்றனர்? அவர்களுக்கு எண்ணெய் கிடைத்ததா? மணமகனோடு அவர்கள் உரையாடிய போது அவர்கள் கைகளில் விளக்குகள் எரிந்துகொண்டிருந்தனவா? அல்லது அணைந்த விளக்குகளோடு அவர்கள் நின்றனரா?
இந்நிகழ்வில் வரும் இரு குழுவினருக்கும் மூன்று விடயங்கள் பொதுவாக இருக்கின்றன:
(அ) இரு குழுவினரும் (அறிவிலிகள், முன்மதி உடையவர்கள்) மணமகனை எதிர்கொள்ள வருகின்றனர்.
(ஆ) இரு குழுவினரும் தூக்க மயக்கத்தால் உறங்குகின்றனர்.
(இ) மணமகனின் வருகையின் அறிவிப்பு கேட்டு இரு குழுவினரும் எழுந்து தங்கள் விளக்குகளைச் சரி செய்கின்றனர்.
இவ்விரு குழுவினருக்கும் மூன்று வித்தியாசங்கள் இருக்கின்றன:
(அ) முன்மதி உடையவர்கள் விளக்குகளோடு எண்ணெயும் எடுத்துக்கொள்கின்றனர். அறிவிலிகள் விளக்குகள் மட்டும் எடுத்துச் செல்கின்றனர்.
(ஆ) முன்மதி உடையவர்கள் விளக்குகளில் எண்ணெய் ஊற்றிக்கொண்டிருக்கிறார்கள். அறிவிலிகள் அவர்களிடம் எண்ணெய் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
(இ) முன்மதி உடையவர்கள் திருமண மண்டபத்துக்குள் அல்லது இல்லத்துக்குள் நுழைகின்றனர். அறிவிலிகள் நுழைய இயலவில்லை.
முன்மதி உடையவர்கள், விவேகம் அல்லது முன்மதியோடு இருந்தாலும், அவர்கள் மூன்று நிலைகளில் நமக்கு நெருடல்களை ஏற்படுத்துகின்றனர். அவை எவை? அவற்றை நாம் எப்படிப் புரிந்துகொள்வது?
(அ) முன்மதி உடையவர்கள் தங்களோடு உடன்வந்த அறிவிலிகளை எச்சரிக்கவில்லை. வீட்டிலிருந்து புறப்படும்போதே, 'என்னடி, நீங்க விளக்குகள் மட்டும் எடுத்துக்கொண்டு வருகிறீர்கள். எண்ணெயும் எடுத்துக்கொள்ளுங்கள்' என்று சொல்லி அவர்களை எச்சரித்திருக்கலாம். இறையாட்சிக்கான தயாரிப்பு அவரவர் சொந்த விருப்பு வெறுப்பைப் பொருத்தது. யாரும் யாரையும் அங்கே எச்சரிக்கவும் அறிவுறுத்தவும் முடியாது. எரேமியாவின் புதிய உடன்படிக்கையின் (காண். எரே 31:31-32) முக்கியக் கூறும் இதுவே. சட்டங்கள் அவரவருடைய உள்ளங்களில் எழுதப்பெறும். யாரும் யாருக்கும் கற்பிக்கவோ அறிவுரை பகரவோ இயலாது.
(ஆ) முன்மதி உடையவர்கள் தங்கள் எண்ணெயில் கொஞ்சம் மற்றவர்களுக்குக் கொடுத்திருக்கலாம், அல்லது அதைப் பகிர்ந்திருக்கலாம். ஆனால் நிகழ்வின்படி அவர்கள் பகிரவில்லை. மேலும், 'எங்களுக்கும் பற்றாமல் போகலாம்!' என்று அவர்கள் கவனமாக இருக்கின்றனர். விண்ணரசில் யாரும் யாருடைய நற்பயன்களையும் பகிர்ந்துகொள்ள முடியாது. என் நற்பயனை நான் மற்றவருக்குக் கொடுக்கவோ, மற்றவருடைய நற்பயனை நான் பெற்றுக்கொள்ளவோ இயலாது. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் கனிகள் கொடுக்க வேண்டும்.
(இ) முன்மதி உடையவர்கள் தவறான அல்லது பலனற்ற அறிவுரை வழங்குகின்றனர். 'நீங்கள் போய் வணிகரிடம் வாங்கிக்கொள்ளுங்கள்!' என அறிவிலிகளை அவர்கள் அனுப்பிவிடுகின்றனர். நள்ளிரவில் கடைகள் திறந்திருக்க வாய்ப்பில்லை. மேலும், இயேசுவின் சமகாலத்துக் கிராமங்களில், திருமண நிகழ்வு போன்ற நேரங்களில் கடைகள் அனைத்தும் மூடப்படும். ஏனெனில், அனைவரும் திருமணக் கொண்டாட்டங்களில் இணைந்திருப்பர். ஒருவேளை, இங்கே வணிகர், தானே கடையைத் திறந்து அவர்களுக்குக் கொடுக்க முன்வந்திருக்கலாம். நாம் தேவையில் இருக்கும்போது நமக்கு மற்றவர்கள் பல நேரங்களில் பலனற்ற அறிவுரைகள் வழங்குவார்கள் என்னும் வாழ்க்கைப் பாடத்தை நாம் இங்கே கற்க வேண்டும். அல்லது, நாம் ஒழுங்காக இல்லை என்றால், பலனற்ற அறிவுரைகள்நமக்கு வழங்கப்படும்.
அறிவிலிகளின் மூன்று பிரச்சினைகள் எவை?
(அ) தங்கள் விளக்குகள் அணைவதை மிகத் தாமதமாக உணர்கின்றனர்.
வீட்டின் கூரை பற்றிக்கொள்ளுமுன் தண்ணீரைத் தயார்நிலையில் வைப்பதை விடுத்து, கூறை பற்றி எரியத் தொடங்கியவுடன், தங்களிடம் தண்ணீர் இல்லை என்பதை உணரும் நபர்கள் இவர்கள். தாமதமாக ஒன்றை உணர்ந்தாலும், அந்த உணர்வால் பயன் ஒன்றுமில்லை. ஏனெனில், நாம் செயலாற்றுவதற்குப் போதிய நேரம் நமக்குக் கிடைப்பதில்லை.
(ஆ) மற்றவர்களிடம் இரக்கின்றனர்.
'எங்களுக்கும் கொஞ்சம் எண்ணெய் தாருங்கள்' என்று சக தோழியரிடம் இரக்கின்றனர். தயார்நிலையில் இல்லாதவர்கள் மற்றவர்களிடம் இரக்க வேண்டும். பல நேரங்களில், நாம் இரப்பது நமக்கு அந்நேரத்தில் கிடைப்பதில்லை.
(இ) அறிவுரைகளை அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள்.
'நள்ளிரவில் கடைகள் திறந்திருக்குமா?' என்ற கேள்விகூட அவர்களில் எழவில்லை. உடனடியாகப் புறப்பட்டுச் செல்கின்றனர். தங்கள் சக தோழியர்களை முழுமையாக நம்புகிறார்கள். அல்லது அவர்கள் சொல்லும் அறிவுரையை அறிவுக்கு உட்படுத்தாமல், வெறும் உணர்ச்சியால் உந்தப்பட்டுப் புறப்படுகின்றார்கள். அல்லது இறுதிவரை அவர்கள் பதற்றத்தோடு இருக்கிறார்கள். எண்ணெய் இல்லாத அவர்களிடம் வணிகரிடம் அதை வாங்குவதற்குப் பணம் இருந்ததா?
நிற்க.
பத்துத் தோழியர் ஒற்றுமைகள், வேற்றுமைகள், பண்புநலன்கள், நெருடல்கள், பிரச்சனைகள் ஆகியவற்றை ஒருபக்கம் நிறுத்திவிட்டு, இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு வைக்கும் வாழ்வியல் சவால்களைக் கண்டறிவோம்.
முதலில், தன்னறிவு.
அதாவது, தான் யார், தன்னிடமுள்ள நிறைகுறைகள் எவை, அவை இருப்பதற்கான காரணம் என்ன? என யாவற்றையும் பற்றிய தன்னறிவு முதலில் அவசியம்.
இரண்டாவது, தன்னறிவுடன் கூடிய தயார்நிலை.
அதாவது, குறைகளைக் கண்டறிந்த நான் அவற்றை என் நிறைகளாக மாற்றிக்கொள்ள வேண்டிய மனப்பக்குவம் மற்றும் உழைப்பு மற்றும் விடாமுயற்சி.
மூன்றாவது, தன்னறிவோடும் தயார்நிலையிலும் இருந்தாலும், பிரச்சனைகள் வரும்போது எதிர்கொள்ளும் துணிவு.
தன்னறிவோடும் தயார்நிலையிலும் இருந்தால் பிரச்சனைகள் வராது என்று பொருள் அல்ல. பிரச்சனைகள் வரும். அவற்றை எதிர்கொள்ள உடனடியாக நான் என் படைக்கலன்களைச் சரி செய்யவும், புதுப்பித்துக்கொள்ளவும், பயன்படுத்தவும் வேண்டும்.
மேற்காணும் மூன்று பண்புநலன்களையும், 'ஞானம்' என்ற ஒற்றைச்சொல் கொண்டு அழைக்கிறது முதல் வாசகம் (காண். சாஞா 6:12-16). யார் ஞானத்தைத் தேடிச் செல்கிறார்களோ, ஞானம் அவர்களைத் தேடி வருகிறது. விழித்திருப்போர் ஞானம் பெறுவர். ஞானம் பெறுபவர் விழித்திருப்பர். அவர்கள் தங்கள் கவலைகளிலிருந்து விடுதலை பெறுவர்.
இரண்டாம் வாசகத்தில் (காண். 1 தெச 4:13-18), இரண்டாம் வருகை பற்றிய ஒரு கேள்விக்கு விடையளிக்கின்றார் பவுல். இயேசுவின் இரண்டாம் வருகை உடனடியாக இருக்கும் என்று பவுலின் சமகாலத்தவர் எதிர்பார்த்திருக்கின்றனர். உயிரோடு இருந்து வருகையை எதிர்கொள்பவர்கள் இயேசுவோடு செல்வர். ஆனால், இறந்தவர்கள் நிலை என்னவாக இருக்கும்? என்னும் கேள்வி நம்பிக்கையாளர்களிடம் எழுகிறது. அவர்களும் உயிர்ப்பில் பங்கேற்பர். அவர்களை இயேசு தன்னோடு அழைத்து வருவார் எனச் சொல்லும் பவுல், 'ஆண்டவரை எதிர்கொள்வோம், அவரோடு இருப்போம், ஒருவரை ஒருவர் தேற்றிக்கொள்வோம்' என்கிறார். எதிர்நோக்கு என்பது ஞானத்திற்கான முன்தேவையாக இருக்கிறது.
இறுதியாக,
இன்று நாம் விழிப்புநிலையில் இருக்கின்றோமா?
என்னைப் பற்றி, என்னைச் சுற்றி நடப்பவை பற்றிய என் தன்னறிவு என்ன? ஞானத்தை நான் தேடுகிறேனா? என் கவனக்குறைவால், முன்மதி இல்லாத நிலையால் எனக்கு ஏற்பட்ட இழப்புகள் எவை?
பல நேரங்களில் வாழ்க்கை நமக்கு இரண்டாம் வாய்ப்புகளைத் தரவே செய்கின்றது. நம் விளக்குகள் அணைந்து போயிருந்தாலும் - அகுஸ்தினார் வாழ்வில் நடந்தது போல - அவர் நம் விளக்குகளைஏற்ற வல்லவர். நாம் இருப்பது போல நம்மைத் தழுவிக்கொள்வார்.
நம் இதயத்தின் சொற்கள் எல்லாம், திருப்பாடல் ஆசிரியரின் சொற்களாக இருக்க வேண்டும்:
'என் இறைவா! என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது!
நான் படுத்திருக்கையில் உம்மை நினைப்பேன்.
இரா விழிப்புகளில் உம்மைப் பற்றியே ஆழ்ந்து சிந்திப்பேன்.' (திபா 63).
அருள்பணியாளர் யேசு கருணா, பேராசிரியர், புனித பவுல் குருமடம், திருச்சி
Add new comment