விண்ணகம் நோக்கி பயணிப்போமா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


இயேசுவின் விண்ணேற்பு பெருவிழா
மு.வா: திப: 1: 1-11
ப.பா: தி.பா: 47: 1-2. 5-6. 7-8
இ.வா: எபி: 9: 24-28; 10: 19-23
ந.வா : லூக்: 24: 46-53

இன்று நம் தாய் திருஅவையானது இயேசுவின் விண்ணேற்ற பெருவிழாவைக் கொண்டாடுகிறது.தந்தையிடமிருந்து உலகை மீட்க மனுஉரு எடுத்த இறைமகன் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றி அப்பணியைத் தொடர்ந்து ஆற்ற தம் சீடர்களுக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் பாதையை ஏற்படுத்திய பின்பு தன் தந்தையை மீண்டும் சேரும்விதமாய் விண்ணேற்றம் அடைகிறார். இவ்விழா நமக்குக் கூறும் செய்தி என்னவெனில்
திருமுழுக்கு பெற்ற கிறிஸ்தவர்களாகிய  நம்முடைய வாழ்வு எப்போதும் விண்ணகத்தை நோக்கியதாக இருக்க வேண்டும் என்பதே. அதாவது நம்மைப் படைத்த தந்தை கடவுளே நம்முடைய ஆரம்பம்.நம்முடைய ஆதாரம். அவர் நமக்காக வகுத்த திட்டங்களை நிறைவேற்றியவர்களாய் அவரிலே இணைவதுதான் விண்ணேற்றம். அந்த விண்ணேற்றம் நாம் இறந்த பின்பு நிகழ்வதல்ல. மாறாக நம் வாழ்வின் ஆரம்பம் முதல் நமது பயணம் விண்ணகம் நோக்கியதாக அதாவது தந்தையை நோக்கியதாக அமைய வேண்டும் என்பதே இவ்விழா நமக்குக் கூறும் செய்தி.
இன்றைய வாசகங்கள் மூன்றுமே தந்தையை நோக்கிப் பயணிப்பதற்கான வழியை வழியை நமக்குக் கற்றுத் தருகின்றன.  

"தீய மனச்சான்றிலிருந்து விடுவிக்கப்பட்ட உள்ளமும் தூய நீரில் கழுவப்பட்ட உடலும் உடையவர்களாய், நேரிய உள்ளத்தோடும் மிகு உறுதியான நம்பிக்கையோடும் அவரை அணுகிச் செல்வோமாக." என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் நாம் வாசிக்கிறோம். இவ்வார்த்தைகள் விண்ணகத்தந்தையை நோக்கிய நமது பயணத்திற்கான தெளிவான வழிகளைச் சுட்டிக்காட்டுகிறது.
உடலாலும் மனதாலும் தூயவர்களாய் நேர்மையாளராகவும் நம்பிக்கையுடையவர்களாகவும் வாழ்வது மண்ணகத்திலே விண்ணகத்தை கொண்டுவரும் வாழ்வாக அமைகிறது. இத்தகைய வாழ்வே தந்தையை நோக்கிய பயணத்தின் அடித்தளம். நம் ஆண்டவர் இயேசு இத்தகைய வாழ்வை வாழ்ந்ததால் அவர் தந்தையிடமிருந்து வந்ததைப் போலவே மீண்டும் தந்தையை அடைந்தார். விண்ணேறினார்.

 இயேசுவின் இந்த அடிச்சுவட்டைப் பின்பற்றி நாம் வாழும் போது நாமும் விண்ணகத்தந்தையின் உடனிருப்பை  நிச்சயம் உணரமுடியும். விண்ணகத் தந்தையோடு நாம் வாழும் போது அங்கே விண்ணகத்தையே நாம் உருவாக்க முடியும். 

நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் கடவுளின் துணையோடு அவரின் திருஉளத்தை நிறைவேற்றும் ஆர்வத்தோடு செய்யும் போது நமது உள்ளம் இறைவனை நோக்கி உயர்கிறது. இதுவே விண்ணேற்றம். நமது அண்டை அயலாரை அன்பு செய்து மன்னித்து பணிவிடை புரிந்து அவர்களில் தந்தையைக் காண முயலும் போது அங்கே விண்ணேற்றம் நிகழ்கிறது.இயேசு விண்ணேற்றம் அடையும் போது சீடர்களை சாட்சிகளாய்த் திகழப் பணித்தார். கடவுளின் அன்புக்கும் மீட்புச் செயலுக்கும் சாட்சிகளாய் வாழும் ஒவ்வொரு நிமிடமும் நாம் தந்தையை நோக்கி பயணிக்கிறோம். விண்ணேற்றம் அடைகிறோம். எனவே இவற்றை உணர்ந்து நமது வாழ்க்கைப் பயணத்தை தந்தையை நோக்கியதாய் அமைப்போம். 

 இறைவேண்டல் 
விண்ணகத் தந்தையே!தூயவர்களாய் நேர்மையோடும் நம்பிக்கையோடும் 
உம் அன்பிற்கு சாட்சிகளாய் வாழ்ந்து உம்மையே நோக்கிப் பயணிக்க வரமருளும் ஆமென்.

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
த.சூசையப்பட்டிணம்
தங்கச்சிமடம்

Add new comment

1 + 2 =