வாழ்விழந்தோருக்கு வாழ்வளிப்போமா! | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


பாஸ்கா காலம் -மூன்றாம் சனி
I: திப: 9:31-42
II: தி.பா: 115:12-17
III : யோவான் 6 :60-69

வாழ்விழந்தோருக்கு வாழ்வளிப்போமா!

"என்னில் நம்பிக்கை கொண்டவன் என்னை விட பெரிய காரியங்களைச் செய்வான்" என்று கூறுகிறார் நம் ஆண்டவர் இயேசு. இதற்கு சான்றாக அமைகின்றன இன்றைய வாசகங்கள். 

இயேசுவின் போதனைகளைக் கேட்டு அவரைப் பின்பற்றிய பலர் அவருடைய போதனையின் உண்மைப் பொருளை  உணராமல் அவரைவிட்டு விலகிச் செல்லத் தொடங்கினர்.  அச்சமயத்தில் "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம். வாழ்வுதரும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன" எனத் தன் நம்பிக்கையை அறிக்கையிட்டவர் தான் திருத்தூதர் பேதுரு. அதே பேதுரு இயேசுவின் இறப்புக்குப்பின் சிறிது காலம் பயந்து வாழ்ந்தாலும், அவரின் உயிர்ப்பில் நம்பிக்கை கொண்டவராய் இயேசுவைப் போலவே பல அரிய காரியங்களைச் செய்தார் என இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக்கிறது. 

பேதுரு நோயாளிகளுக்கு சுகமளித்தார். இறந்த பெண்மணிக்கு உயிர்கொடுத்தார்.
அனைத்தையும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் செய்தார். " என் ஆடுகள் நிலை வாழ்வு பெறும் பொருட்டு நான் வந்தேன் " என்றுரைத்த இயேசுவின் வாழ்வளிக்கும் பணியைத் தொடர்ந்தார் பேதுரு.

பேதுருவைப் போல இயேசுவின் வாழ்வளிக்கும் பணியைத் தொடரவே நாம் எல்லோரும் அழைக்கப்பட்டுள்ளோம். நம் அருகில் உள்ளவர்கள் உடல் மன நோயால் நம்பிக்கை இழக்கும் போதும் பல்வேறு சூழல்களால் வாழ்வை வெறுக்கும் போதும் இயேசுவின் மேல் உள்ள நம்பிக்கையாலும் திடமான வாழ்வாலும் நாம் வாழ்வளிப்பவர்களாக மாற வேண்டும். இதற்காகவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை உணர்வோம். வாழ்வை வழங்கும் கருவிகளாகச் செயல்பட இறையருள் வேண்டுவோம்.

இறைவேண்டல்

வாழ்வளிக்கும் வள்ளலே இறைவா நம்பிக்கையோடு உம்பெயரால் வாழ்விழந்தோருக்கு வாழ்வளிக்கும் மனிதர்களாக வாழும் வரம் தாரும். ஆமென்.

Add new comment

1 + 8 =