வழிகாட்டும் ஆயர்களா நாம்? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் பதிநான்காம் செவ்வாய்; I: தொ.நூ 32:23-33; II  : திபா: 16:1-3,6-8; III:  மத் 9:32-37

சிறந்த வழிகாட்டுதல் இன்றி யாராலும் வாழ்தல் இயலாது. எவ்வளவு பெரிய ஞானி ஆனாலும், அறிவாளியாக இருந்தாலும் வாழ்க்கையின் குறிப்பிட்ட சில தருணங்களில் நமக்கு வழிகாட்டிகள் அவசியம். வழிகாட்டிகள் தவறாக அமைந்தாலும், வழிகாட்டிகள் இல்லாமல் இருந்தாலும் நமது வாழ்வு திசைமாறக் கூடும் என்பதை இன்றைய சமூதாயத்தில் நாம் கண்கூடாகக் காண்கிறோம். 

இத்தகைய நிலைதான் அன்றைய இஸ்ரயேல் மக்களிடம் காணப்பட்டது. ரோமை ஆட்சியின் அழுத்தம் ஒருபுறம். அவர்களுக்கு பயந்து பணிந்து வாழ்ந்த யூதர்களின் தவறான வழிகாட்டுதல் மறுபுறம். இறைவன் தந்த பத்துகட்டளைகள் திரிந்து பல நூறு கட்டளைகளாக மாறிய சுமை இன்னொரு புறம். இவற்றில் எதைக் கடைபிடிப்பது,எதை விடுவது என்று அறியாத மக்கள் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்டனர். இவற்றிற்கிடையே யாரேனும் வல்ல செயல்கள் செய்தாலோ,  போதித்தாலோ "நமக்கு ஏதும் நன்மை கிடைத்துவிடாதா" என ஏங்கித் தவித்துக்கொண்டு அவர்களைப் பின்தொடர்ந்தனர் மக்கள். அப்படித்தான் அவர்கள் இயேசுவையும் பின் தொடர்ந்தனர். இதைக்கண்ட இயேசு "ஆயனில்லா ஆடுகள்" போல அவர்கள் இருப்பதைக் கண்டு அவர்கள் மீது பரிவு கொள்கிறார்.

நாம் வாழும் இக்காலச்சூழ்நிலையில் நம் கண்ணெதிரே எத்தனையோ இளைஞர்கள், கைவிடப்பட்டவர்கள் தகுந்த வழிகாட்டுதலின்றி தாறுமாறாகத் திரிவதை அன்றாடம் நாம் கவனித்துக்கொண்டிருக்கிறோம். அச்சூழ்நிலைகளில் இயேசுவைப்போல அவர்கள் மேல் பரிவு கொண்டு அவர்களுக்கு நல்வழிகாட்ட முயல்கிறோமா? இல்லை அவர்களைத் திட்டித் தீர்த்து சாபம் இடுகிறோமா? எனச் சிந்தித்தால் பெரும்பாலான நேரங்களில் இரண்டாவதாகக் 
குறிப்பிட்ட செயலைத்தான் நாம் செய்கிறோம்.

ஆனால் நம்முடைய ஆண்டவர் இயேசு அத்தகைய மக்களைத் தான் தெடிச்சென்று வழிகாட்டினார். வாழ்க்கையில் நேர்வழியைத் தொலைத்த சக்கேயு,மத்தேயு, மகதலா மரியா போன்றோரை பரிவுடன் நோக்கி அவர்கள் வாழ வழிகாட்டி நல்ல ஆயனாய்த் திகழ்ந்தார். எனவே நாமும் வழிதவறிய ஆடுகள் போல வாழ்பவர்களைக் காண நேர்ந்தால் பரிவுடன் வழிகாட்டி அவர்கள் வாழ்வில் நல்ல ஆயர்களாக வாழ முயற்சிப்போம்.

இறைவேண்டல்

நல்ல ஆயனாம் இயேசுவே நாங்களும் உம்மைப் போல வழிகாட்டும் ஆயர்களாக விளங்க வரம் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

1 + 4 =