வளமான கிறிஸ்தவ வாழ்வு வாழ வேண்டுமா! | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


தவக்காலம் - இரண்டாம் திங்கள் - I. தானி: 9:4-11; II. தி.பா: 79:8.9.11.13; III. லூக்: 6:36-38

கிறிஸ்தவ வாழ்வு என்பது வளமோடு வாழக்கூடிய வாழ்வாகும். பல்வேறு வாழ்வியல் மதிப்பீடுகளை உள்ளடக்கியதாகும். நற்பண்புகளையும் நற்செயல்களையும் வலியுறுத்தும் வாழ்வாகும். ஒரு மனிதர் எப்படி இருக்க வேண்டும் என்ற வாழ்வியல் பாடத்தைக் கொடுக்கும் பல்வேறு ஒழுங்கு முறைகளை கிறிஸ்தவ மதிப்பீட்டில் காணமுடிகின்றது.
தவக்காலம் கிறிஸ்தவ மதிப்பீட்டின்படி வாழ்ந்து சான்று பகர நமக்கு அழைப்பு விடுக்கின்றது. இந்த மதிப்பீடுகளைத் தான் ஆண்டவர் இயேசு நற்செய்தியின் வழியாக வலியுறுத்தியுள்ளார்.

முதலாவதாக நாம் அனைவரும் இறைத்தந்தையைப் போல இரக்கம் உள்ளவர்களாய் வாழ அழைப்பு விடுக்கிறார் இயேசு. "உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்" எனக் கூறியுள்ளார். நம்மைப் படைத்த கடவுள் இரக்கம் உள்ளவராய் இருக்கின்றார். இஸ்ரயேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்த தன் கடவுளை மறந்து, கடவுளுக்கு எதிராக பற்பலத் தவறுகளைச் செய்தனர். இருந்தபோதிலும் கடவுள் அவர்களை  இறைவாக்கினர்கள், நீதித் தலைவர்கள், அரசர்கள் போன்றவர்கள் வழியாக அவர்களை மீட்கத் திருவுளம் கொண்டார். இது கடவுளின் இரக்கக் குணத்தை சுட்டிக்காட்டுகிறது. கடவுளின் இயல்பு தண்டிப்பதல்ல; மாறாக, இரக்கத்தோடு தன் பிள்ளைகளை ஏற்றுக் கொள்வதாகும்.  உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை என்பது இரக்க குணத்தோடு வாழ்வதாகும். இரக்கமில்லாத மனிதர்கள் கிறிஸ்தவர்கள் என அழைக்கப்பட தகுதியற்றவர்கள். நாம் நம்முடைய  இரக்கச் செயல்களை தவ முயற்சிகளோடு ஒன்றாக இணைக்கின்ற பொழுது,  நாமும் இறைத்தந்தையை போல இரக்கமுள்ளவர்களாய் வாழ முடியும். அத்தகைய வாழ்வை வாழ்ந்து இயேசுவின் நற்செய்தி மதிப்பீட்டிற்கு சான்றுபகர இந்தத் தவக்காலம் நம்மை சிறப்பான விதத்தில் நமக்கு அழைப்பு விடுக்கின்றது.

இரண்டாவதாக, "பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாகமாட்டீர்கள்" என்று இயேசு கூறியுள்ளார். இயேசு யாரையும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கக் கூடாது எனக் கூறியுள்ளார். ஏனெனில் கடவுளைத் தவிரப் பிறரைத் தீர்ப்பளிக்க யாருக்கும் அனுமதி இல்லை. மனிதர்கள் என்பவர்களே இயற்கையில் பலவீனமானவர்கள். தங்களுடைய பலவீனத்தால் பற்பல தவறுகள் செய்யக்கூடியவர்கள். எனவே பிறரை குற்றவாளி என தீர்ப்பிடுவது தவறான ஒன்று என்பதை ஆழமாக இயேசு வலியுறுத்தியுள்ளார். இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் சதுசேயர்களும்  சமயத் தலைவர்களும் பிறரைக் குற்றவாளியாகக் குற்றம் சுமத்தத் தயாராக இருந்தனர். இதற்கு அடிப்படைக் காரணம் அவர்களின் குற்றங்களை மறைக்க வேண்டும் என்ற எண்ணமே. "முடியாதவன் தான் அடுத்தவனைப் பற்றி விமர்சிப்பான்!!
 முடியும் என நினைப்பவன் அடுத்ததை நோக்கி பயணிப்பான்" என்ற வார்த்தைகள் தங்களுடைய தவற்றை மறைத்துவிட்டு பிறரை குற்றவாளியாக காண்பிக்கும் மனநிலை ஒருவரை முன்னேற விடாது என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது. இத்தகைய மனநிலை கடவுளுக்கு எதிரான மனநிலை. இந்த மனநிலையை மாற்றி அனைவரும் தவறு செய்யக் கூடியவர்கள்  என உணர்ந்து ஏற்றுக்கொண்டு  அவற்றிலிருந்து  வெளிவர, நாம் ஒருவருக்கொருவர் வழிகாட்டிக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனையை பெற்றுக் கொள்ளமுயற்சி செய்ய வேண்டும். பிறரிடம் குற்றம் காணாமல் அவர்களிடம் உள்ள நேர்மறை பண்புகளை வெளிக்கொணர முயற்சி செய்ய வேண்டும். இதுதான் உண்மையான கிறிஸ்தவ வாழ்வு. இத்தகைய வாழ்வை வாழத்தான் இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு அழைப்பு விடுக்கின்றது.

மூன்றாவதாக "மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்; அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள்" என்று இயேசு கூறியதன் நோக்கம் பிறரை ஒடுக்க வேண்டும் என்பதற்காக இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் சிலர் பிறரைக் கண்டனம் செய்தனர். பிறரையும் இந்த சமூகத்தையும் வளர்ச்சிக்கு இட்டுச்செல்லும்  என்றால் நாம் கண்டனம் செய்யலாம். ஆனால் பெரும்பாலான கண்டனங்கள் தங்களுடைய தவற்றை மறைத்து பிறரைத் துன்பத்திற்கும் தண்டனைக்கும் உட்படுத்துவதாக அமைகின்றன. இத்தகைய மனநிலை பிறரை ஆளுமைச் சிதைவுக்கு உட்படுத்துகிறது. இத்தகைய மனநிலையோடு நம்மோடு வாழக் கூடியவர்களை நாம்  கண்டனம் செய்தால் ஆனால் கடவுளின் பார்வையில் இருந்து நாம் தப்பிக்க முடியாது.ஏனெனில் நம் கடவுள் கண்டனம் செய்யும் கடவுளில்லை.

நான்காவதாக "மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள்" என்று இயேசு கூறுகிறார். மன்னித்தல் என்பது கிறிஸ்தவ வாழ்வின் முக்கியமான பண்பாக கருதப்படுகின்றது. நாம் பிறரை மன்னிப்பது மன்னிப்பு அவருக்கு தேவைப்படுகிறது என்பதற்காக அல்ல; மாறாக,  நாம் மன அமைதியோடு வாழ வேண்டும் என்பதற்காக. நாம் பிறரை மன்னிக்கும் பொழுது மன அமைதியை பெற்று மனஅழுத்தத்திலிருந்து விடுதலைப் பெற முடியும். இந்த  தவக்காலத்தில் மன்னிப்பு என்ற உன்னதமான பண்பின் வழியாக மனஅமைதியையும் கடவுளின் அருளையும் பெற முயற்சி செய்வோம்.

ஐந்தாவதாக "கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்.'' என்று இயேசு கூறியுள்ளார். உண்மையான கிறிஸ்தவ வாழ்வு என்பது நம்மிடம் இருப்பதைப் பிறரிடம் பகிர்ந்து வாழ்வதாகும். தொடக்கத்தில் திருஅவையில் கிறிஸ்தவர்கள் அனைத்தையும் பொதுவாய் வைத்திருந்தனர். தங்களிடம் இருப்பதை ஒருவர் ஒருவரோடு பகிர்ந்து கொண்டனர். எனவேதான் அந்த கிறிஸ்தவ வாழ்வு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. துன்பத்தின் மத்தியிலும் தொடக்க கால கிறிஸ்தவர்கள் சான்று பகர்ந்தனர். ஆண்டவர் இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் பொருளாதாரம் நிறைந்த மக்கள் ஏழைகளோடு பகிர மனமில்லாமல் இருந்தனர். எனவேதான் கொடுத்தல் வழியாகத்தான் நிறைவாக பெறமுடியும் என்றும் நாம் எந்த அளவுக்கு கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு நாமும்  பெறுவோம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். தவக்காலம் நம்மிடம் இருப்பதைப் பிறரோடு பகிர்ந்து கொள்ள அழைப்பு விடுக்கின்றது. நாம் எந்த அளவுக்கு பிறருக்கு நம்மிடம் நிறைவாய் இருப்பதை கொடுக்கிறோமோ, அந்த அளவுக்கு கடவுளின் அருளையும் இரக்கத்தையும் பெறமுடியும்.

உண்மையான கிறிஸ்தவ வாழ்வை வாழ இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு வழிகாட்டியாக இருக்கின்றது. எனவே தவக்காலத்தில் இரக்கமுள்ளவர்களாகவும் பிறரைத் தீர்ப்பளிக்காதவர்களாகவும் மற்றவர்களைக் கண்டனம் செய்யாதவர்களாகவும் பிறரை மன்னிப்பவர்களாகவும் பிறருக்கு கொடுப்பவர்களாகவும் வாழ்ந்திடத் தேவையான அருளை வேண்டுவோம். அவ்வாறு வாழ்கின்ற பொழுது நாம் உண்மையான கிறிஸ்தவ வாழ்வை வாழ்ந்து, இறையாட்சியின் மதிப்பீடுகள் இவ்வுலகத்தில் உயிரோட்டம் பெற உதவும் கருவிகளாகப் பயன்பட முடியும்.

இறைவேண்டல் :
வல்லமையுள்ள இறைவா! இந்த தவக்காலத்தில் நாங்கள் உயிரோட்டமுள்ள கிறிஸ்தவர்களாக வாழ்ந்திட தேவையான அருளைத் தாரும்.  ஆமென்.

Add new comment

12 + 5 =