யார் மீது அன்பு கொண்டுள்ளோம்? உலகின் மீதா? தந்தையின் மீதா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


Daily Reflection - December 29, 2021

கிறிஸ்து பிறப்பின் எண்கிழமையில் 6ஆம் நாள் 
I : 1யோ:  2:12-17
II: திபா 95:7-10
III : லூக் 2:36-40

இன்றைய இறைவார்த்தை வழிபாடு நம்மைத் தந்தையின் பால் அதிக அன்பு கொண்டுள்ளவர்களாக வாழ அழைப்பு விடுக்கின்றது. நாம் அனைவரும் கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் தந்தைக் கடவுளை அன்பு செய்வதைப் பற்றி சிந்திப்பது பொருத்தமானதாகும். ஏனெனில் கிறிஸ்து தன் தெய்வநிலையைப் பற்றிக்கொள்ளாமல் மனிதனாக உருவெடுத்து தந்தைக் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றி தந்தையின் பால் தாம் கொண்டுள்ள அன்பை உறுதிப்படுத்தினார். ஆம் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதே அவரை அன்பு செய்வதற்கான அடையாளம். 

இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர் யோவான் "தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுபவர் என்றும் நிலைத்திருப்பார் " என்று கூறி நாம் நிலைவாழ்வைப் பெற கடவுளின் விருப்பத்தை நாம் நிறைவேற்ற வேண்டும் என்ற கருத்தை உறுதியாகக் கூறியுள்ளார். அத்தோடு தந்தையிடமிருந்து வருபவை எவை, உலகத்திடமிருந்து வருபவை எவை என்பதையும் நமக்குத் தெளிவாகப் பட்டியலிட்டுள்ளார். உடல் இச்சை,  இச்சைநிறைந்த பார்வை,  செல்வச் செருக்கு போன்ற உலக மாயைகள் கடவுளிடமிருந்து நம்மைப் பிரிக்கக் கூடியதாய் உள்ளன.  இவற்றையெல்லாம் நாம் விலக்கி தந்தையை நோக்கி அவர் விருப்பத்தை நிறைவேற்றுபவர்களாய்  பயணிக்க வேண்டும் என  யோவான் நமக்கு அறிவுறுத்துகிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றிய அன்னா என்ற பெண் இறைவாக்கினர் பற்றி நாம் வாசிக்கிறோம். திருமணமாகி ஏழு ஆண்டுகளில் அவர் விதைவையானார் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியென்றால் அவர் இளம் வயதிலேயே விதவையாகிவிட்டார் என நாம் அறிய முடிகிறது. அந்த இளம் வயதில் கூட உலக மாயக்கவர்ச்சிகளுக்குத் தன்னை உள்ளாக்காமல் கோவிலிலேயே தங்கி கடவுளுக்குப் பணிசெய்தார் அவர். அதற்குப் பரிசாக இறைமகனைப் காணும் பாக்கியம் பெற்றார் அன்னா.

ஆம் அன்புக்குரியவர்களே,நாம் வாழும் அறிவியல் உலகம் நம்மைக் கடவுளிடமிருந்து பிரிக்க பல புதிய கவர்ச்சிகளை நமக்குக் காட்டுகின்றது. அவையெல்லாம் தந்தையின் விருப்பத்தை நாம் நிறைவேற்றுவதைத்தடுக்கின்றன. எனவே நாம் தந்தையிடமிருந்து வருபவைக்கும் உலகம் தருபவைக்கும் இடையேயான வேற்றுமையை நன்கு அறிந்து, தந்தையின் விருப்பத்தை நம் விருப்பமாகத் தேர்ந்தெடுத்து உலகைவிட மேலாக தந்தையை அன்பு செய்ய முயற்சிப்போம். அதுவே நமக்கு நிலைவாழ்வைப் பெற்றுத்தரும்.

இறைவேண்டல்:

தந்தையே இறைவா! இந்த உலகத்தைவிட மேலாக உம்மை நாங்கள் அன்பு செய்யவும் உம் விருப்பத்தை நிறைவேற்றவும் வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

4 + 12 =