யாருக்கு செவிசாய்க்க வேண்டும் கடவுளுக்கா? அதிகாரத்திற்கா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பாஸ்கா எண் கிழமை -சனி 
I: தி. ப : 4: 13-21
II :  தி பா:118: 1,14-15. 16,18. 19-21
III: மாற்கு 16: 9-15

உண்மைக்கும் மனசாட்சிக்கும் செவிசாய்க்கும் மனிதர்களை காண்பது நாம் வாழும் இன்றைய சமூகத்தில் அரிதான செயலாகத்தான் இருக்கிறது. ஏனெனில் உண்மைக்கும் மனசாட்சிக்கும் பயந்து வாழ்ந்தால் நாம் நிம்மதியாகவும் அமைதியோடும் வாழ இயலாத நிலை உருவாகிவிட்டது. பொய்மையும் அதிகார வர்க்கமும் உலகை பயமுறுத்தி வாழ்ந்துகொண்டிருக்கும் காலம் நாம் வாழ்கின்ற காலம். இத்தகைய சூழ்நிலையிலும் நாம் உண்மையாகவும் மனசாட்சியோடும் கடவுளின் குரலுக்கு செவிமடுக்கின்றவர்களாக வாழும் போது இயேசுவின் உண்மையான நம்பிக்கையுள்ள சீடர்களாக மாறமுடியும். 

இன்றைய முதல் வாசகத்தில் பேதுருவும் யோவானும் அதிகாரத்தில் இருக்கின்ற யூதர்களால் பயமுறுத்தப்படுகின்றனர். இயேசுவின் பெயரால் நற்செய்தி அறிவிக்கக் கூடாதென அதட்டினார்கள் அவர்கள்.  அதற்கான பின்புலம் என்ன? பலயூதர்கள் இயேசுவை நம்ப ஆரம்பித்தனர். தவறாக இயேசு தண்டிக்கப்பட்டார் என உணர ஆரம்பித்தனர். தங்கள் தவறுகளை எண்ணி வருந்தத் தொடங்கினர். இந்நிலை தொடர்ந்தால் யூதர்கள் அதிகாரத்தில் இருந்த அதாவது தலைமைக்குரு, மறைநூல் வல்லுநர்கள் மேல் நம்பிக்கை இழக்கக் கூடும். அவர்கள் மேல் எல்லாப் பழியும் விழும். இதனால் மக்கள் தங்களை எதிர்ப்பார்கள். தங்களுடைய அதிகாரம் போய்விடும் என்பதே.

ஆனால் பேதுருவும் யோவானும் அதிகாரம் கொண்ட யூதர்களின் மிரட்டலுக்கு பயப்படவில்லை. "நாங்கள் கடவுளுக்கு தான் செவிசாய்ப்போம்" என திட்டவட்டமாகத் தெரிவித்தனர். "நாங்கள் கண்டதையும் கேட்டதையும் அறிவிக்காமலிருக்க எங்களால் இயலாது "எனத் துணிச்சலுடன் கூறினார்கள். அவர்கள் கண்டதையும் கேட்டதையும் அல்ல மாறாக இயேசுவோடு அவர்களுக்கு உள்ள அந்த அனுபவங்களை உண்மையோடும் மனசாட்சியோடும் கடவுளுக்கு செவிசாய்த்தவர்களாய் அறிவித்தார்கள். 

அன்புக்குரியவர்களே நம்மிலே எத்தனை பேர் நம் நம்பிக்கையை வெளிக்காட்ட பயப்படுகிறோம்? உலகிற்கு பயந்து உண்மையை மறைக்கிறோம்? எத்தனைபேர் கடவுளுக்கு செவிசாய்க்காமல் மனிதனின் மிரட்டலுக்கு செவிசாய்க்கிறோம்? என்பதை ஆழமாக சிந்திப்போம்.
நற்செய்தியிலே நம் ஆண்டவர் இயேசு சீடர்களின் நம்பிக்கையின்மையைக் கடிந்து கொள்கிறார் என வாசிக்கிறோம்.நம் நம்பிக்கை ஆழமானதாக இருந்தால் கடவுளுக்கு செவிசாய்ப்பதை எந்த சக்தியாலும் தடுக்க இயலாது. கடவுளுக்கு செவிசாய்க்கத் தயாரா?

 இறைவேண்டல் 
அன்பு இறைவா! ஆழ்ந்த நம்பிக்கையோடு உம் குரலுக்கு செவிசாய்க்கும் வரத்தை எமக்குத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

1 + 0 =