முதிர்ச்சியுள்ள மனிதர்களா நாம்! | திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு


 

இன்றைய வாசகங்கள் (20.08.2020)பொதுக்காலத்தின் 20 ஆம் வியாழன்-I: எசே: 36: 23-28; II: 51: 10-11, 12-13, 16-17; III: மத்: 22: 1-14

"முதிர்ச்சியுள்ள மனிதர்களா நாம் "

கடவுள் மனிதனை தனது உருவிலும் சாயலிலும் படைத்தார். நாம் கடவுளை அறிந்து அன்பு செய்து அவரின் மதிப்பீடுகளை முதிர்ச்சியோடு வாழ்வாக்க அழைக்கப்பட்டுள்ளோம். இன்றைய நற்செய்தியில் அரசர் ஒருவர் திருமண விருந்திற்கு ஒரு சிலரை அழைப்பதாக நாம் பார்க்கிறோம். அரசர் விருந்து என்பது ஒரு மிகப்பெரிய கொண்டாட்ட நிகழ்வாகும். இதில் அழைக்கப்படுபவர் அரசரின் அன்புக்கு உட்பட்டவர்கள். ஒருவர் அரசரின் விருந்துக்கு அழைக்கப்படுகிறார் என்றால் அவர் சமூக நிலையில் உயர்ந்தவராக கருதப்படுவார்.

இன்றைய நற்செய்தியில் முதலில் அழைக்கப்பட்ட நபர்கள் அந்த அழைப்பை புறக்கணிக்கின்றனர். அழைப்பு விடுக்க வந்தவர்களை கேவலப்படுத்தி கொலை செய்தனர். இந்த நிகழ்வு இஸ்ரயேல் மக்களின் மனநிலையை சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது. அரசராகிய கடவுள் தாம் தேர்ந்தெடுத்த இஸ்ரயேல் மக்கள் மனமாற்றம் பெற்று மீட்புப் பெற வேண்டுமென பல்வேறு அரசர்கள், நீதித் தலைவர்கள், இறைவாக்கினர்கள் போன்றோரின் வழியாக அழைப்பு விடுத்தார். ஆனால் இஸ்ரேல் மக்கள் அந்த அழைப்பை பொருட்படுத்தாமல் இறைவாக்கு உரைத்த இறைவாக்கினர்கள் துன்புறுத்தினர். அவர்களின் குரலை கேட்காமல் பாவ வாழ்வு வாழ்ந்தனர். இத்தகைய மனநிலையை தான் இன்றைய நற்செய்தியின் முதற்பகுதி சுட்டிக்காட்டுகின்றது. மேலும் கடவுள் தம் பணியாளர்களை வழியாக விண்ணரசின் மதிப்பீடுகளை போதித்துக் கொண்டே தான் இருக்கின்றார். அந்த வாய்ப்பினை நாம் பயன்படுத்தி மனமாற அழைக்கப்பட்டுள்ளோம். விண்ணரசில் பங்கெடுப்பது என்பது திருமண விருந்தில் பங்கெடுப்பதற்கு சமமாகும். அது மகிழ்ச்சி நிறைந்த ஒரு கொண்டாட்டம். அந்தக் கொண்டாட்டத்தில் நாம் பங்கெடுக்கத் தூய உள்ளத்தோடு வாழ அழைக்கப்பட்டுள்ளோம். நாம் அழைப்பிற்கு ஏற்ற வாழ்வு வாழாமல் நம் மனம் போன போக்கில் வாழும் பொழுது இறுதிநாளில் நாம் தண்டனையைப் பெற வேண்டியிருக்கும். வாழ்வு பெறுவதும் தண்டனை பெறுவதும் நம்முடைய செயல்பாடுகளில் தான் இருக்கின்றது.

இன்றைய நற்செய்தியின் இரண்டாம் பகுதியானது அழைக்கப்படாத நபர்கள் அழைக்கப்படுவதாக சுட்டிக்காட்டுகின்றது. நல்லோரும் தீயோரும் அழைக்கப்பட்டு அவர்கள் திருமண விருந்து என்னும் விண்ணரசு வாழ்வுக்கு தகுதியுள்ளவர்களாக மாற்றிக் கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர் . திருமண ஆடை அணியாத ஒருவர் அரசரால் தண்டிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது. இதன் இறையியல் பின்னணி என்னவென்றால் விண்ணரசு என்ற திருமண விருந்துக்கு நல்லோர் தீயோர் அழைக்கப்பட்டாலும் தான் கடந்து வந்த பாவ வாழ்வை விட்டுவிட்டு தூய்மையை ஆடையாக அணிய அழைக்கப்பட்டுள்ளனர். மனம் மாறி தூய வாழ்வு வாழ வாய்ப்பிருந்தும் அதை பயன்படுத்தாத பொழுது இறுதித் தீர்ப்பு நாளில் நாம் தண்டனை பெறுவோம் என்பதை எச்சரிப்பதாகவும் இன்றைய நற்செய்தி இருக்கின்றது.

எனவே நம்முடைய அன்றாட வாழ்விலே விண்ணரசில் வீற்றிருக்கும் இறைவனின் பிரசன்னத்தில் பங்குகொள்ள நாம் தூய உள்ளத்தோடு முதிர்ச்சி நிறைந்த வாழ்வு வாழ அழைக்கப்பட்டுள்ளோம். திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவர்களாக மாறியுள்ள நாம் நாம் வாழும் இந்த கிறிஸ்தவ வாழ்வில் முதிர்ச்சி நிறைந்தவர்களாக வாழ தூய்மையான மனநிலையை பெற அழைக்கப்பட்டுள்ளோம். இறைவனின் சாயலில் படைக்கப்பட்ட மனிதர்கள் அனைவரும் கடவுளை நம்பி மீட்புப் பெற அழைக்கப்பட்டாலும், திருமுழுக்கு வழியாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவர்களாகிய நாம் கடவுளின் மீட்பை பெற நாம் சிறப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். எனவே முதிர்ச்சி நிறைந்த மனநிலையை பெற்றுக்கொள்ள தேவையான அருளை இன்றைய நாளிலே வேண்டுவோம்.

இறைவேண்டல் :

"அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தெரிந்தெடுக்கப்பட்ட வர்களோ சிலர் " என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப கிறிஸ்தவர்களாகிய எங்களுக்கு உம்முடைய விண்ணரசின் மதிப்பீடுகளை அறிந்து கொள்ள வாய்ப்பு கொடுத்ததற்காக நன்றி செலுத்துகின்றோம். விண்ணரசு என்ற திருமண விருந்தில் பங்குபெற எங்களுடைய தகுதியின்மையை அகற்றி தூய வாழ்வில் நிலைத்திருக்க அருளைத் தரும். ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

5 + 13 =