Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
முதிர்ச்சியுள்ள மனிதர்களாய் பிறரின் மாண்பைக் காப்போமா? | குழந்தை இயேசு பாபு | Daily Reflection
தவக்காலம் - நான்காம் வெள்ளி - I. 1 சாமு 7:4-5,2-14,6; II. திபா: 89:1-2.3-4.26,28; III. உரோ: 4:13,16-18,22; IV. மத்: 1:16,18-21,24
ஒரு அலுவலகத்தில் ஒரு நபர் வேலை பார்த்து வந்தார். அவருக்கும் அவ்வலுவலக மேலாளருக்கும் புரிதல் என்பதே கிடையாது. அவ்வலுவலகம் கிளை அலுவலகம் என்பதால் அவ்வப்போது முதன்மை அலுவலகத்திலிருந்து மேலாளர் வந்து வேலைகள் எவ்வாறு செய்யப்ட்டுள்ளன என்பதைச் சரிபார்ப்பார். அவ்வாறாக அந்த முறையும் மேலாளர் வருவதாக அறிவிக்கப்பட்டது. ஒவ்வொருவரும் தங்களுடைய வேலைகளை முடிப்பதில் கவனமாக இருந்தனர். ஆனால் மேற்கூறிய அந்நபர் தன் கவனக்குறைவால் ஒரு பெரிய தவறு செய்துவிட்டார். மேலாளர் வந்து சரிபார்க்கும் போது அத்தவறைக் கண்டறிந்தார். அந்தத் தவறை செய்தவரைக் கண்டிக்க வேண்டும் என நினைத்து அனைவரையும் அழைக்க வேண்டும் என கூறிய போது, அக்கிளையின் மேலாளர் மற்றவர் முன் அவரைக் கண்டிக்க வேண்டாம். அவரைத் தனியாக அழைத்துப் பேசலாம் எனக் கூறினார். உடனே அந்த மேலாளர் "உங்கள் இருவருக்கும் புரிதலே இல்லாவிட்டாலும் கூட மற்றவர் முன் அவரைக் குறை கூற வேண்டாம் என எண்ணுவது பாராட்டுக்குரியது" எனக் கூறி அவரைத் தனியே அழைத்து தவறை சரி செய்தார்.
இன்றைய காலகட்டத்தில் ஒருவரை மற்றவர் முன் குற்றம் சுமத்தி,அவர் செய்கிற சிறு தவறைக் கூட மற்றவர் முன் வெளிச்சம் போட்டுக் காட்டி அவமானப்படுத்துதல் என்பது நடைமுறையாகிவிட்டது. பொறுப்பில் உள்ளவர்கள் பொது இடங்களில் ஒருவரைத் தண்டிக்கும் நிகழ்வுகளை நாம் கண்டிருப்போம். அதிலும் அம்மனிதர்கள் நமக்குப் பிடிக்காதவர்கள் என்றால் பிறர் முன் அவர்கள் பெயரைக் கெடுப்பதில் நமக்கெல்லாம் ஒரு ஆனந்தம். இது நம்முடைய முதிர்ச்சியற்ற மனநிலையைத் தான் காட்டுகிறது. யாராயிருந்தாலும் அவர்களுடைய மாண்பை பிறர் முன் நாம் காயப்படுத்தக் கூடாது. அவ்வாறு நடைபெறும் இடங்களில் பிறரின் மரியாதையையும் மாண்பையும் காக்கும் மனிதர்களாக நாம் மாற வேண்டும்.
இன்று நாம் பெருவிழாக் கொண்டாடும் இயேசுவின் வளர்ப்புத் தந்தை புனித யோசேப்பு, முதிர்ச்சியோடு பிறரின் மாண்பைக் காப்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாய்த் திகழ்கிறார். மரியாவோடு மண ஒப்பந்தம் ஆகியிருந்த நிலையில், மரியா கருவுற்றிருந்ததை அறிய வந்தார் யோசேப்பு. எல்லாருக்கும் இயல்பாக எழும் சிந்தனை அவருக்குள்ளும் எழுந்திருக்கும். அவர் மரியாவை ஏற்றுக் கொள்ளத் தயங்கினார். ஆனால் அவர் மரியாவை மற்றவர் முன் இழிவு படுத்த வரும்பவில்லை. அவருடைய இந்த மனமுதிர்ச்சி அவர் சிறந்த நீதிமான் என்பதற்குச் சான்று.
புனித யோசேப்புவைப் பற்றி அதிகமான விவவிலியக் குறிப்புகள் இல்லை. ஆனால் அவருடைய அமைதியான வாழ்வு, நீதிமானாய் வாழ்ந்த பாங்கு, இறைத்திட்டத்தை ஏற்றுக் கொண்ட விதம் அனைத்தையும் நாம் இன்றும் அதிகமாகவே சிந்திக்கிறோம். புனித யோசேப்பு, கல்வி, குடும்பத் தலைவர், உழைப்பாளிகள், கன்னியர்கள், நல் மரணம் என பலவற்றிற்கும் பாதுகாவலராய்த் திகழ்கிறார்.
அவருடைய விழாவைக் கொண்டாடும் இந்நாளில் அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பண்பு, முதிர்ச்சியுள்ள மனிதர்களாய் வாழ்ந்து, பெருங்குற்றமே புரிந்தவர்களாயினும் அவர்களை மற்றவர் முன் அவமானப்படுத்தாமல் அவர்களின் மதிப்பை காப்பதாகும். இத்தகைய அருங்குணம் நம்மில் வளர புனித யோசேப்பு வழியாக மன்றாடுவோம்.
இறைவேண்டல்
அன்பு இறைவா! உமது திருஉளத்தை நிறைவேற்றிய நீதிமான் யோசேப்புவைப் போல முதிர்ச்சியுள்ள மனிதர்களாய் பிறரின் மாண்பைக் காப்பவர்களாக வாழ வரம் தாரும். ஆமென்.
Add new comment