முதல் தமிழ் திருவிவிலியம்


First Tamil Bible

செர்மானியரின் உதவியுடன் இறக்குமதி செய்யப்பட்ட அச்சு இயந்திரத்தில் “இந்துக்களுக்கு ஒரு கடிதம்” என்ற நூலை சீகன்பால்கு அவர்கள் அச்சிட்டுக் கிறித்தவ சமயத்தின் சாரத்தை வெளிப்படுத்தினார். தமிழில் கிறித்தவ சமய உண்மைகள், நற்செய்தி போன்ற நூல்கள் வெளியிடப்பட்டன. சீகன்பால்கு திருவிவிலியத்தின் புதிய ஏற்பாட்டு நூலைத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினார். மொழிபெயர்ப்புக்கு உதவியாக கிரேக்க, இலத்தின் மொழிபெயர்ப்புக்களைப் பயன்படுத்தினார். 

நீண்ட கடின முயற்சியால் 1711 ஆம் ஆண்டு மொழிபெயர்ப்பை முடித்தார். 1714 இல் புதிய ஏற்பாடு முதன் முதலில் தமிழில் அச்சிடப்பட்டு வெளியானது இந்திய வரலாற்றில் மறக்க இயலாத ஒன்றாகும். படிக்காத பாமர மக்களுக்கு இது எப்படிப் பயன்படப் போகிறது போன்ற விமர்சனங்கள் எழுந்தாலும் மனந்தளராமல் சீகன்பால்கு தனது பணியைத் தொடர்ந்தார்.

சீகன்பால்குவின் தமிழ்த் தொண்டு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும். தொடக்கத்தில் அச்சிடப்பட்ட தமிழ்ப் புத்தகங்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டதால் ஓலைச் சுவடிகளில் பழக்கப்பட்ட தமிழர்கள் முதன்முதலில் புத்தகங்களைக் கரங்களில் தழுவி வாசித்து மகிழ்ந்தனர். 

சீகன்பால்குக்கு முன்பே 16 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலிருந்து பணியாற்றிய இயேசு அவையினர் கேரள மாநிலத்தில் அச்சு இயந்திரம் நிறுவித் தமிழ் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டாலும் அவைகள் அவர்களுக்கு மட்டுமே பயன்பட்டதன்றி பொதுமக்களை விரிவாகச் சென்றடையவில்லை. 

ஆனால் பொதுநிலையினர் அனைவருக்கும் அச்சுப்புத்தகம் கிடைக்கச் செய்த பெருமை சீகன்பால்குவையே சாரும் என்பதில் சிறுதும் ஐயமில்லை (நன்றி: திருஅவை வரலாறு-8, முனைவர் திரவியம், 166).

திருஅவையில் ஒரு மனிதனின் அயராத உழைப்பு, உந்துசக்தி அந்த மனுட சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வித்திட்டிருக்கின்றது. அச்சுப் புத்தகங்கள் வெளியிடுவது மட்டுமல்ல, அதை வாசிப்பதற்கும் அவர்கள் வாசிக்கப்படுவதற்கும் அவசியம் கல்வி என்பதனை உணர்த்தி, மக்கள் வாழ்வை வளம்பெறவும் உந்துசக்தியாக இருந்திருக்கிறார்.

நாம் வாழும் இக் காலக்கட்டத்தில் நம்மிடம் இருக்கும் ஆற்றல் நம் வாழ்வைச் சீரமைக்கின்றதா? வளப்படுத்துகின்றதா? வாழ்விற்கான துணிவினைக் காட்டுகின்றதா?

Add new comment

5 + 11 =