மீண்டும் சிறுபிள்ளைகளாய்! | திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு


children-like

இன்றைய வாசகங்கள் (11.08.2020) - பொதுக்காலத்தின் 19 ஆம் செவ்வாய் - I. எசே. 2:8-3:4; II. திபா. 119:14,24,72,103,111,131; III. மத். 18:1-5,10-14 

விளையாடிக்கொண்டிருந்த இரு சிறுகுழந்தைகளுக்கிடையே திடீரென சண்டை மூண்டது. அதைப்பார்த்த பிள்ளைகளின் பெற்றோர்கள் உன் பிள்ளை மேல் தான் தவறு என மாறி மாறி குற்றம் சாட்டத் தொடங்கினர். குழந்தைகளின் பிரச்சினை இப்போது பெரியவர்களின் பிரச்சினை ஆகிவிட்டது. சுவாரசியமாக சண்டை போட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு தங்கள் குழந்தைகள் நினைவு வரவே தேடத்தொடங்கினர். என்ன ஆச்சரியம் குழந்தைகள் தங்களுக்குள் சமாதனம் செய்து கொண்டு வழக்கம் போல விளையாடிக்கொண்டிருந்தார்கள். இதைப் பார்த்த பெரியர்கள் தலைகுனிவுடன் சண்டை போடுவதை விட்டு விட்டு தங்கள் வேலையை மீண்டும் தொடர்ந்தனர். 

இன்றைய வாசகங்கள் மூலம் கடவுள் நம்மை மீண்டும் சிறு பிள்ளைகளாக மாற அழைக்கிறார். மீண்டும் சிறுபிள்ளைகள் ஆவது எப்படி ? மீண்டும் கருவினுள் சென்று அல்ல; மாறாக, நம்முடைய மனநிலையை மாற்றுவதன் மூலமாக சிறு பிள்ளைகளாக நம்மால் மாறமுடியும். 

சிறுபிள்ளைகள் திறந்த மனதுடையவர்கள். பகைமை பாராட்ட மாட்டார்கள். நல்லவற்றை வியந்து பாராட்ட கூடியவர்கள். நான் தான் பெரியவன் என்று தம்பட்டம் அடிக்க மாட்டார்கள். புதியனவற்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உடையவர்கள். சண்டை போட்டுக் கொண்டாலும் விரைவில் சமாதானம் செய்து கொள்வார்கள். அனைவரையும் ஏற்றுக் கொள்வார்கள். யாரையும் தள்ளி வைக்க மாட்டார்கள். இருப்பதை பகிர்ந்து கொள்ளக் கூடியவர்கள். இல்லை என்று வருபவர்களுக்கு இரக்கம் காட்டக் கூடியவர்கள். சிறு பிள்ளைகள் தவறு செய்ய பயப்படுவார்கள். அப்படித் தவறு செய்தாலும் அதை திருத்திக் கொள்ள முயலுவார்கள். இத்தகைய மனநிலையை கொண்டிருக்கத் தான் இயேசு நம் ஒவ்வொருவரையும் என்று அழைக்கிறார். 

சிறு குழந்தைகளாக இருந்த பொழுது நாமும் இப்படித்தான் வாழ்ந்திருப்போம். ஆனால் வளர வளர நமக்குள் எத்தனை மாற்றங்கள் . நான் தான் பெரியவன் என்ற எண்ணம் பகைமை பாராட்டுகின்ற குணம் பிறர் செய்த நன்மைகளை வியந்து பாராட்டாத குணம் பொறாமை எண்ணங்கள் போன்றவை நாம் வயதில் பெரியவர்களாக இருந்தாலும் நம்மை குணத்தில் மிகச்சிறியவர்களாக மாற்றிவிடுகிறது. இவ்வாறு நாம் குணத்தில் சிறியோராகி கடவுளின் மந்தையினின்று பிரிந்து சென்று விடுகின்றோம். 

கடவுள் தாம் அன்பு செய்கின்றவர்களில் ஒருவர் கூட தன்னை விட்டு பிரிந்து சென்று விடக்கூடாது என்பதில் மிகவும் கண்ணும் கருத்துமாய் இருக்கின்றார். தாயானவள் தன் பிள்ளைகள் எப்படி போனாலும் பரவாயில்லை என்று ஒருநாளும் எண்ண மாட்டாள். ஒரு நல்ல ஆசிரியர் மிகவும் பின்தங்கிய மாணவரை அப்படியே விட்டுவிட மாட்டார். அதைப் போலத்தான் கடவுளும் தன் பிள்ளைகள் வழிதவறி செல்ல விடுவதில்லை. இதையே தொன்னூற்று ஒன்பது ஆடுகளை விட்டுவிட்டு வழிதவறிய ஒரு ஆட்டைத் தேடி ஆயன் செல்கிறார் என்ற இறைவார்த்தை நமக்கு உணர்த்துகிறது. 

"மானிடா ! நீ காண்பதைத் தின்று விடு. இச்சுருளேட்டைத் தின்றபின் இஸ்ரயேல் வீட்டாரிடம் போய்ப் பேசு" என்ற வார்த்தைகள் வழிதவறிச் சென்ற இஸ்ரயேல் வீட்டார் மீது யாவே இறைவன் கொண்டிருந்த தாய் உள்ளத்தை சுட்டிக் காட்டுகிறது. கடவுள் கொடுத்த சுருளேட்டை எசேக்கியல் தின்றது கடவுளுடைய வார்த்தையை ஒருவர் செவியால் கேட்டு அதைத் தன்மயமாக்கி கொள்வதன் அடையாளமாக நாம் எடுத்துக் கொள்ளலாம். கடவுளின் வார்த்தையை கேட்ட எசேக்கியல் அதை நம்பினார். அதை தனது இதயத்தில் அழியாமல் பதித்துக் கொண்டார். அதன்படி வாழ்வதற்கு முயற்சித்தார். அதன்பிறகு அதே வார்த்தையை அவர் பிறருக்கு எடுத்துரைக்கவும், அதைக் கேட்பவர் ஏற்றுக்கொள்ள செய்யவும் அவரால் முடிந்தது. 

எனவே நம்முடைய அன்றாட வாழ்விலே நாம் அனைவரும் இறைத் தந்தையின் பிள்ளைகள் என்ற மனநிலையில் வாழ வளர அழைக்கப்பட்டுள்ளோம். மேலும் எசேக்கியல் கொண்டிருந்த மனநிலையைப் போல இறைவார்த்தையை ஆழமாக ஏற்றுக்கொண்டு அதை நம்பி பிறருக்கு எடுத்துரைக்கும் கருவிகளாக மாற குழந்தைகளின் உளவியல் மனநிலையை நமதாக்குவோம். "நான்" என்ற ஆணவத்தை விட்டு விட்டு "நாம்" என்ற பிறர் நலத்தில்வாழ குழந்தைகளின் மனநிலையை பெற்றுக்கொள்வோம். அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்வோம். குழந்தை மனநிலையை பெற்று இறைவார்த்தையை உள்வாங்கி இறையாட்சியின் கருவிகளாக மாற தேவையான அருளை வேண்டுவோம். 

இறைவேண்டல்

வல்லமையுள்ள இறைவா! எசேக்கியலைப் போல இறைவார்த்தையை நம்பி அதை ஏற்று அதை பிறருக்கு அறிவிப்பவர் களாகவும் குழந்தை மனநிலையை பெற்றுக்கொண்டு இயேசுவின் இறையாட்சி பணியாளர்களாக மாறவும் தேவையான அருளைத் தரும். ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

14 + 0 =