மீட்புப் பெற ஒரே வழி மனநிலை மாற்றம்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


திருவருகைக் காலம் இரண்டாம் வெள்ளி
I : எசா:   48: 17-19
II: திபா: 1: 1-2. 3. 4,6
III : மத்:   11: 16-19

ஒரு பங்கில் பங்குப் பணியாளர் மிக ஆர்வத்தோடு பணிகள் அனைத்தையும் செய்து வந்தார். மக்களுக்கு எது நல்லது என தென்பட்டதோ, அவற்றை முழு ஈடுபாட்டோடு  செய்து வந்தார். ஆனால் மக்களோ அவர் செய்வதை ஒரு பொருட்டாக கருதாமல், அவரை குறைக்காணும் மனநிலையோடு விமர்சனம் செய்தனர்.  இதனைக் கண்டு பங்குப்பணியாளர் மிகவும் வருத்தமுற்றார்.  ஒரு சில நேரங்களில் இவர்களுக்கு ஒன்றுமே செய்யக்கூடாது என்ற நிலைக்கு கூட அவர் சென்றார். இறுதியிலே தனிமையாக செபித்துக் கொண்டிருக்கும் பொழுது   ஆண்டவர் முன் தான் செய்த  பணிகளைக் குறித்து தியானித்துப் பார்த்தார். அப்போதுதான் ஒரு உண்மை புலப்பட்டது. இயேசு எண்ணற்ற பணிகள் செய்த போதிலும்,  அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஆனால் அவர் மனம் தளரவில்லை. இறுதிவரை சென்ற இடமெல்லாம் நன்மைகளையே செய்து வந்தார். அந்த அருள்பணியாளரும்   அதன் பிறகு விமர்சனங்களை கண்டு அஞ்சி நடுங்காமல் கடவுளின்  துணையோடும் மனத் துணிவோடும் தொடர்ந்து பணிகளை ஆற்றி வந்தார்.

மீட்புப் பெறுவதற்கு மனநிலை மாற்றம் வேண்டும். இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் எல்லோரும் இயேசுவின் வார்த்தைகளை நம்பி மீட்பு பெறவில்லை. திருமுழுக்கு யோவான் வாழ்ந்த காலகட்டத்தில் எல்லோரும் அவருடைய வார்த்தைகளை நம்பி மீட்பு பெறவில்லை. இவையெல்லாம் எதனை சுட்டிக்காட்டுகிறது என்றால் முழுமையாக இறைவார்த்தையை நம்பியவர்கள் மனநிலையிலும் வாழ்விலும் மாற்றமடைந்து மீட்பு பெற்றனர். 

ஆனால் இறைவார்த்தையை மேலோட்டமாக ஏற்றுக்கொண்டு தங்களுடைய பெயருக்கும் புகழுக்கும் முக்கியத்துவம் கொடுத்த பரிசேயர்களாலும்  சதுசேயர்களாலும் மறைநூல் அறிஞர்களாலும் இயேசு தந்த மீட்பினை  உணர முடியவில்லை. ஏனெனில் இந்த கூட்டத்தினர் காட்டில் வாழ்ந்து ஆண்டவருடைய வழியை ஆயத்தப்படுத்திய திருமுழுக்கு யோவானை "உண்ணவுமில்லை குடிக்கவுமில்லை எனவும் பேய் பிடித்தவன்"  எனவும் கூறினர். மக்களோடு மக்களாக இருந்து பணிசெய்த ஆண்டவர் இயேசுவை பார்த்து "இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன்,  வரி தண்டுப்பவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்" கூறினார்கள். இவற்றைக் காணும் போது ஆண்டவர் இயேசுவுக்கு சற்று தளர்வை கொடுப்பதாக இருந்தாலும் துணிவோடு தன்னுடைய பணியை செய்தார்.

நாம் வாழுகின்ற இந்த வாழ்க்கையில்  நன்மை செய்தாலும் நம்மை  சுற்றியுள்ள மக்கள் நம்முடைய செயல்களைக் கண்டுகுற்றம் காணக் கூடிய மனநிலை அதிகம் இருக்கும். ஆனால் அவற்றைக் கண்டு துவண்டுவிடாமல் மனவுறுதியோடு வாழ அழைக்கப்பட்டுள்ளோம். மேலும் கடவுளுடைய அருளை நிறைவாக பெறுவதற்கு நம் அடிப்படை மனநிலையிலேயே மாற்றம் வேண்டும். கடவுளின் வார்த்தையை முழுமையாக நம்பி நம்முடைய பாவ வாழ்விலிருந்து மனமாற்றம் அடைந்து கடவுளுக்கு உகந்த  வாழ்வு வாழ முயற்சி செய்ய வேண்டும். அப்பொழுது தான் இயேசு கொண்டு வந்த மீட்பை முழுமையாக அனுபவிக்க முடியும். அதற்கு மனமாற்றம் என்ற மனநிலையும் மனவுறுதி என்ற மனநிலையும்  நாம் கொண்டிருக்க வேண்டும். அதற்குத் தேவையான அருளை இன்றைய  நாளிலே வேண்டுவோம்.

 இறைவேண்டல்
அன்பான ஆண்டவரே!  மன உறுதியோடும் பாவத்திலிருந்து விலகி மனமாற்றத்தோடும் வாழ்ந்திட அருளைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

5 + 5 =