மனிதாபிமானமா? விதிமுறையா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலம் 22 ஆம்   சனி; I: கொலோ:  1: 21-23; II : தி.பா: 54: 1-2. 4,6; III: லூக்: 6: 1-5

மருத்துவ மனையில் மருத்துவரைப் பார்க்க டோக்கன் வாங்கிக்கொண்டு வரிசையாக அமர்ந்திருந்தனர் நோயாளிகள். அன்று மருத்துவர் சற்று தாமதமாகச் சென்றுவிட்டார். எனவே தங்கள் வேலைகளை விட்டுவிட்டு  வந்தவர்கள் கொஞ்சம் கோபமடைந்தனர். சீக்கிரம் மருத்துவரைப் பார்த்துவிட்டுச் செல்ல வேண்டும் என்று அவசரப்பட்டனர். அந்நிலையில்  வலியில் துடித்துக்கொண்டிருந்த வயதான பெண்ணை மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர்.    வரிசை எண் அடிப்படையில் செல்லக் காத்துக்கொண்டிருந்த அம்மனிதர் வயதான அப்பெண்மணி துன்பப்படுவதைக் கண்டு மனமிரங்கி தமக்கு முன் போக ஒப்புக்கொண்டார். ஆனால் அவருக்கு பின்னால் இருந்த சிலரோ , இப்போதுதானே வந்தார்கள் கடைசியில் செல்லட்டும். நாங்கள் தான் முதலில் வந்தோம் என சட்டம் பேசினார்கள். உடனே அம்மனிதர் எழுந்து "எனக்கு பதிலாக அவர் முன்செல்லட்டும். அவருக்கு பதிலாக நான் கடைசியில் செல்கிறேன். உங்களுக்கெல்லாம் மனிதாபிமானத்திற்கான விருது வழங்கவேண்டும் " என்று கோபமாகக் கூறிவிட்டு கடைசி இருக்கையில் சென்று அமர்ந்தார். இதைக் கேட்டவர்களில் சிலர் தங்கள் தலை கவிழ்ந்தவர்களாய் அமர்ந்திருந்தனர்.

அன்புக்குரியவர்களே இதைப் போன்ற அனுபவங்கள் நமக்கும் நடந்திருக்கும். மனிதனா?  விதிமுறையா?  என்ற கேள்வியில் விதிமுறைதான் என்ற விடை வரும்போது அவ்விடை நமக்காகக் கூறப்பட்டது என்றால் நாம் மனிதாபிமானத்தைதான் எதிர்பார்ப்போம். ஆனால் பிறரைக் குறித்ததாக இருந்தால் விதிமுறை யை உயர்த்திப்பிடிப்போம் அல்லவா? இத்தகைய மனநிலையைத் தான் அன்றைய பரிசேயர்கள் பிரதிபலித்தனர். 
மனிதனுடைய பசி அவர்களுக்கு பெரிதாகத் தெரியவில்லை. மாறாக ஓய்வுநாள் சட்டம் பெரிதாகத் தெரிந்தது.

ஓய்வு நாள் என்பது இஸ்ராயல்  மக்கள் மோசேவால் வழிநடத்தப்பட்ட  பொழுது வழங்கப்பட்டது. மோசே பல சட்டங்களை கடவுளின் பெயரால் கொடுத்தார். அச்சட்டங்கள் அனைத்தும் இஸ்ராயேல் மக்கள் பண்பட்ட மக்களாக வாழவேண்டும் என்பதற்காகக் கொடுக்கப்பட்டது. அவர்கள்  கடவுளை மறந்து வாழ்ந்தபோதும், அதிக வேலைப்பளுவினால் அடித்தட்டு மக்கள் துன்பப்பட்ட போதும் கடவுளை நினைத்து செபிப்பதற்காகவும்  உழைக்கும் மக்களுக்கு ஓய்வு தரும் விதமாகவும் இந்தச் சட்டங்கள் கொடுக்கப்பட்டன. ஓய்வுநாள் சட்டம் இஸ்ராயேல் மக்களின் வாழ்வில் பல்வேறு மாற்றத்தை கொடுத்து கடவுளை வழிபடுவதற்கு உதவியாக இருந்தது என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

ஆனால் இந்த ஓய்வுநாள் சட்டங்கள் அனைத்தும் பண்படாத இஸ்ராயேல் மக்களை பண்படுத்துவதற்காக ஒரு காலத்தில் தேவைப்பட்டாலும் இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் அவ்வளவு பெரிதாகத் தேவைப்படவில்லை. ஆனால் பரிசேயர்கள் சட்டங்களை தூக்கிப் பிடிப்பதன் வழியாக தாங்கள் தான் மோசேயின் வழிவந்தவர்கள் என்று பிதற்றக்கூடிய மனநிலை கொண்டவர்களாக வாழ்ந்தனர். அதன் வெளிப்பாடாகத் தான் இன்றைய நற்செய்தியில் ஓய்வுநாளில் சீடர்கள் கதிர் கொய்ததை பரிசேயர்கள் விமர்சனப்படுத்தினர். ஆனால் இயேசு அத்தகைய மனநிலையை விமர்சித்தார்.  மனிதன் ஓய்வு நாளுக்கு கட்டுப்பட்டவரில்லை. மாறாக, மனித மாண்புக்கும் மனிதநேயத்திற்க்கும் கட்டுப்பட்டவர். மனிதமா?  சட்டமா? என்று  சிந்தித்து  பார்த்தால் சட்டத்தை விட மனிதமே உயர்ந்து நிற்கும். மனிதம் மாண்புற வேண்டுமென்பதற்காகவே சட்டங்கள் இயற்றப்பட்டன. சட்டங்களுக்காக மனிதம் கிடையாது. சட்டங்கள் அவசியம்தான். ஆனால் அந்த சட்டங்கள் மனிதத்தையும் மனிதநேயத்தையும் சீர்குலைத்தால் அந்த சட்டங்கள் தேவையில்லை. இதைத்தான் ஆண்டவர் இயேசுவும் வலியுறுத்த விரும்பினார். எனவே நமது அன்றாட வாழ்வில் பரிசேயர்களைப் போல  இவ்வுலகம் சார்ந்த விதிமுறைகளை மேற்கோள்காட்டி மனிதத்தை இழக்கச் செய்கிறோமா?  அல்லது மனிதநேயத்திற்கும் மனித மாண்பிற்க்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றோமா? மனிதத்திற்கும் மனித நேயத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க நல்ல மனநிலை வேண்டி இறை ஆசி பெறுவோம்.

இறைவேண்டல் : 
வல்லமையுள்ள இறைவா! எங்களுடைய அன்றாட வாழ்வில் பல நேரங்களில் மனித நேயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இவ்வுலகம் சார்ந்த விதிமுறைகளை மேற்கோள்காட்டி பிறரை ஒடுக்கி இருக்கிறோம். அதற்காக இந்த வேளையில் மன்னிப்புக் கேட்கின்றோம். எங்களோடு வாழக்கூடிய சக மனிதர்களை நல் மனதோடு அன்பு செய்யக்கூடிய அருளைத் தாரும்.ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

9 + 2 =