மனமே இரையாதே! அமைதியாயிரு! | குழந்தைஇயேசு பாபு | SundayReflection


பொதுக்காலத்தின் பனிரெண்டாம்   ஞாயிறு; I: யோபு: 38: 1, 8-11; II: திபா: 107: 23-24. 25-26. 28-29. 30-31; III: 2 கொரி:  5: 14-17; IV: மாற்:  4: 35-41

தாய் வீட்டிலே பரபரப்பாக வேலைசெய்து கொண்டிருந்தாள். குழந்தையோ தொட்டிலில் உறங்கிக்கொண்டிருந்தது. அத்தாய் தீடீரென சமையலுக்குத் தேவையான மசாலாவை அரைக்க மிக்ஸியை இயக்கினார். அந்த சப்தத்தைக் கேட்ட குழந்தையோ அவ்விரைச்சலைக் கேட்டு அலறி அழுதது. குழந்தையின் அழுகுரலைக் கேட்டவுடன் தாயானவள் வேகமாக ஓடிச்சென்று குழந்தையைத் தூக்கி தன் தோள்மீது சாய்த்து சாந்தப்படுத்திவிட்டு மீண்டும் தன் வேலையை தொடர்ந்தார். இப்பொழுதும் அதே மிக்ஸி இயக்கப்பட்டது. அதே இரைச்சல் சப்தம் கேட்டது. ஆயினும் அக்குழந்தை அழவில்லை. காரணம் குழந்தை தன் தன் தாயின் அரவணைப்பை உணர்ந்த நிலையில் அவ்வளவு இரைச்சலுக்கு மத்தியிலும் அமைதியாகத் தன் உறக்கத்தைத் தொடர்ந்தது.

இரைச்சல் மிகுந்த உலகம் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இவ்வுலகம். போராட்டம் நிறைந்தது தான் நாம் வாழும் வாழ்க்கை. ஒரே சமயத்தில் பல பிரச்சினைகளைச் சமாளிக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் நம்மைக் கடந்து செல்கின்றன. எந்தப்பிரச்சினையை முதலில் தீர்ப்பது எதனை முதன்மைப்படுத்துவது என்ற சிக்கல் நடுக்கடலில் புயலில் சிக்கிய படகைப் போன்ற உணர்வை நம் வாழ்வில் ஏற்படுத்துகின்றன. இப்பிரச்சினைகளின் அழுத்தம் நம் மனஅமைதியைக் கெடுத்து பல நேரங்களில் நிம்மதியாக நம்மை உறங்கக் கூட விடுவதில்லை. நம்மில் பலருக்கு இது எதார்த்தமான அல்லது வாழ்க்கை வழக்கமாகவே மாறிவிட்டது.

இன்றைய நற்செய்தியில் கடலில் வீசிய பெருங்காற்றின் இரைச்சலால் அமைதியை இழந்து வாழ்வைத் தொலைத்துவிடுவோமோ எனப் பதறியச் சீடர்களை நாம் காண்கிறோம். அந்தச் சூழ்நிலையில் யாராயிருந்தாலும் பயமும் அச்சமும் ஆட்கொள்ளத்தான்  செய்யும். அப்படி என்றால் சீடர்களின் பயமும் பதைபதைப்பும் நியமானதே. ஆனால் இயேசுவோ சீடர்களின் பயத்தை, உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் அவர்களின் நம்பிக்கையின்மையைச் சுட்டிக்காட்டி கடிந்து கொள்கிறார். அதற்கான காரணத்தை நாம் சற்று ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.

சீடர்கள் கடலில் தத்தளித்த போது இயேசுவும் அவர்களோடு இருந்தார். இயேசு தீய ஆவி பிடித்தவரை குணமாக்கியதையும், காய்ச்சலால் அவதியுற்ற பேதுருவின் மாமியாரை குணப்படுத்தியதையும்  சீடர்கள் நேரில் கண்டார்கள். ஊரார் ஒதுக்கிவைத்த தொழுநோயாளரைக் குணமாக்கியதையும்,இன்னும் முடக்குவாதமுற்றவர், கை சூம்பியவர் என பலரை இயேசு குணமாக்கிய போது இயேசுவோடு சீடர்கள் உடனிருந்தார்கள். ஏன் அவருடைய வல்ல செயல்கள் கூட சீடர்கள் இயேசுவைப் பின்தொடர உந்துதலாக இருந்திருக்கும் அல்லவா? இப்படிப்பட்ட இயேசு தங்களோடு இருந்த போதிலும் அவர்கள் நம்பிக்கை இழந்து தவித்தனர். எனவே தான் இயேசு அவர்களைக் கடிந்து கொண்டார்.

சோதனைகளும், வேதனைகளும், இடறல்களும், சறுக்கல்களும், நம்முடைய சொந்த பலவீனங்களும் நம்வாழ்வில் பேரிரைச்சலைத் தரும்போது, சீடர்களைப் போலவே நாமும் கடந்து வந்த இறைநம்பிக்கை அனுபவங்களை மறந்து மனஅமைதியை இழந்து விடுகிறோம் என்பது தான் உண்மை. அச்சமயங்களில் இயேசுவின் பெயரால் நம் மனதை "இரையாதே, அமைதியாயிரு" என அடக்கி அமைதியுடனும் இயேசுவின் மேல் நம்பிக்கையுடனும் சிந்தித்து செயல்பட்டால் நமது வாழ்க்கைப் பயணம் இனிமையாகவே தொடரும். பிரச்சினைகள் என்னும் புயல் நம்மை அடக்காது. மாறாக நாம் அதை அடக்கி ஆள்வோம். தேவையற்ற மன இரைச்சல்களை இயேசுவின் பெயரால் அமைதிப்படுத்துவோமா?

இறைவேண்டல்

இயேசுவே! உம் உடனிருப்பை நம்பி எவ்வித இக்கட்டான சூழலையும் மனஅமைதியுடன் வென்றிட வரம் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

9 + 8 =