மனமாற்றத்தில் மீட்பு! | | குழந்தைஇயேசு பாபு


Conversion

பொதுக்காலத்தின் 34 ஆம் செவ்வாய் - I. தி.வெ: 14:14-20; II. திபா: 96:10,11-12,13; III. லூக்: 21:5-11

ஆண்டவர் இயேசுவின் வருகைக்காக ஆயத்தப்படுத்தும் விதமாக இன்றைய நற்செய்தி வாசகம் அமைந்துள்ளது. இன்றைய நற்செய்தியில் எருசலேமின் அழிவைப் பற்றி ஆண்டவர் கூறிய இறைவாக்கும், ஆண்டவர் நாள் தோன்றும் அறிகுறிகளும்வாசகமாக அமைகின்றன. ஆண்டவரின் வருகைக்காக நம்மையே மனமாற்றத்தோடு தயாரிக்க அழைக்கப்பட்டுள்ளோம். கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் நம்மையே நல்ல முறையில் தயாரித்து கடவுளுக்கு உகந்த வாழ்க்கையை வாழ்வது அவசியமாகும். திருவருகை காலத்திற்கு முந்தின வாரத்தில் இருக்கின்ற நாம் நம்மையே ஆண்டவர் இயேசுவின் வருகைக்கு ஆயத்தப்படுத்த அழைக்கப்பட்டுள்ளோம். இன்றைய நற்செய்தி வாசகம் திருவருகை காலத்தை தொடங்குவதற்கு முன்பாக நம்மை தயாரிக்கும் விதமாகவும் வழிபாட்டு ஆண்டின் இறுதி வாரத்தில் நம்மை மனமாற்ற வாழ்வுக்கு அழைத்துச் செல்வதாகவும்  அமைகின்றது.

ஆண்டவர் இயேசு இன்றைய நற்செய்தியில்  எருசலேம் ஆலயத்தின் அழிவைப் பற்றிப் பேசுகின்றார். "நல்ல கற்களாலும் பொருத்தனைக் கொடைகளாலும் அழகு செய்யப்பட்டுள்ளது. இதெல்லாம் கல்லின்மேல் கல் இல்லாதபடி இடிபடும்" (லூக்: 21:5-6) என ஆண்டவர் இயேசு எருசலேம் ஆலயத்தைப் பார்த்து கூறினார். யூத மக்களின் அடையாளமாக எருசலேம் ஆலயம் கருதப்பட்டது. இந்த ஆலயத்தை ஆண்டவர் இயேசு இடிபடும் என்று சொன்னபோது அனைவரும் கோபம் அடைந்தனர். ஆண்டவரின் ஆலயத்தை ஏன் இடிபடும் என சொல்ல வேண்டும் . இதற்குக் காரணம் யூத மக்கள் அகம் சார்ந்த ஆலயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் புறம் சார்ந்த ஆலயத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தனர். அவர்களுடைய உள்ளமும்  எண்ணமும் வாழ்வும் தீயதாக இருந்தது. இத்தகைய பாவ மோக வாழ்விலிருந்து விடுபட்டு ஒவ்வொருவருமே கடவுளின் ஆலயம் என்பதை மறவாமல் தங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள ஆண்டவர் இயேசு அழைப்புவிடுக்கிறார்.

ஆண்டவர் இயேசு எருசலேம் ஆலயத்தை இடிபடும் என்று கூறியது எதுவும் நிரந்தரமில்லை என்பதை சுட்டிக் காட்டுவதாகவும் இழுக்கின்றது. யூத மக்கள் எருசலேம் ஆலயம் மிகவும் வலிமையும் அழகும் வாய்ந்தது. எனவே இதை யாரும் அழிக்க முடியாது என்று கருதினர். ஆனால் நிலையானவை என்று கருதப்படுபவை எல்லாம் நிலையானவை அல்ல என்பதை உணர்த்தும் விதமாக ஆண்டவர் இயேசுவினுடைய செயல்பாடு அமைந்தது. ஆண்டவர் இயேசுவினுடைய வருகைக்காக ஆயத்தப்படுத்தும் பொழுது இந்த உலகம் சார்ந்த பணம் பட்டம் பொருள் ஆணவம் போன்றவை நிலையானவை என்று கருதி வாழும் பொழுது இவை அனைத்தும் நிலையற்றவை என்ற வாழ்வியல் பாடத்தை சுட்டிக்காட்டுகின்றது.

ஆண்டவரின் வருகையின்போது நாம் நம்மையே ஆயத்தப்படுத்த அழைக்கப்பட்டுள்ளோம். புறம் சார்ந்த ஆலயத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் அகம் சார்ந்த ஆலயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க அழைக்கப்பட்டுள்ளோம். இறைநம்பிக்கையில் வேரூன்றி தூய ஆவியின் வழிநடத்தலில் அகம் சார்ந்த ஆலயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொழுது வாழ்வில் துன்பங்கள் தடைகள் இடையூறுகள் எவ்வளவு வந்தாலும் மீட்பின் கனியை சுவைக்க முடியும். ஆண்டவர் வருகை எப்போது வந்தாலும் நம்  வாழ்வு மீட்பின் கனியைச் சுவைக்கும்.

புனித பிரான்சிஸ் சவேரியார் மனமாற்ற வாழ்வுக்கு மிகச்சிறந்த முன்னுதாரணமாக இருக்கின்றார். அவர் புனித இஞ்ஞாசியார் சந்திப்பதற்கு முன்பு இவ்வுலகம் சார்ந்த பணம் பட்டம் பதவி போன்றவற்றை நோக்கி தன் வாழ்வை அமைத்திருந்தார். ஆனால் ஆன்மாவை காத்துக் கொள்வதன் முக்கியத்துவத்தை அவர் அறிந்த பிறகு அனைத்தையும் துறந்து விட்டு கடவுளின் வார்த்தைக்காக தன்னைக் கையளித்து ஆன்மாவை மீட்டுக் கொள்வதற்கான வழியை தேடினார். எனவே நம்முடைய அன்றாட வாழ்வில் ஆண்டவர் இயேசுவினுடைய வருகைக்காகக் காத்திருக்கின்ற இந்த  வேளையில் நம்முடைய  அகம் சார்ந்த ஆலயத்தை தூய்மையாக வைத்துக் கொள்வோம். ஆண்டவர் இயேசு தன் உடலையே ஒரு ஆலயமாக சித்தரிக்கின்றார். அவரின் பிள்ளைகளாகிய நாமும் நமது உடலை ஆலயமாக நினைத்து தூய்மையாக வைத்து வாழும் பொழுது மீட்பின் கனியை சுவைக்க முடியும்.

எனவே சக்கேயுவைப் போல தீய வாழ்விலிருந்து மனமாற்றம் அடைந்து தூய வாழ்வு வாழ முன்வருவோம். நல்ல கள்வனைப் போல இறுதிகட்டத்திலும் கூட கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி மனமாற்றம் அடைந்து மீட்பின் கனியை சுவைப்போம். நம் வாழ்விலே மீட்பின் கனியை சுவைப்பதும் அல்லது இழப்பதும் நமது கையில் தான் இருக்கின்றது. எனவே நம்முடைய மனமாற்ற வாழ்வின் வழியாக தூய வாழ்வு வாழ்ந்து ஆண்டவர் இயேசுவைப் போல நடமாடும் ஆலயங்களாக மாறுவோம்.அதன் வழியாக நாம் மீட்பின் கனியைச் சுவைத்து ஆண்டவரின் வருகையில் அகமகிழ்வோம்.

இறைவேண்டல்
தூய்மையின் இருப்பிடமே எம் இறைவா!  எங்கள் உடல் நீர் குடியிருக்கும் ஆலயம் என்பதை மறந்து எங்களுடைய மனித பலவீனத்தின் காரணமாக பாவங்கள் பல செய்துள்ளோம். அதற்காக மன்னிப்பு வேண்டுகிறோம். சோதனைகளை வென்று மனமாற்றம் பெற்று உனது வருகைக்காக எங்களை எப்போதும் தயாரிப்பு செய்ய தேவையான அருளைத் தரும்.நிலையற்றவற்றில் எம் மனதைச் செலுத்தாமல் நிலையான உம் அன்பை நாடும் மனம் தாரும். ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

1 + 1 =