மகிழ்வான வாழ்வை பெற


14 Sunday of ordinary time

மனிதர்களாகிய நாம் இன்றைய காலகட்டத்தில் பலவிதமான சுமைகளை தூக்கி கொண்டு அலைகிறோம். இதன் விளைவாக நம்முடைய வாழ்வு சீரழிந்து, நிம்மதி இல்லாமல் கவலைக்கிடமாக இருக்கின்றது.பெரும்பாலும் நமக்கு நம்முடைய வாழ்க்கையை பற்றி மிகுந்த அச்சம் இருக்கின்றது. நாம் வாழுகின்ற இந்த வாழ்வு ஒவ்வொரு நொடிப்பொழுதும் மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் வாழக்கூடிய வாழ்வு. ஆனால் நாம் வாழுகின்ற இந்த நிகழ்காலத்தைப் பற்றி சிந்திக்காமல் கடந்து போன காலத்தை பற்றியும் வருங்காலத்தைப் பற்றியும் சிந்தித்து வருந்திக் கொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட தேவையற்ற சுமைகளையெல்லாம் தூக்கிக் கொண்டு அலைகிறோம். தேவையற்றதை பற்றி சிந்தித்து நம் வாழ்வை சுமையாக மாற்றிக் கொள்ளாமல் அதையும் தாண்டி ஒரு வாழ்வு இருக்கின்றது என்று ஆழமாக நம்பும் பொழுது நிச்சயம் நாம் முழு விடுதலையடைந்து மகிழ்வான வாழ்வை பெற முடியும்.

இன்றைய காலகட்டத்தில் எத்தனையோ மனிதர்கள் கடந்தகால மற்றும் வருங்கால சுமைகளை பற்றி சிந்தித்து தங்களுடைய உயிரையே மாய்த்துக் கொள்ள முடிவு செய்கின்றனர். இது அல்ல தீர்வு. எல்லா சுமைகளை தாண்டியும் தடைகளைத் தாண்டியும் நமக்கு வாழ்வு இருக்கிறது. அந்த வாழ்வை நம் ஆண்டவர் இயேசுவே கொடுக்க வல்லவர். சுமைகளை நாம் சுமையாய் பார்த்தால்தான் சுமைகள் சுமைகளாக தெரியும். சுமைகளை நாம் சுகமாய் பார்த்தால் சுமைகள் சுகமாய் தெரியும். "சுமைகளை கண்டு நீ துவண்டு விடாதே! இந்த உலகத்தை சுமக்கும் பூமியே உன் காலடியில் தான்! " என்ற சுவாமி விவேகானந்தரின் பொன்மொழி நாம் சுமைகள் என்று நினைக்கும் அனைத்தும் சுமையல்ல. மாறாக, இந்த உலகத்தை சுமக்கும் பூமியே நம் காலடியில் தான் இருக்கின்றது என்ற சிந்தனையே வழங்குகிறது. நம்மை ஆளும் தலைமைகள் சட்டத்தின் பெயரால் என்னதான் சுமைகளை சுமத்தினாலும் நம் ஆண்டவர் இயேசுவின் துணையோடு துணிச்சலோடு ஒன்றிணைந்து போராடி வெற்றியை பெற முடியும்.

சுமைகளை துணிச்சலோடு எதிர்கொண்டு பிறருக்கு வாழ்வளிக்க வேண்டும் என்பதற்காகவே நம் ஆண்டவர் இயேசு இவ்வுலகிற்கு வந்தார். இயேசுவின் திரு இருதயம் இரக்கமும் அன்பும் நிறைந்த இதயம். அவரின் பிள்ளைகளாகிய நாம் பல்வேறு சுமைகளால் துன்பப்படும் பொழுது தன் கனிவான இதயத்தால் நம் சுமைகளை சுகமாக்குகிறார் . தோள் கொடுக்கும் தோழராக நம்மோடு துணை நிற்கிறார்.

எனவேதான் இன்றைய நற்செய்தியில் "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்து இருப்பவர்களே, எல்லோரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் "(மத் :11:28)எனக் கூறுகின்றார். இது நம் ஆண்டவர் இயேசுவின் உயர்ந்த மனநிலையை சுட்டிக்காட்டுகிறது. எனவே நம்முடைய வாழ்விலேயே சுமைகளை கண்டு துவண்டுவிடாமல் யார் நம்மை கைவிட்டாலும் இயேசு நம்மை கைவிடமாட்டார் என நம்பும் பொழுது நிச்சயம் நமக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

மேலும் இன்றைய நற்செய்தியில் நுகம் என்ற சொல்லாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. "நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும் . " (மத் :11:29) . நுகத்தை ஒருவர் தூக்க முடியாது; மாறாக இருவர்தான் தூக்க முடியும். இயேசு இந்த வார்த்தைகள் வழியாக நம்முடைய சுமைகளை ஏற்றுக்கொண்டு உடன் இருக்கிறார் என்ற சிந்தனையை சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது.

நம்முடைய துன்பத்தில் பங்கு எடுப்பவராக இருக்கிறார். அவர் நமக்கு அழுத்தாதச் சுமையை கொடுத்துவிட்டு அழுத்தும் சுமையை அவர் ஏற்றுக்கொள்கிறார். இதுதான் இயேசுவின் கனிவான இதயம்.இத்தகைய இதயத்தில் இளைப்பாறுதல் அடைய நாம் நம்முடைய ஊனியல்புக்குரிய பாவங்களை விட்டு விட்டு தூய ஆவியின் இயல்பை வாழ்வாக அழைக்கப்பட்டிருக்கிறோம். இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமடலில் சுட்டிக்காட்டுகிறார்.

"கடவுளின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால், நீங்கள் ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல" (உரோ:8:9). எனவே நம்முடைய பாவத்தால் கிறிஸ்துவின் ஆவி இழந்து சுமையோடு தவிர்க்காமல் அவரிடம் தஞ்சம் புகும் பொழுது நமக்கு இளைப்பாறுதளை இயேசு அருள்வார்.

இன்றைய முதல் வாசகத்தில் செக்கரியா இறைவாக்கினர் சுமைகளை தாங்க வந்த மெசியாவின் வருகையைப் பற்றி எடுத்துரைக்கிறார். எனவே நம்முடைய அன்றாட வாழ்விலே நம்முடைய சுமைகளையும் பலவீனங்களையும் இயலாமையையும் இயேசுவிடம் ஒப்படைப்போம். நிச்சயமாக நமக்கு விடுதலையை வழங்குவார். நம்முடைய சுமைகளை அவரிடம் இறக்கி வைத்துவிட்டு அவர் தரும் சுகமான நுகத்தை ஏற்றுக்கொள்வோம். நம் ஆண்டவர் இயேசு எவ்வாறு நம்முடைய சுமைகளை ஏற்றுக் கொண்டாரோ, அதே கனிவான இதயத்தை நாமும் ஏற்றுக்கொண்டு நம்மோடு வாழக்கூடிய மற்ற சகோதர சகோதரிகளை அன்பு செய்வோம். அவர்களின் சுமைகள் சுகமாக நாமும் ஒரு கருவியாகப் பயன்பட்டு இயேசுவின் இதயத்திற்கு சான்று பகர்வோம்.

நாம் வாழும் இன்றைய காலகட்டத்தில் கூட இவ்வுலக மனிதர்கள் கோவித் - 19 என்னும் தீநுண்மியால் வாழ்வாதாரத்தையும் வாழ்க்கையையும் இழந்து வருகின்றனர். இப்படிப்பட்டவர்கள் பல்வேறு சுமைகளால் கடினப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு நம்மால் இயன்ற ஜெப உதவி, பொருளாதார உதவி, உடன் இருத்தல் போன்றவற்றை கொடுக்கும்பொழுது நாமும் இயேசுவைப்போல் சுமைகளை சுகமாக்கும் கருவியாக மாறமுடியும். எனவே இன்றைய நாளிலே இயேசுவின் இதயமாக மாறி பிறரின் சுமைகளை சுகமாக்கும் மனிதநேய மனிதர்களாக மாற நம்மையே இயேசுவிடம் ஒப்படைப்போம். இயேசுவின் இதயத்தை போல் மாறிட இறைவேண்டல் செய்வோம்.
 

இறைவேண்டல் :
இரக்கத்தின் இதய ஆண்டவரே! உம்மைப் போற்றிப் புகழ்கின்றோம். நாங்கள் சுமைகளை மறந்து சுகமாக வாழ உம்முடைய ஒரே மகனை உலகிற்கு அனுப்பினீர்.நாங்களும் அவருடைய இதயத்தை போல மாறி பிறருடைய வாழ்வுக்கு சுகம் அளிப்பவராக இருக்க அருளைத் தாரும். 

இன்றைய வாசகங்கள் (05.07.2020):முதல் வாசகம்: செக்:9:9-10, இ. வாசகம்: உரோ:8: 9, 11-13, நற்செய்தி வாசகம்: மத் :11:25-30

அருள்சகோதரர் குழந்தைஇயேசு பாபு
சிவகங்கை மறைமாவட்டம்

 

Add new comment

7 + 10 =