பொறுமையும் இறைநம்பிக்கையும் | திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு


Waiting in Patience

 

இன்றைய வாசகங்கள் (16.08.2020) - பொதுக்காலத்தின் 20 ஆம் ஞாயிறு - I. எசா. 56:1,6-7; II. தி.பா. 67:1,2,4,5,7; III. உரோ. 11:13-15,29-32; IV. மத். 15:21-28 

நம்பிக்கை வாழ்வு என்பது கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படையாக இருக்கின்றது. நாம் நம்பிக்கையோடு இறைவனிடம் தஞ்சம் புகும் பொழுது நிச்சயமாக நிறைவான அருளை இறைவன் நமக்கு அருள்வார் என்பது மறுக்க முடியாத உண்மை. நான் கடந்த 5 நாட்களாக காய்ச்சல் மற்றும் சளி போன்றவற்றால் மிகவும் அவதிப்பட்டேன். தினமும் மாத்திரை மற்றும் ஊசி போட்டும் காய்ச்சல் தீர்ந்தபாடில்லை. நான் ஏன் இவ்வாறு நடக்கின்றது என யோசித்துக் கொண்டிருந்த பொழுது என்னுடைய இறைநம்பிக்கை குறைவாக இருப்பதை உணர முடிந்தது. நான் ஓய்வு மேற்கொண்ட காரணத்தினால் ஆலயத்திற்கு சென்று இறைவேண்டல் செய்யவில்லை. எனக்கு ஏன் இவ்வாறு காய்ச்சல் இருக்கின்றது என்பது பற்றி மட்டும்தான் சிந்தித்தேன்.

இறுதியில் கடவுள் மட்டுமே நல்ல உடல் உள்ளச்சுகத்தை அளிக்க முடியும் என்பதை உணர்ந்து நம்பிக்கையோடு எனக்குத் தெரிந்த சகோதர சகோதரிகளிடம் செபிக்கக் கேட்டுக்கொண்டேன். பலரும் நம்பிக்கையோடு செபித்ததாக எனக்கு குறுஞ்செய்தியை அனுப்பினார்கள். நான் செபிக்க கேட்டுக்கொண்ட நாள்முதல் என் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இப்பொழுது நலமுடன் இருக்கிறேன். இந்த உண்மையான அனுபவப்பகிர்வு எதார்த்தமாக இருக்கலாம்; ஆனால், இந்த அனுபவத்தில் அடங்கியுள்ள இறைநம்பிக்கை ஆழமானது. இறை நம்பிக்கையால் மட்டுமே இறைவனின் அருளையும் ஆசீரையும் வல்ல செயல்களையும் பெறமுடியும். இதைத்தான் இன்றைய வாசகங்கள் நமக்கு சிந்திக்க அழைப்பு விடுக்கிறது. 

இன்றைய மூன்று வாசகங்களும் பிற இனத்தவரின் மீது நாம் கொள்ளவேண்டிய திறந்த மனப்பான்மையை சுட்டிக்காட்டுகின்றன. அவர்களின் இறைநம்பிக்கை வாழ்வு நாம் மீட்புப் பெற நமக்கு முன்னுதாரணமாக இருக்கின்றது. யூதர்கள் பிற இனத்தவர்கள் அனைவரையும் ஒடுக்கப்பட்டவர்களாக வும் ஓரங்கட்டப்பட்டவர்களாகவும் மீட்புப் பெற தகுதி இல்லாதவர்களாகவும் கருதினர். அதிலும் குறிப்பாக பிற இனத்தவர் மனிதர்களாக கூட மதிக்கப்பட தகுதி இல்லாதவர்கள் என்றும் அவர்கள் நாய்களுக்கு சமமானவர்கள் என்றும் கருதினர். எனவே தான் ஒவ்வொரு யூதரும் தங்களுடைய அன்றாட செபத்தில் "நான் புற இனத்தானாக பிறக்காதது குறித்து கடவுளே, உமக்கு நன்றி கூறுகிறேன்" என்று வேண்டினர்.

மேலும் "பிற இனத்தவர்களுக்கு மீட்புக் கிடையாது" என்ற மமதையில் யூதர்கள் இருந்தனர். இப்படிப்பட்ட சூழலில்தான் எசாயா இறைவாக்கினர் "பிற இனத்தவர்களை நான் என் திருமலைக்கு அழைத்து வருவேன்; இறைவேண்டல் செய்யப்படும் என் இல்லத்தில் அவர்களை மகிழச் செய்வேன்" என எடுத்துரைக்கின்றார். இத்தகைய பார்வை மீட்பு தங்களுக்கு மட்டுமே என்று மமதையோடு திரிந்த யூதர்களுக்கு சவுக்கடியாக இருக்கின்றது. யூதர்களிடையே இல்லாத நம்பிக்கை பிற இனத்தாரிடம் இருந்தது. எனவேதான் எசாயா இறைவாக்கினர் புறவினத்தார் பற்றி தனது நூலில் சுட்டிக்காட்டுகிறார். 

இன்றைய இரண்டாம் வாசகத்தில் யூத பாரம்பரியத்தில் பிறந்து வாழ்ந்து யூத அடிப்படைவாதியாக இருந்த பவுல் "பிற இனத்தாராகிய ....உங்களுக்குத் திருத்தூதராய் இருக்கும் நான் என் பணியைக் குறித்துப் பெருமை கொள்கிறேன்" என்று கூறுமளவுக்கு பிற இனத்தாரின் நம்பிக்கை ஆழமாக இருந்தது. யூதர்கள் பிற இனத்தாரின் நம்பிக்கையைக் கண்டு மீட்புப் பெற வேண்டும் என்ற ஆவலில் புனித பவுல் இவ்வாறு கூறுகிறார். புனித பவுல் தனது பணி வாழ்வின் தொடக்கத்தில் யூதர்களுக்கு மட்டுமே அதிக பணி செய்யவேண்டும் என்று நினைத்தது உண்மைதான். ஆனால் யூதர்கள் நம்பிக்கையற்ற தன்மையைக் கண்டு புனித பவுல் இறைநம்பிக்கை மிகுந்த பிற இனத்தாரிடம் நற்செய்திப்பணிச் செய்ய சென்றார். 

திருத்தூதர் புனித பவுலைப் போல இயேசுவும் தொடக்கத்தில் தனது பணியை யூதர்களுக்கு மட்டுமே. அவர்கள் மீட்பு பெறவே காணாமல் போன ஆடுகளைத் தேடி அனுப்பப்பட்டதைப் போல தான் அனுப்பப்பட்டுள்ளதாக இயேசு கருதினார். இப்படிப்பட்ட பார்வை பிற இனத்தவராகிய கனானியப் பெண்ணின் ஆழமான இறைநம்பிக்கை இயேசுவை புதிய பார்வைக்கு மாற்றியதாக நாம் இன்றைய நற்செய்தி வழியாக அறிய வருகின்றோம். "தன் சொந்த இனமாகிய இஸ்ரயேலுக்கு தான் தன் முதன்மையான பணி" என்ற பார்வையை பிற இனத்தைச் சார்ந்த கனானியப் பெண் தன்னுடைய ஆழமான இறை நம்பிக்கையால் மாற்றியுள்ளார். இவரை நம்பிக்கையின் பொருட்டு பிற இனத்தாருக்கு முதன்முதலாக இயேசு வல்லச்செயலைச் செய்யத் தொடங்கினார். 

இன்றைய வாசகங்கள் மூன்றுமே குறுகிய வட்டத்திற்குள் யோசித்து செயல்படாமல், திறந்த மனநிலையோடு எல்லோரையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பக்குவத்தைப் பெற அழைப்பு விடுக்கின்றன. பிற இனத்தாரை பற்றிய திறந்த மனநிலையோடு இருக்கச் சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றன. எனவே நம்முடைய அன்றாட வாழ்விலும் கிறிஸ்தவர்களாகிய நம்மிடம் இருக்கும் இறைநம்பிக்கையை விட, கிறிஸ்தவர்கள் அல்லாத பிறசமய சகோதர சகோதரிகளிடம் ஆழமான இறைநம்பிக்கை இருப்பதைக் காணமுடிகின்றது. இவற்றை நாம் திறந்த மனநிலையோடு ஏற்றுக்கொண்டு அவர்களைப்போல இறைநம்பிக்கை வாழ்வுக்கு சான்று பகர அழைக்கப்பட்டுள்ளோம். 

மனவளர்ச்சி குறைவாக உள்ள குழந்தைகள் படிக்கின்ற சிறப்பு பள்ளியில் பணியாற்றுகின்ற அருட்சகோதரி ஒருவர் பிற சமயத்தைச் சார்ந்த ஒரு பெண்மணிக்கு எவ்வாறு கடவுள் அவரின் நம்பிக்கையின் பொருட்டு வல்ல செயலைச் செய்தார் என்பது பற்றிபகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது "திருமணமாகி 13 வருடங்களாக குழந்தை இல்லாத ஒரு பெண்மணி மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகள் படிக்கின்ற ஒரு பள்ளியில் வேலை செய்து வந்தார். அவர் ஒரு பிற சமயத்தை பின்பற்றும் பெண்மணியாக இருந்தாலும் இயேசுவின் மேல் அதிகம் நம்பிக்கை கொண்டவராக இருந்தார். குழந்தை இல்லையே என்ற மன வேதனை இருந்தாலும் முகமலர்ச்சியோடு இந்த குழந்தைகளுக்கு பணிவிடை செய்வார். ஒருமுறை ஆசிரியர்களிடம் தன்னுடைய மனவேதனையை அவர் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்த போது ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து ஒரு முடிவெடுத்தார்கள். தினமும் காலை செபத்தில் எல்லா குழந்தைகளோடும் இணைந்து அந்த ஆசிரியருக்கு இறைவன் ஒரு குழந்தை தர வேண்டும் என்று இயேசுவின் மீது ஆழமான நம்பிக்கையோடு செபிக்க தொடங்கினர். இறைநம்பிக்கையோடு செபிக்க அவர்கள் முடிவு எடுத்ததற்கு ஏற்ப ஒவ்வொரு நாளும் காலையில் அந்த ஆசிரியரின் பெயர் சொல்லி அனைவரும் உருக்கமாக என அனைவரும் செபித்தார்கள். என்ன ஆச்சரியம் என்றால் கடவுள் யார்? செபம் என்றால் என்ன? என்று உணராத அந்த மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகள் கூட அவருக்காக உருக்கமாக செபித்தார்கள். அவர்கள் செபத்தை கேட்ட இறைவன் இன்று அவருக்கு ஒரு குழந்தையை பரிசாக கொடுத்து இருக்கின்றார் . ஆம் இது ஒரு உண்மை நிகழ்வு. குழந்தையைப் பெற்ற அந்த தாயானவள் உங்கள் அனைவரின் செபத்தையும் கடவுள் கேட்டு எனக்கு அருளினார் என்று மகிழ்ச்சியுடன் பிற சமயத்தை சேர்ந்த பெண்மணி பகிர்ந்து கொண்டார்" என கூறினார். இந்த உண்மை நிகழ்வு பிற சமயத்தைப் பின்பற்றும் அந்தப் பெண்மணியின் ஆழமான இயேசுவின் மீது கொண்ட ஆழமான இறைநம்பிக்கையை நமக்குப் பாடமாக சுட்டிக் காட்டுவதாக இருக்கின்றது. 

எனவே நம்முடைய அன்றாட வாழ்விலும் கடவுளின் மீட்பை பெற்று நிலை வாழ்வைப் பெற்றிட இறைநம்பிக்கையில் வேரூன்றி இருப்போம். அப்பொழுது நாம் நிச்சயமாக கடவுளின் அருளையும் இரக்கத்தையும் அனுபவிக்க முடியும். அதற்கு கனானியப் பெண்ணைப் போல பொறுமையோடு இறைநம்பிக்கையில் வேரூன்றி இருக்க வேண்டும். அப்பொழுது நிச்சயமாக நாமும் இறைநம்பிக்கை வாழ்வுக்கு சாட்சிகளாக மாறமுடியும். இறைமகன் இயேசுவின் வல்லச் செயல்களை நம்முடைய வாழ்விலேயே ஒவ்வொரு நாளும் அனுபவிக்க முடியும். எனவே பொறுமையோடு இறைநம்பிக்கை வாழ்வுக்கு சான்று பகர்ந்திட தேவையான அருளை இறைவேண்டல் செய்வோம். 

இறைவேண்டல்

வல்லமையுள்ள இறைவா! திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவர்களாக வாழும் நாங்கள், உன் மீது பல நேரங்களில் நம்பிக்கை இல்லாதவர்களாக வாழ்ந்து வருகின்றோம். திருமுழுக்குப் பெறாத பிறசமய சகோதர சகோதரிகளின் ஆழமான நம்பிக்கை கூட எங்களிடம் இல்லை. எனவே கொரோனா என்ற தீநுண்மி அச்சுறுத்தும் இந்த காலகட்டத்திலும் இறை நம்பிக்கையோடு நற்செய்தி மதிப்பீட்டிற்கு சான்று பகர தேவையான அருளைத் தாரும். ஆமென். 

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

15 + 0 =