Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
பொறாமை நிறைந்த மனநிலையை அகற்றுவோமா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
ஆண்டின் பொதுக்காலத்தின் இரண்டாம் வியாழன்
I: 1 சாமு: 18: 6-9;19: 1-7
II : திபா 56: 1-2. 8-9. 10. 11-12
III: மாற்: 3: 7-12
நம்முடைய மனித வாழ்க்கையில் மனித மாண்பை சீர்குலைக்கக் கூடியதாக இருப்பது பொறாமை என்ற மனநிலை. ஒரு ஊரில் ஒருவருக்கு ஒரு நிலம் இருந்தது. அந்த நிலம் ஒன்றுக்கும் உதவாது என்ற மனநிலையும் இருந்தது. எனவே அந்த நிலத்தை தன் நண்பருக்குப் பணத்திற்காக விற்கிறார். அந்த நிலத்தை வாங்கிய அவரின் நண்பர் அருமையாக ஒரு கடை ஒன்றை கட்டினார். இந்த கடை விரைவாக வளர்ச்சி பெற்று பொருளாதரத்தில் உயர்ந்த மனிதராக உயரும் அளவுக்கு வியாபாரம் செழித்தது. இதைக்கண்ட நிலத்தை விற்ற இவரின் நண்பரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று முயற்சி செய்தார். எனவே அவர் மீது அவதூறு வழக்கினை நீதிமன்றத்தில் பதிவு செய்தார். இறுதியில் நீதி இவர் பக்கம் இல்லாததால் தனது உடமைகள் அனைத்தையும் இழக்க நேரிட்டது. பொறாமை நிறைந்த மனநிலை அவரின் வாழ்வை சீர்குலைத்தது.
நாம் வாழும் இந்த சமூகத்தில் பொறாமை நிறைந்த மனநிலை அதிகமாக தலைவிரித்தாடுகிறது. மாமியார் மருமகளைப் பார்த்து பொறாமைபடுதல், மருமகள் மாமியாரைப் பார்த்து பொறாமைபடுதல், தம்பி அண்ணனைப் பார்த்து பொறாமைபடுதல் , அண்ணன் தம்பியைப் பார்த்து பொறாமைபடுதல் நண்பர்கள் சக நண்பர்களைப் பார்த்து பொறாமைபடுதல் இவ்வாறாக அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் பொறாமை என்பது ஒரு நச்சுக்கிருமி என்பதை பலரும் உணர்வதில்லை. அது நம் மத்தியில் இருந்தால் நம்முடைய வளர்ச்சியை முற்றிலும் தடைசெய்யும். எனவே பொறாமை நிறைந்த மனநிலையை நாம் களைய வேண்டும். அதற்கு அனைவரையும் அன்போடு ஏற்றுக் கொள்ளவேண்டிய மனநிலையை நம்மில் வளர்க்க வேண்டும்.
இன்றைய முதல் வாசகம் சவுல் அரசரின் பொறாமை நிறைந்த மனநிலையைச் சுட்டிக்காட்டுகிறது. பெலிஸ்தியனாகிய கோலியாத்தைக் கொன்ற பின்பு மக்கள் தாவீதைப் பெருமையாகப் பாராட்டி பாடினர். இதைச் சவுல் அரசரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்மீது பொறாமைபட்டார். தாவீதை கொல்லுமளவுக்குத் துணிந்தார். சவுலின் மகன் யோனத்தான் தாவீது மீது அதிகமான அன்பு கொண்டிருந்தார். எனவே யோனத்தான் தன்னுடைய தந்தையின் திட்டத்தை தாவீதிடம் அறிவித்தார். தாவீது தன்னையே தாழ்த்திக் கொண்டு அவ்வாறு செய்ய வேண்டாம் என சவுல் அரசிடம் பரிந்துரை செய்தார். இறுதியில் சவுலும்"வாழும் ஆண்டவர் மீது ஆணை! அவன் கொலை செய்யப்பட மாட்டான்" என்று கூறினார். பின்பு யோனத்தான் தாவீதிடம் இந்த வார்த்தையைக் கூறினார். யோனத்தான் தாவீதை சவுல் அரசர் முன்னால் அழைத்துச் சென்றார். அதன்பிறகு முன்புபோலவே தாவீது தன் பணியில் ஈடுபட்டார்.
இந்த நிகழ்வு எதை சுட்டிக் காட்டுகிறது என்றால் பொறாமை என்ற மனநிலை பிறரைக் கொல்லும் அளவுக்கு செல்கின்றது. தாவீது சவுல் அரசருக்கு நல்லதுதான் செய்தார். ஆனால் மக்கள் தாவீதை பாராட்டிய பொழுது சவுல் அரசரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இத்தகைய மனநிலையை இந்த சமூகத்தில் நாமும் கொண்டிருக்கலாம். ஆனால் இது கடவுளுக்கு எதிரானது. நமக்கு முன்னால் பிறர் வளர்ச்சியை நோக்கிச் செல்லும் பொழுது, அவர்களை பாராட்டி ஊக்கமூட்ட முயற்சி செய்ய வேண்டும். பிறர் வளர்ச்சியில் அகமகிழ கற்றுக் கொள்ளவேண்டும். அப்பொழுது நிச்சயமாகக் கடவுள் தரும் ஆசீர்வாதத்தை முழுமையாக சுவைக்க இயலும். கடவுளின் ஆசீரையும் அருளையும் பெறுவதற்கு பொறாமை என்ற நச்சுக்கிருமித் தடையாக இருக்கிறது. அவற்றைக் களைந்து மனிதநேயத்திலும் மனித மாண்பிலும் சிறந்து விளங்குவோம். அதற்குத் தேவையான அருளை வேண்டுவோம்.
இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! பொறாமை என்ற நச்சுக் கிருமியை எங்கள் வாழ்விலிருந்து அடியோடு அழித்து, நீர் தரும் ஆசீர்வாதத்தை நிறைவாகப் பெற்றிட அருளைத் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment