புதுமைகளின் இறைவன் நம் கடவுள்! | குழந்தைஇயேசு பாபு | Sunday Reflection


தவக்காலம் -ஐந்தாம் ஞாயிறு
I : எசாயா 43: 16-21
II :  திபா 126: 1-2ab. 2cd-3. 4-5. 6
III :பிலிப்பியர் :3 8-14
IV : யோவான்:   8: 1-11

புதுமையான விஷயங்களைக் காணும் போது நமது மனங்கள் ஈர்க்கப்படுகின்றன. புதிய கண்டுபிடிப்புகளை அனுதினமும் தருகிறது அறிவியல். Creativity என்ற பெயரில் புதிய ஆடைகள், சமையல் குறிப்புகள், ஓவியங்கள், அலங்காரப்பொருட்கள், இசைப்படைப்புகள், கலை படைப்புகள் என மனிதர்கள் செய்யும் போது அவர்களைக் கண்டு நாம் வியக்கிறோம். பாராட்டு மழைகளைப் பொழிகிறோம். அவர்களை உயர்வான இடத்தில் வைக்கிறோம். நாமும் புதிதாக ஏதேனும் செய்ய முடிகிறதா என யோசித்து முயற்சி செய்கிறோம். ஆனால் அனுதினமும் புதியகாரியங்களை நம் வாழ்வில் நிறைவேற்றும் கடவுளை நாம் கண்டுணர்கிறோமா?

இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் எசாயா இறைவாக்கினர் வழியாகக் கூறுவது இதுவே."முன்பு நடந்தவற்றை மறந்துவிடுங்கள்; முற்கால நிகழ்ச்சி பற்றிச் சிந்திக்காதிருங்கள்; இதோ புதுச்செயல் ஒன்றை நான் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றிவிட்டது; ".

நம் வாழ்வில் நாம் கடந்து வந்த பாதைகளைச் சற்று அலசிப்பார்த்தால் நாம் கடவுளின் கைகள் நம் வாழ்வில் ஒவ்வொரு முறையும் புதியதாக செயலாற்றியதை உணரலாம். அதையே நாம் புலம்பல் நூல் 3:22-23 -ல் 
"ஆண்டவரின் பேரன்பு முடிவுறவில்லை! அவரது இரக்கம் தீர்ந்துபோகவில்லை!
காலைதோறும் அவை புதுப்பிக்கப்படுகின்றன! நீர் பெரிதும் நம்பிக்கைக்குரியவர்!" என வாசிக்கிறோம். ஆம் நம் இறைவன் புதுமைகளின் இறைவன். இதை மிக அழகாக எடுத்துரைக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

விபச்சாரத்தில்  கையும் மெய்யுமாக பிடிபட்ட பெண்ணை இயேசுவிடம் கொண்டுவந்தனர். அவரிடம் மோசே சட்டப்படி அப்பெண்ணை கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்ற பழைய சட்டத்தை மேற்கோள் காட்டி, இயேசு இப்பிரச்சனையில் புதுமை நிறைந்த போதகராய் என்ன தீர்ப்பிடப்போகிறார் என சோதிக்க வந்தனர். இயேசு மிகவும் எளிமையாக ஆனால் புதுவிதமான தண்டனையைத் தருகிறார் , பாவமில்லாதவர் அப்பெண் மேல் கல் எரியட்டும் என்று.

இதிலென்ன புதுமை உள்ளது என நாம் யோசிக்கலாம்? 
* பாவிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற பழைய எண்ணத்தை இயேசு மாற்றி புதுமையைப் புகுத்தி பாவிகள் மன்னிக்கப்பட வேண்டும் என்ற சிந்தனையைத் தருகிறார். 
* தாங்கள் நேர்மையாளர்கள் என வெளிவேடம் காட்டித் திரிந்தவர்களை
 தாங்களும் தவறக்கூடியவர்கள் என சிந்திக்கத் தூண்டினார்.
* பாவ வாழ்க்கை வாழ்ந்த பெண்ணுக்கு புதுவாழ்வு தந்தார்.
* விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்ணைப் பார்த்து "அம்மா" எனக் கூறுவதே புதுமையான செயலல்லவா. கடவுளின் அன்பு ஒவ்வொருநாளும் புதியது என்பதையும் அவருடைய கருணை நாம் பாவம் செய்து வீழும் போதெல்லாம் புதியதாகிறது என்தையும் நம் ஆண்டவர் இயேசு மெய்ப்பித்திள்ளார்.

இறுதியாக இனி பாவம் செய்யாதே என இயேசு கூறி நம்மையும் பழைய வாழ்வைக் களைந்து புதுவாழ்வு வாழ்பவர்களாக வாழ அழைக்கிறார். இரண்டாம் வாசகத்தில் பவுல் இயேசுவை சொந்தமாக்க மற்றவையை குப்பையாகக் கருதுவதாய் மொழிந்துள்ளார். நாமும் இயேசுவை சொந்தமாக்கும் போது தேவையற்றவை நம்மை விட்டு போகும். நம் வாழ்வு புதிதாய் மாறும். கடவுளின் அன்பை ஒவ்வொருநாளும் புதிதாய் நாம் உணரலாம். அத்தோடு அப்புதுமையான அன்பை நம் வாழ்விலும் புதுவிதமாக பிறருக்கு பகிரலாம். அத்தகைய வரத்தை கடவுளிடம் கேட்போம்.

 இறைவேண்டல் 
புதுமையாக எம்மை அன்பு செய்யும் இறைவா! உமது அன்பால் எங்கள் வாழ்வும் புதுமையாக மாறவும் உம் அன்பை நாங்கள் புதுப்புது விதங்களாய் பிறரோடு பகிரவும் வரமருளும்.ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

1 + 8 =