பிறரை இயேசுவில் நம்பிக்கை கொள்ளச் செய்கிறோமா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பாஸ்கா காலம் - ஆறாம் வியாழன்
I: திப: 18: 1-8
II: தி.பா: 98: 1. 2-3. 3,4
III : யோவான்: 16: 16-20

கிறிஸ்தவ வாழ்வின் அடித்தளமே நம்பிக்கை என்பதை நாம் பலமுறைசிந்தித்திருக்கிறோம். நம்பிக்கையில் வளர்வதற்கும் பல ஆன்மீக முயற்சிகளை நாம் செய்துகொண்டிருக்கிறோம்.நாம் நம்பிக்கையில் வளர்ந்தால் மட்டும் அது நம்பிக்கையின் வளர்ச்சி அல்ல . மாறாக நமது நம்பிக்கை மற்றவரையும் இயேசுவை நாடிவரச் செய்யும் போதுதான் நம்பிக்கை வளர்கிறது. பெருகுகிறது. ஆழப்படுகிறது. இச்செய்தியை இன்றைய வாசகங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன.

ஒருமுறை நற்செய்தி பணிக்காக நான் ஒரு பங்கிற்குச் சென்று சில நாட்கள் தங்கி வீடுகளை சந்தித்துக்கொண்டிருந்தேன். கிறிஸ்தவ குடும்பங்களை சந்தித்து அவர்களை நம்பிக்கையில் திடப்படுத்தும்  பணியை முதன்மையாகக் கருதி வீடுகளைச் சந்தித்துக்கொண்டிருந்தேன். அவ்வாறாகச் செல்லும் போது பிற சமயத்தைச் சார்ந்த சகோதரி என்னை அவர்களுடைய வீட்டிற்கு அழைத்தார். அவர்களோடு பகிர்ந்து கொண்டிருக்கும் போது தமது அண்டைவீட்டாரைப் பற்றி பெருமையாகப் பேசினார். அவர்களுடைய பக்தியையும் செபமுறைகளையும் கண்டு பலமுறை வியப்பில் ஆழ்ந்ததாகக் கூறியதோடு, தங்கள் குடும்பம் துன்பத்தில் இருந்த நாட்களில் தங்களோடு உடனிருந்து செபித்ததாகவும் உதவியதாகவும் கூறினார். இதனால் தங்களுக்கும் இயேசுவின் மேல் கொண்ட அன்பும் நம்பிக்கையும் வளர்வதாக சான்றுபகர்ந்தார். அக்குடும்பத்தைப் பற்றி கேட்டபோது எனக்கும் வியப்பாக இருந்தது. அக்குடும்பத்திற்காக நானும் கடவுளுக்கு நன்றி கூறினேன்.

இன்றைய முதல் வாசகத்தில் பவுல் பிற இனத்து மக்களிடையே இயேசுவைப் போதித்து அவர்களை நம்பிக்கையாளர்களாக மாற்றுவதை நாம் வாசிக்கிறோம். யூதர்கள் நற்செய்தியை ஏற்காத போதும் பிறஇனத்தவரிடையே நான் செல்வேன் என்று தன் சட்டையிலுள்ள தூசியைத் தட்டி விட்டு துணிச்சலோடு இயேசுவுக்கு சான்று பகர்ந்தார். தனக்குள் இருந்த நம்பிக்கை ஒளியை பிறரிடம் ஒளிரச்செய்தார்.

அன்புக்குரியவர்களே நம்பிக்கை ஒளியை நற்செய்தியை அறிவித்து மற்றவருக்கும் தருவது நமக்குக் கொடுக்கப்பட்ட தலையாய பணி. நாம்  இதை உணர்ந்தவர்களாய் நம்மைச் சூழ்ந்தவர் எவராயினும் நம் மூலம் இயேசுவை அறியும் வண்ணமும் அவரிடம் நம்பிக்கை கொள்ளும் வண்ணமும் நம்முடைய வாழ்வும் பணியும் அமைய வேண்டும். அத்தகைய நம்பிக்கையை பிறருக்கு ஊட்டும் வாழ்வை வாழ நாம் தாயாரா?

 இறைவேண்டல் 
அன்பு இறைவா!
எங்கள் நம்பிக்கை வாழ்வால் பலரை நம்பிக்கையாளர்களாய் மாற்றி உம்மிடம் அழைத்து வர வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
த.சூசையப்பட்டிணம்
தங்கச்சிமடம்

Add new comment

1 + 0 =