Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
பிறரின் விமர்சனங்களுக்கு உதைப்பந்து ஆகிறோமா நாம்? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலத்தின் 25 ஆம் வெள்ளி; I: ஆகாய் 1:15-2:9; II : தி.பா: 42:1-4; III : லூக் 9:18-22
ஒரு கோவிலுக்கு சக்தி வாய்ந்த முனிவர் வந்திருப்பதாகவும், அவர் தன்னைக் காணச்செல்கின்றவர்களைப்பற்றி அப்படியே கூறுவதாகவும் இரு
நண்பர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அப்போது "நாமும் சென்று அவரைச் சென்று பார்க்கலாம் " என நண்பர்களில் ஒருவர் கூற, மற்றொருவர் " ஐயையோ நான் வரவில்லை. அவர் என்னைப்பற்றி ஏதாவது ஏடா கூடமாக சொல்லிவிடுவார் " என்று பயத்துடன் கூறினாராம்.
விமர்சனங்கள் என்பவை ஒருமனிதரின் வளர்ச்சிக்குத் தேவையான ஒன்று. தன்னைப் பற்றியும் தான் செய்கின்றவற்றைப் பற்றியும் தெளிவான அறிவைப் பெற்றிருப்பவர் பிறரின் விமர்சனங்களை சரியான கண்ணோட்டத்துடன் பார்ப்பார். அது தேவையெனில் தன் வளர்ச்சிக்காக அதை எடுத்துக்கொள்வார். தேவையற்றது எனில் சட்டை செய்யாமல் விட்டுவிடுவார். எவரொருவர் இத்தகைய மனநிலையைக் கொண்டிருக்கிறாரோ அவர் முதிர்ச்சியுள்ள மனிதராகவும் மன அமைதியுள்ளவராகவும் இருப்பதோடு பிறரின் கருத்துக்களுக்கு உதைப் பந்து ஆகிவிடமாட்டார்.
நம்முடைய மனநிலையை சற்று சோதிப்போம் . நம்மைப் பற்றி புகழ்ந்து உயர்வாகப் பேசுகிறவர்களை விரும்புவதும் , தவறாகவோ அல்லது குறைவாகவோ பேசுபவர்களை விலகுவதும் பொதுவான இயல்பாகிவிட்டது. ஆனால் அவர்களின் கருத்துக்கள் உண்மையானவையா என நாம் சிந்திப்பதில்லை. அதற்குக் காரணம் நம்மைப்பற்றிய உண்மையான தெளிவான அறிவு நம்மிடம் இல்லை.இது நாம் மறுக்க முடியாத உண்மை.
நம் ஆண்டவர் இயேசு தன்னையே முற்றிலும் அறிந்தவராய் இருந்தார். அதனால் தான் பிறரின் விமர்சனங்களை சரியான கண்ணோட்டத்தில் பார்த்தார். அத்தோடு தன்னைப் பற்றி பிறர் என்ன கருதுகிறார்கள் எனத் தெரிந்து கொள்ள தாமாகவே முன்வந்தார். இதையே
இன்றைய நற்செய்தியில் நாம் காண்கிறோம். பலர் அவரைப்பற்றி இறைவாக்கினர் என்றும் திருமுழுக்கு யோவானின் மறுபிறப்பு என்றும் கூறினர். அதைக்கேட்ட இயேசு விண்ணுக்கும் மண்ணுக்கும் குதிக்கவில்லை. தன்னைப் பற்றி பிறர் இழிவாகப் பேசிய போதும் அவர் கலங்கவில்லை. ஏனெனில் அவர் தன்னை தெளிவாக அறிந்திருந்தார். எனவே நம் அன்றாட வாழ்விலும் நம்மையே நாம் தெளிவாக உண்மையாக அறிந்து கொள்ளவும் பிறருடைய கருந்துக்களை சரியான கண்ணோட்டத்தில் காணவும் வரம் வேண்டுவோம்.
இறைவேண்டல்
அன்பு இறைவா! எங்ளைப் பற்றிய சரியான புரிதலைத் தந்து பிறரின் கருத்துக்களை சரியான கண்ணோட்டத்தில் பார்க்கும் வரம் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment