Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
பிறரின் நலனுக்காய் உன்னை இழக்கத் தயாரா? | குழந்தை இயேசு பாபு | Daily Reflection
தவக்காலம் - ஐந்தாம் சனி -I. எசேக்கியேல் 37: 21-28; II. எரே 31:10. 11-12ab.; III. யோவான் 11:45-57
தவக்காலத்தின் இறுதி நாட்களுக்குள் கடந்து சென்று கொண்டிருக்கிறோம். இந்நாட்களில் நாம் அதிகமாக இயேசுவின் பாடுகளைப் பற்றியும் அவர் நமக்காகப் பட்ட துன்பங்களையும் தியானித்துக் கொண்டிருக்கிறோம். இயேசு நமது மீட்புக்காகத் தன்னையே இழக்கத் தயாரானார். ஆனால் அந்த இழப்பு சிலுவையில் மட்டுமல்ல. அவர் வாழ்ந்த போதே தொடங்கிற்று.
பலருடைய ஏச்சுக்களுக்கும் பேச்சுக்களுக்கும் ஆளானார். பலர் அவரை வெறுத்தனர். அவர் மேல் பொறாமை கொண்டனர். இவை அனைத்தையும் இயேசு மனித குல மீட்புக்காக ஏற்றுக்கொண்டார். அவ்வாறு அவர் ஏற்றுக்கொண்டது அவர் நமக்காக இழந்ததைச் சுட்டிக்காட்டுகிறது. பலர் அவரைத் தூற்றும் போது தன் மதிப்பு மரியாதையை இழந்தார். உறவுகளை இழந்தார். நற்பெயரை இழந்தார். கொலை செய்யத் தேடிய போது தன் பாதுகாப்பை இழந்தார். இறுதியில் தன் வாழ்வை இழந்தார். இவை அனைத்துமே நமக்காக அல்லவா?
இன்றைய நற்செய்தியில் பிறருக்காகத் தன்னை இழக்க மனமில்லாத மத குருமார்களைப் பார்க்கிறோம். இயேசுவின் வல்ல செயல்களால் மக்கள் பலர் ஈர்க்கப்படுவதைக் கண்டு, மக்கள் மத்தியிலும் ரோமை அரசிடமும் தங்களுக்குள்ள மரியாதை இழக்க நேரிடுமோ என்ற அச்சம் அவர்களிடையே இருந்தது. பிறர் நலனுக்காக தங்கள் மரியாதையை, பதவியை இழக்கத் தயாராக இல்லாத தலைமைக்குருக்கள், "ஒரு இனம் நன்றாக இருக்க ஒருவன் தன் உயிரை இழப்பது முறைதான்" என்று வசனம் பேசுவதை நாம் காண்கிறோம்.
நாம் நம் வாழ்வில் பலவற்றை இழந்திருப்போம். அவை அனைத்தும் நமக்காகவா? பிறருக்காகவா? இல்லை யாருக்கும் பயன்படாத ஒன்றிற்கா? என நாம் இன்று சிந்திக்க வேண்டும். நாம் செய்த தவறுக்காக நம் பெயரை இழந்திருக்கலாம். ஊதாரித்தனமாக செலவு செய்து சொத்துக்களை இழந்திருக்கலாம். புரிந்து கொள்ளாத மனநிலையால் உறவுகளை இழந்திருக்கலாம். இவ்வாறு வரிசைப்படுத்தினால் நாம் இழந்தவை அனைத்தும் நம் சுயத்திற்காகவே. பிறருக்காக நாம் இழந்தது என்ன? குறைந்த பட்சம் நம் நேரத்தை இழந்திருக்கிறோமா? சிந்திப்போம்.
இறைவேண்டல்
அன்பு இறைவா! எமக்காக அனைத்தையும் இழந்த இயேசுவைப் போல பிறர் நலனுக்காக எங்களை சிறிதளவேனும் இழக்கத் தயாராகும் மனம் தாரும். ஆமென்.
Add new comment