Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
பிறரன்பு பணி செய்ய தயாரா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலத்தின் 24 திங்கள்; I: திமொ: 2: 1-8; II: தி.பா: 28: 2. 7-8. 8-9; III: லூக்: 7: 1-10
ஒரு முறை 50 வயது பெண் நான்கு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தார். அவர் வருகின்ற பொழுது அந்த வாகனத்தில் ஒரு சக்கரம் பஞ்சர் ஆகிவிட்டது. எனவே அந்த இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு போகின்ற வருகின்ற வாகனங்களை மறித்து உதவி கேட்டார். ஆனால் யாரும் அவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை. எனவே அவர் சோர்வுற்ற நிலையில் களைப்பாக அமர்ந்திருந்தார். அந்த வழியாக ஏழை மனிதர் ஒருவர் மிதிவண்டி அழுத்திக்கொண்டு வந்தார். இந்தப் பெண்மணியை கண்டவுடன் இவரை நேராகச் சென்று அவருக்கு என்ன உதவி செய்யலாம் என்று கேட்டார். அந்த பெண்மணியும் அந்த சூழ்நிலையை எடுத்துக் கூறினார். உடனே அந்த ஏழை மனிதர் வாகனத்தில் சக்கரங்களை பழுதுபார்க்க தெரியும் என்று கூறினார். பின்பு வாகனத்தில் கூடுதலாக உள்ள சக்கரத்தை எடுத்த அந்த வாகனத்தில் பொருத்தினார். அந்த வாகனம் செயல்பட தயாரானது.இந்த உதவியை கண்ட அந்த பெண்மணி அவருக்கு உதவி செய்ய ரூபாய் 5000 கொடுக்க முயற்சி செய்தார். ஆனால் உதவி செய்த அந்த மனிதர் "எனக்கு கடவுள் நிறைவாக அனைத்தையும் கொடுத்து இருக்கிறார் "எனக்கு இப்பொழுது தேவை இல்லை.நீங்கள் உதவி செய்வதாக இருந்தால் யாராவது உங்களுக்கு முன்னால், கடினப்பட்டால் அவர்களுக்கு உதவி செய்யுங்கள் "என்று கூறினார். ஒரு சில மாதங்களுக்குப் பிறகு அந்தப் பெண்மணி தேனீர் குடிப்பதற்காக தன்னுடைய வாகனத்தை நிறுத்தினார். தேனீர் கடையில் நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் டீ ஆத்திக் கொண்டிருந்தார். இதைக் கண்டதும் அந்தப் பெண்மணி அவருக்கு ஏதாவது உதவி செய்யவேண்டும் என்ற பின்னணியில் டீ குடித்த பிறகு ஐயாயிரம் ரூபாயை டீக்கடையில் விட்டுவிட்டு சென்றார். இதைக்கண்ட நிறைமாத கர்ப்பிணி அந்த வாகனத்தில் வந்த அந்த பெண்மணியை அழைக்க முயற்சித்த போதும் அந்த வாகனத்தில் விரைவில் சென்றுவிட்டார். பிறகு அந்த 5000 ரூபாய்க்கு கீழே ஒரு வெள்ளைத்தாளில் "இது உன்னுடைய பிரசவ செலவிற்கு என்னுடைய அன்பு பரிசு " என்று எழுதிருந்தது. இதைக் கண்ட அந்த பெண்மணிக்கு மகிழ்ச்சி. ஏனெனில் அந்த காலையில் தான் இவருடைய கணவர் பிரசவத்திற்கு என்ன செய்ய போகின்றோம் என்று வருத்தப்பட்டார். அவரின் கணவரிடம் ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்த பொழுது, அவரின் கணவரும் மகிழ்ந்தார். அந்த கணவர் வேறு யாருமில்லை அந்தப் பெண்மணிக்கு உதவி செய்த அந்த நபர் ஆவார். இந்த உலகம் ஒரு உருண்டை. நான் நல்லது செய்கின்ற பொழுது, நிச்சயமாக நமக்கு உதவி என்று தேவைப்படும் பொழுது ஏதாவது வகையில் நமக்கு கிடைக்கும். "விதை விதைத்தவன் ;விதை அறுப்பான் " என்ற பொன்மொழிக்கேற்ப நாம் பிறர் நலப்பணிகளை செய்கின்ற பொழுது நிச்சயமாக நமக்கு தேவையான நேரத்தில் உதவி நமக்கு தேடி வரும். இதுதான் வாழ்வின் உண்மை. இப்படிப்பட்ட பிறர் நலப்பணி தான் உண்மையான கிறிஸ்தவ மதிப்பீட்டை வெளிப்படுத்துகின்றது.
இன்றைய நற்செய்தியில் நூற்றுவர் தலைவரின் பிறர் நலப்பணி நமக்கெல்லாம் முன்னுதாரணமாக இருக்கின்றது. இன்றைய நற்செய்தியில் நூற்றுவர் தலைவரின் மூன்று நல்ல குணங்கள் வெளிப்படுகின்றன. முதலாவதாக தன் பணியாளர் மீது அவர் வைத்திருந்த அன்பு. தன் பணியாளருக்காக தானே வந்து இயேசுவிடம் குணமாக்க கேட்டுக் கொள்கின்றார். நான் வாழும் இந்த சமூகத்தில் முதலாளிகள் பணியாளர்களை அடிமைகளாகவும் கைக்கூலிகளாகவும் எடுபிடிகளாகவும் பார்க்கக்கூடிய இந்தச் சூழலில் நூற்றுவர் தலைவரின் இந்தப் பண்பு எல்லாம் முதலாளிகளுக்கும் முன்னுதாரணமாக இருக்கின்றது. எனவே நம்மோடும் நமக்கு கீழும் பணி செய்கின்ற பணியாளர்களை அன்போடு மதித்து அவர்கள் நலனில் அக்கறை கொள்ள முயற்சி செய்வோம்.
இரண்டாவதாக நூற்றுவர் தலைவர் இயேசுவின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார். நூற்றுவர் தலைவர் பிறர் நலப்பணி செய்ய இயேசு மீது கொண்ட நம்பிக்கை அடிப்படையாக அமைந்தது. அவர் என்ன தான் உதவி செய்ய நினைத்தாலும் இயேசுவின் அருளை வேண்டுகிறார். சமூகப் பணி செய்து பிறர் நலத்தோடு வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் இறை நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். அப்பொழுது நிச்சயமாக நாம் செய்கின்ற பணி ஒரு ஆசீர்வாதமான பணியாக அமையும். இதற்கு மிகச்சிறந்த உதாரணம் புனித அன்னை தெரசா.
மூன்றாவதாக நூற்றுவர் தலைவரின்
தாழ்ச்சியான மனநிலை. அவர் இயேசுவுக்கு முன்னால் தன்னை தகுதியற்றவர் என ஏற்றுக் கொள்கிறார். இந்த தாழ்ச்சி நிறைந்த அந்த மனநிலைதான் இயேசுவின் அன்பையும் இரக்கத்தையும் அருளையும் பெறுவதற்கு அடிப்படையாக அமைந்தது. எனவே நம்முடைய அன்றாட வாழ்விலும் நம்முடைய பலவீனத்தையும் தகுதியின்மையையும் ஏற்றுக்கொண்டு கடவுளுக்கு முன்பாக நம்மை தாழ்த்தும் பொழுது கடவுளின் ஆசியை நிறைவாக பெறமுடியும்.
பிறர் நலப்பணி செய்து இயேசுவின் இறையாட்சி பணிக்கு சான்று பகிர்ந்திட அன்பு, நம்பிக்கை, தாழ்ச்சி போன்ற நற்பண்புகளை நமதாக்கிட முயற்சி செய்வோம். அப்பொழுது கடவுளின் ஆசீர் என்றும் நம்மோடு இருக்கும். அத்தகைய நல்ல மனநிலையை வேண்டி இறைவனிடம் நம்மை ஒப்புக் கொடுப்போம்.
இறைவேண்டல் :
வல்லமையுள்ள இறைவா! பிறர் நலப்பணி செய்திட தேவையான நல்ல மனநிலையைத் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment