பார்வை பெற வேண்டுமா! | குழந்தைஇயேசு பாபு


Healing the blindness

பொதுக்காலத்தின் 33 ஆம் திங்கள் - I. திவெ: 1:1-4;2:1-5; II. திபா: 1:1-2.3.4,6; III. லூக்: 18:35-43

மக்கள் நடந்து செல்லும் சாலையில் ஒரு பெரிய கல் ஒன்று கிடந்தது. அவ்வழியே பயணம் செய்த அனைத்து மக்களும் அந்தக் கல்லிலே இடிபடாத அளவுக்கு ஒதுங்கி நடந்து சென்றனர். யாருக்கும் அந்த கல்லை சாலை ஓரத்தில் போடவேண்டும் என்ற மனம் இல்லாமல் பயணமானர். அந்த வழியாக பார்வையற்ற ஒரு தம்பதியினர் ஒரு குச்சியின் துணையோடு சாலையில் நடந்து வந்தனர். அவ்வாறு நடந்து வந்து கொண்டிருக்கும் பொழுது சாலையில் கிடந்த அந்தக் கல்லை குச்சியைத் தட்டுவதன் வழியாக உணர்கின்றனர். உடனே அவர்கள் இருவரும் அந்தக் கல்லை மெதுவாக உருட்டி சாலையின் ஓரமாகத் தள்ளினர். இதை கண்ட மற்ற பார்வையுள்ள  மனிதர்கள் தங்களின் பார்வையற்ற மனநிலையை குறித்து வெட்கப்பட்டனர். இந்தப் பார்வையற்ற தம்பதியினரைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு நபர் ஓடிப்போய் அவர்களுடைய  கால்களில் விழுந்தார். தொடர்ந்து அவர் "இந்த உலகத்தில் பார்வையுள்ள நாங்கள்தான் பார்வையற்றவர்கள்; பார்வையற்றவர்களாக உள்ள நீங்கள் பார்வையுள்ளவர்கள்" என்று கூறினார். உடனே அந்த தம்பதியினர் "பார்வை என்பது புறம்சார்ந்தது மட்டுமல்ல; மாறாக, அகம் சார்ந்ததும் கூட" என்று  பதிலளித்து தங்களுடைய பயணத்தை தொடர்ந்தனர். 

பார்வையற்றவர்கள் தங்களுடைய அகக்கண்களுக்கு முன்னுரிமை கொடுப்பர். அதிலும் குறிப்பாக தங்களுடைய உணர்வால் தங்களுக்கு முன்னால் நிற்கக்கூடிய சகமனிதர்களை அறிய முடியும். அந்த அளவுக்கு ஆற்றல் பெற்றவர்கள் தான் இந்தப் பார்வையற்றோர். எனவே பார்வை என்பது புறம் சார்ந்தது மட்டுமல்ல; மாறாக அகம் சார்ந்ததாகவும் இருக்கின்றது. இந்த உலகில் நடக்கக்கூடிய அநீதிகளை கண்டும் காணாமல் சுயநலத்தோடு வாழ்வதும்  பார்வையற்ற தன்மைக்கு முன்னுதாரணம். நாம் சாலையில் நடந்து கொண்டிருக்கும் பொழுது நமக்கு முன்னால் ஒரு விபத்து  நேரிடுகிறது என்றால் அதைக் கண்டும் காணாமல் இருப்பது பார்வையற்ற தன்மைக்கு முன்னுதாரணம். விபத்து நடக்கின்ற சூழலில் நம்மாலான முதலுதவி செய்யும் பொழுது நாம் பார்வையற்றவராக இருந்தாலும் பார்வையுள்ளவர்களாக மாற முடியும் .

இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு ஒரு வல்லச்செயலை செய்கிறார். வழியோரமாய் உட்கார்ந்திருந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்த பார்வையற்ற ஒருவருக்கு மீண்டும் பார்வை கொடுக்கிறார். இந்த வல்ல செயல் மூலமாக பார்வை பெற்று புதுவாழ்வு பெற பார்வையற்ற நபரின் நம்பிக்கையே அடிப்படையாக இருந்தது. இந்த நம்பிக்கை வழியாகப் பார்வைப் பெற  ஒரு வகையினர் துணையாகவும் மற்றொரு வகையினர் தடையாகவும் இருந்துள்ளனர். பார்வையற்ற அந்த நபர் இயேசுவின் வருகைக்காக பல நாட்களாக காத்திருந்தது போல் தெரிகின்றது. மக்கள் கூட்டம் கடந்து போவதைத் தனது அகக்கண்கள் வழியாக  உணர்ந்த அந்த பார்வையற்ற நபர் ஒரு தேடலோடு "இது என்ன? "என்று வினவினார். உடனே அவருக்கு உதவி செய்யும் விதமாக "நாசரேத்து இயேசு போய்க்கொண்டிருக்கிறார்" என்று பதில் கூறினர். இவருக்கு பதில் சொன்ன அவர்கள் நினைத்திருந்தால் இந்த மனிதரை உதாசீனப்படுத்திருக்கலாம். ஆனால் இவர் கேட்ட கேள்விக்குப் பதில் கூறினார். இதன் வழியாக இயேசு தான் அந்த வழியோரமாக செல்கிறார் என்பதை உணர்ந்த அவர் "தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்" என்று கூக்குரலிட்டார். இயேசுவிடம் நம்பிக்கையோடு அணுக ஒரு சாரார் உதவி செய்தனர்.

ஆனால் இயேசுவை அடைய முடியாதவாறு ஒரு சாரார் தடையாய் இருந்தனர். இவர் இயேசுவை நோக்கி கூக்குரலிடும் போது அமைதியாய் இருக்குமாறு அதட்டினார்கள். இது அவர்களுடைய மனிதநேயமற்ற சிந்தனையையும் செயல்பாட்டையும்  சுட்டிக்காட்டுகிறது. ஆனால் மனம் தளராமல் தடைகளைத் தாண்டி இந்த பார்வையற்ற நபர் "தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்" என்று இன்னும் உரக்கக் கத்தினார். அவருடைய அகக்கண்களின் நம்பிக்கையைக் கண்ட இயேசு "நான் உமக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்? " என்று கேட்டபோது "நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்" என்று நம்பிக்கையோடு அந்த நபர் தனது எதிர்நோக்கினை  வெளிப்படுத்துகிறார். ஆண்டவர் இயேசுவும் அவருடைய நம்பிக்கை கண்டு "பார்வைப் பெறும்; உமது நம்பிக்கை உம்மை நலமாகிற்று" என்று கூறி புது வாழ்வை   வழங்கினார். இந்த வல்லச்செயல் வழியாக பார்வை பெற்ற அந்த நபர்கடவுளைப் போற்றிப் புகழ்ந்து இயேசுவைப் பின்பற்றியதாக வாசிக்கிறோம். 

இன்றைய நற்செய்தி நம்முடைய அகக்கண்கள் வழியாக இயேசுவை உணர்ந்து அவர் கொண்டுவந்த மீட்பைச்  சுவைக்க அழைப்பு விடுக்கிறது.  ஆண்டவர் இயேசுவினுடை மீட்பைச் சுவைக்க ஏராளமான நபர்கள் உதவி செய்வார்கள். அதேபோல அவரை நோக்கிச் செல்ல தடையாகவும் இருப்பார்கள். ஆனால்  நாம் தடையாக இருப்பவர்களை பொருட்படுத்தாமல், உதவி செய்பவர்களுடைய வழிகாட்டுதலின்படி  இயேசுவை உணர்ந்து அருளைப் பெற்று புது வாழ்வை அடைந்திட அந்த பார்வையற்ற நபரின்  நம்பிக்கை நமக்கு வழிகாட்டுகிறது. 

நம்முடைய கிறிஸ்தவ வாழ்வு என்பது அகம் சார்ந்த ஒரு பயணம். இந்தப் பயணத்தில் ஆண்டவர் இயேசுவை முழுமையாக உணர்கின்ற பொழுது நம்முடைய புறம் சார்ந்த பயணமும் தெளிந்த பார்வை கொண்டதாக இருக்கும். இன்று பார்வையற்ற நபர் நலன் பெற்றார். அதற்கு காரணம் அவரின் அகம் சார்ந்த பயணம் இயேசுவை நோக்கி இருந்தது. எனவே அவர் புறம் சார்ந்த பயணத்திலும் புது பார்வை பெற்றார். புனித அன்னை தெரசா ஒரு மிகச்சிறந்த மனிதநேய சேவைக்கு முன்னுதாரணம். அவர் பொதுநலம் நிறைந்த பார்வையை பெறுவதற்கு அகம் சார்ந்த பயணமான செபம் தான் உறுதுணையாக இருந்தது. எனவே நம்முடைய அகம் சார்ந்த பயணத்தைத் தெளிவுபடுத்தி புதிய பார்வையைப் பெற்று புது வாழ்வையும் மீட்பையும் சுவைத்திட தேவையான அருளை வேண்டுவோம். 

"நாம் காண்பவரின் அடிப்படையில் அல்ல ; நம்பிக்கையின் அடிப்படையிலேயே வாழுகிறோம்" (2 கொரி: 5:7), "மனிதர் மீது நம்பிக்கை வைப்பதை விட ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்" (திபா: 118:8), "தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்;  ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்" ( மத்: 5:8) போன்ற இறைவார்த்தைகள் இறைநம்பிக்கையோடு வாழும் பொழுது நிச்சயமாக வாழ்வில் எல்லா வகையான அருளையும் பெறமுடியும் என்று சான்று பார்க்கின்றன. எனவே நமது அன்றாட வாழ்வில் இறை நம்பிக்கையோடும் தூய்மையான உள்ளத்தோடும் வாழ்ந்து ஆண்டவர் இயேசுவின் அளப்பரிய அன்பையும் மீட்பையும் சுவைத்திட தேவையான அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல் 
பார்வையற்றவருக்கு பார்வை வழங்கிய இயேசுவே! எங்களுடைய அன்றாட வாழ்வில் புறப் பார்வையைக் கொண்டிருந்தாலும் அகப் பார்வை இல்லாமல் பல நேரங்களில் உம்மை விட்டு விலகி சென்றுள்ளோம். அதற்காக மன்னிப்பு கேட்கின்றோம். இந்த உலகத்தில் உள்ள அநீதிகளையும் தவறுகளையும் கண்டும் காணாதவர்களாக அகப்பார்வை இல்லாதவர்களாகவும் இருந்திருக்கின்றோம். இத்தகைய மனநிலையை நாங்கள் மாற்றி எங்களுடைய தேடல் வழியாகவும் இறைவேண்டலின் வழியாகவும் உமது அன்பையும் அருளையும் பெற்று புது வாழ்வை அடைந்திட தெய்வீக ஆசீரைத் தாரும். ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

2 + 4 =