பரிவும் பகிர்வும்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் 18 ஆம் திங்கள் 
I: ஏரே: 28: 1-17
II:  திபா: 119: 29,43. 79,80. 95,102
III: மத்: 14: 13-21

பரிவு என்பது கடவுளின் இரக்கத்தின் மற்றொரு பரிமாணம். கடவுளின் தாயுள்ளத்தை படம்பிடித்துக் காட்டும் மிக உயரிய பண்பு.இயேசு தந்தை கடவுளின் இப்பரிவுள்ளத்தை தன் வாழ்நாள் முழுவதும் பிரதிபலிக்கக்கூடியவராகவே வாழ்ந்தார். தன்னைத் தேடிவந்த மக்கள் கூட்டத்தை அவர் பரிவோடு நோக்கினார் என்ற வார்த்தைகள் இயேசு பரிவு மிக்கவர் என்பதற்கு சான்றாக அமைகிறது. இன்று நற்செய்தியின் மூலம் இத்தகைய பரிவு என்ற பண்பில் நாம் வளர இயேசு நம்மை அழைக்கிறார்.

 கடவுள் எல்லா நன்மைகளுக்கும் ஆதாரமானவர். கருணையுள்ளவர்.  அவர் பரிவோடு இருப்பார் என்பதில் ஐயமில்லை. இயேசு இறைமகன். அவர் மனிதனாக வாழ்ந்தாலும் இறைதந்தையின் குணங்களை தன்னுள்ளே பெற்றிருந்தார். எனவே அவரும் அனைவரிடமும் ஏன் தன்னை வெறுத்தவர்களிடம் கூட பரிவோடு நடந்துகொண்டார். மனிதர்களாகிய நாம் எவ்வாறு பரிவோடு வாழப்போகிறோம்?

 பல சமயங்களில் சுயநல எண்ணங்களால் மட்டுமே நம் மனம் நிறைந்துள்ளது என்பதை நாம் அறிவோம். அதிலிருந்து நாம் வெளிவர எண்ணினாலும் இயலாமல் போகிறது. ஆயினும் நாம் பரிவுள்ளவர்களாக விளங்கவேண்டுமென்பதே நம் பரிவுள்ள தந்தையின் விருப்பம். அதற்கான ஒரு வழியாகத் திகழ்வது "பகிர்வு " என்ற பண்பு. ஆம் பகிர்வின் மூலம் பரிவு வளரும். பரிவு இருந்தால்தான் பகிர முடியும்.

நம்மிடம் இருப்பதை நாம் எப்போது பிறருக்கு பகிர்வோம் என யோசிக்கும் போது, பிறரிடம் இல்லாமையைக் கண்டு நம் மனம் இளகும் போது என்ற பதில் கிடைக்கிறதல்லவா. அதுதான் பரிவின் ஆரம்பம். அன்று ஐந்து அப்பங்கள் இரண்டு மீன்கள் கொண்டவர் பிறரிடம் அவை இல்லை என்பதை உணர்ந்து பரிவோடு அதைக் கொடுத்ததால் அங்கே பகிர்வு உருவெடுத்து அனைவரும் உண்டனர். ஆம் அன்புக்குரியவர்களே நம்மிடம் உள்ளதை பிறரோடு பகிர்வதால் அங்கே எதும் குறைவுபடுவதில்லை.மாறாக நிறைவாகிறது. அந்த நிறைவு பரிவின் அடையாளமே. எனவே நம் விண்ணகத் தந்தை ,ஆண்டவர் இயேசு இவர்களைப் போல தன்னிடமிருந்த உணவை பகிர்ந்தவரைப்போல நாமும் பரிவோடு நம் அன்பை, நம்மிடம் உள்ள பொருட்களை, ஆற்றலை, நேரத்தை தேவையிலுள்ளவர்களோடு பகிர்வோம். பரிவு என்ற நற்குணத்தில் வளர்வோம்.

 இறைவேண்டல் 
பரிவுள்ள தந்தையே!  உம்மைப்போல பரிவுள்ளம் உள்ளவர்களாய் எம்மிடம் உள்ளதை பிறரோடு பகிர வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

1 + 12 =