Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
பயணத் தொடக்கம் | யேசு கருணா | Sunday Reflection
ஆண்டவரின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா
I. விடுதலைப் பயணம் 24:3-8 II. எபிரேயர் 9:11-15 III. மாற்கு 14:12-16,22-26
'கிறிஸ்துவை உணவாக உட்கொண்டு ஊட்டம் பெறும் யாரும், தினசரி உணவின்றி வாடுவோர்மீது அக்கறையின்றி இருக்க இயலாது' – ஆண்டவரின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா அன்று நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு இது.
இன்றைய முதல் வாசகத்தில், உடன்படிக்கையின் ஏட்டை மக்கள் முன் வாசித்த மோசே, உடன்படிக்கையின் இரத்தத்தை அவர்கள்மேல் தெளிக்கின்றார். இரண்டாம் வாசகத்தில், எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலில், இயேசு தன் சொந்த இரத்தத்தைக் கொண்டு ஒரே முறை தூயகத்திற்குள் சென்று எக்காலத்துக்குமான பலியைச் செலுத்தினார் என மொழிகின்றார். மேலும், இயேசு புதிய உடன்படிக்கையின் இணைப்பாளராக இருக்கின்றார் என எழுதுகின்றார். அது என்ன புதிய உடன்படிக்கை? இத்திருமடலைப் பொருத்தவரையில், பழைய உடன்படிக்கை விலங்குகளின் இரத்தத்தால் நிறைவேற்றப்பட்டது. ஆனால், புதிய உடன்படிக்கை வானதூதர்களுக்கும் மேலான ஆனால், தன்னையே மனுக்குலத்தோடு ஒன்றிணைத்துக்கொண்டு இறைமகன் இயேசு கிறிஸ்துவின் உயர்மிகு இரத்தத்தால் நிறைவேற்றப்பட்டது. நற்செய்தி வாசகத்தில், இயேசு தன் சீடர்களுடன் இராவுணவை உண்ணும் நிகழ்வில், அப்பத்தை எடுத்து, 'இது என் உடல்,' என்றும், கிண்ணத்தை எடுத்து, 'இது எனது உடன்படிக்கையின் இரத்தம்' என்றும் அளிக்கின்றார். மூன்று வாசகங்களிலும், உடன்படிக்கை என்ற வார்த்தை மையமாக இருக்கின்றது.
'உடன்படிக்கை' என்பது ஓர் அரசியல் அல்லது உலகியல் சொல். வெற்றி பெற்ற அரசன் தான் வெற்றி கொண்ட மக்களுடன் உடன்படிக்கை ஏற்படுத்துவார். அதன்படி, இருவருக்கும் சில உரிமைகளும் கடமைகளும் வரையறுக்கப்படும். உடன்படிக்கையின் அடையாளமாக இரத்தம் தெளிக்கப்படும். ஏனெனில், உடன்படிக்கையை மீறுபவர்கள் கொல்லப்பட்;ட ஆட்டைப் போல கொல்லப்படுவார்கள் என்ற மறைமுக எச்சரிக்கையும் இதன் வழியாக விடப்பட்டது.
இயேசுவின் புதிய உடன்படிக்கை தரும் உரிமை என்ன? கடமை என்ன?
உரிமை என்னவெனில், அது பலருக்காகச் சிந்தப்படுகின்றது. அதாவது, அவருடைய துன்பத்தில், இரத்தத்தில் மற்றவர்கள் நலம் பெறுகின்றனர். கடமை என்னவெனில், அவரோடு, நாம் ஒலிவ மலைக்கு ஏறிச் செல்ல வேண்டும்.
இயேசுவின் வாழ்க்கையில் இறுதி இராவுணவு அவருடைய பணி வாழ்வின் இறுதி நிகழ்வாக இருந்தாலும், துன்பம் ஏற்றலுக்கான தொடக்கமாக அது இருக்கிறது. ஆக, இயேசுவுடன் பந்தியில் அமர்தல் நம் உரிமை எனில், அவருடன் எழுந்து ஒலிவ மலைக்குச் செல்தல் நம் கடமை.
திருத்தந்தையின் டுவிட்டர் பதிவின் உட்கருத்தும் இதுவே: நற்கருணை உணவை உண்ணுதல் நம் உரிமை. உணவில்லாதவர்களுக்கு நம் உணவைப் பகிர்தல் நம் கடமை. அதுவே நாம் ஏற வேண்டிய ஒலிவ மலை.
பல நேரங்களில் நம் நற்கருணைக் கொண்டாட்டம் மேலறையிலேயே முடிந்துவிடுகிறது. ஒலிவ மலைக்குச் செல்ல நாம் மறந்துவிடுகின்றோம்.
நம் தாய்த்திருஅவையின் மறைக்கல்வி, நற்கருணையை பலி, உணவு, உடனிருப்பு என்று நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. திருஅவையின் தந்தையர்களும், திருதந்தையர்களும் தங்கள் போதனைகளில் நற்கருணையின் இயல்பு, ஆற்றல், உள்பொருள் பற்றி நிறையப் பேசியுள்ளனர். நற்கருணையை மையமாக வைத்து நிறைய வல்ல செயல்கள் நடந்தேறியுள்ளன. நற்கருணைமேல் தனிப்பட்ட பக்தி கொண்ட நிறையப் புனிதர்கள் வரலாற்றை நாம் வாசித்துள்ளோம். நற்கருணை பலருடைய வாழ்வைப் புரட்டிப் போட்டுள்ளது.
நற்கருணையை நாம் கொண்டாடும்போதெல்லாம் நாம் இயேசுவால் வெற்றி கொள்ளப்பட்ட மக்கள் என்பதையும், அவருடைய வெற்றிகொள்தல் ஏற்படுத்திய உடன்படிக்கையின் மக்கள் என்பதையும் மறந்துவிட வேண்டாம்.
பெருந்தொற்றுக் காலத்தில், நற்கருணை இன்று தொட முடியாத தூரத்தில் இருக்கின்றது. ஒளிரும் திரைகளில் நற்கருணைக் கொண்டாட்டத்தைப் பார்த்துவிட்டு, அடுத்த காணொலிக்கு நகரும் நிலைக்கு நாம் வந்துவிட்டோம். 'இதுவே நன்றாகத்தானே இருக்கிறது!' என்ற எண்ணமும் மெதுவாக உதிக்கத் தொடங்குகிறது. ஆனால், நற்கருணையை இயேசு தன் குழுமத்தில் கொண்டாடினார். தன் சீடர்களை அனுப்பித் தயாரித்தார். அமர்ந்து உண்டார். பேசி விளக்கினார்.
நற்கருணை அனுபவம் என்பது பற்றி இன்று எண்ணிப் பார்ப்போம். நான் உண்ணும் நற்கருணையும், நான் இன்று காணும் நற்கருணையும் என்னில் என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறது? 'திருப்பலி' அல்லது 'நற்கருணை' நம் அன்றாட வாழ்வின் ஆன்மிகக் கடமையாக மாறிவிட வேண்டாம். என் ஆன்மிக நிறைவுக்காக நான் பயன்படுத்திக்கொள்ளும் 'பயன்பாட்டுப் பொருளாக' அது மாறிவிட வேண்டாம். நாம் அன்றாடம் உண்ணும் இந்த உணவு இயேசுவின் இறுதி உணவு. அங்கே எவ்வளவு உணர்ச்சிப் பெருக்கும், வேகமும் இருந்திருக்கும்!
சிலுவையின்மேல் ஏறி அமர்வதற்கும், சிலுவையைத் தாண்டி உயிர்த்துச் செல்வதற்கும் இயேசு பயன்படுத்திய உந்துபலகையே நற்கருணையே. அது அவருடைய பயணத் தொடக்கம் எனில், அதுவே நம் வாழ்வின் பயணத் தொடக்கமாகவும் இருக்கட்டும். ஆகையால்தான், நற்கருணைக் கொண்டாட்டத்தின் நிறைவில், 'சென்று வாருங்கள்!' என அருள்பணியாளர் மக்களை பயணம் செய்யுமாறு அனுப்புகின்றார்.
திருப்பாடல் ஆசிரியரோடு இணைந்து (திபா 116), 'ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்?' என்று பாடும் நாம், நம் கட்டுகள் அவிழ்க்கப் பெற்ற நாம் ஒருவர் மற்றவரின் கட்டுகளை அவிழ்க்கப் பயணம் செய்வோம்.
நம் முகக்கவசங்களின் கட்டுகள் விரைவில் அகலவும், நற்கருணையை நாம் உட்கொள்ளவும் இறைவன்தாமே தன் இரக்கத்தை நமக்கு அருள்வாராக!
அருள்திரு. யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
Add new comment