பண்பட்ட நிலமானால் | பொதுக்காலத்தின் 15ஆம் ஞாயிறு | குழந்தைஇயேசு பாபு


Matured People

இன்றைய வாசகங்கள் (12.07.2020) - பொதுக்காலத்தின் 15ஆம் ஞாயிறு - முதல் வாசகம்  எசா. 55:10-11; இரண்டாம் வாசகம் உரோ. 8:18-23; நற்செய்தி வாசகம் மத். 13:1-23. 

"அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்வார்

பெரும்பயன் இல்லாத சொல் " (198)

"அருமையான பயன்களையும் ஆராய வல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்ல மாட்டார்" என மு. வரதராஜன் இத்திருக்குறளுக்கு பொருள் கொடுக்கிறார். நம்முடைய வாழ்வில் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தைகளும் பிறருக்கு பயன் கொடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும். பிறர் வாழ்வு நிறைவும் மகிழ்வும் பெறவும் நம்முடைய வார்த்தைகள் அமைய வேண்டும்.

நாம் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தைக்கும் எண்ணுகின்ற எண்ணத்திற்கும் ஆற்றல் இருக்கிறது என்று உளவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். நாம் நல்லவற்றை பேசினால் நல்லது நடக்கும். கெட்டவற்றை பேசினால் கெட்டது தான் நடக்கும் என்பதை விவிலியத்தில் காணமுடிகிறது. இயேசு நல்லவற்றை பேசினார். எனவே இவ்வுலகிற்கு மீட்பை கொண்டுவந்தார். யூதாசு தீய சிந்தனையோடு வார்த்தைகளைப் பேசினார். எனவே மீட்பை சுவைக்க முடியாமல், தன் வாழ்வை இழந்தார்.

வார்த்தைகளுக்கு அவ்வளவு ஆற்றலும் வலிமையும் உண்டு. சாதாரண மனிதர்களாகிய நம்முடைய வார்த்தைகளில் அவ்வளவு வலிமை உண்டு என்றால் நம்மைப் படைத்த கடவுளுடைய வார்த்தைக்கு எவ்வளவு வலிமை இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

நாம் நல்ல  எண்ணங்களோடும்  வார்த்தைகளோடும் ஒரு மரத்தை வளர்த்தோம் என்றால் அது நன்றாக வளரும். தீய எண்ணங்களோடும் வார்த்தைகளோடும் ஒரு மரத்தை வளர்த்தோம் என்றால் அது கருகிப் போய்விடும். ஏனெனில் நம்முடைய வார்த்தைகளுக்கும் எண்ணங்களுக்கும் அவ்வளவு ஆற்றல் உண்டு.

சாதாரண மனிதர்களாகிய நம்முடைய வார்த்தைகளுக்கே அவ்வளவு ஆற்றல் இருக்கிறது என்று சொன்னால், நிச்சயமாக நம்மை படைத்தவரின் வார்த்தைகளுக்கு வலிமை நிறைந்த ஆற்றல் உண்டு.  மனிதர்கள் தீய வாழ்வை வாழ்ந்து மீட்பை இழந்த பொழுது இறைவாக்கினர்கள், நீதித்தலைவர்கள், அரசர்கள் போன்றோர்கள் வழியாக மக்களுக்கு வாழ்வளிக்கும் வார்த்தைகளை கடவுள்  வழங்கினார். கடவுளின் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டவர்கள் வாழ்வு அடைந்தார்கள். அதற்கு உதாரணம், நினிவே மக்கள், தாவீது அரசர், இறைவாக்கினர்கள் போன்றவர்களைக் கூறலாம். கடவுளின் வார்த்தைகளை புறக்கணித்த மக்கள் மீட்பை இழந்து அடிமைத்தனத்தில் வாழ்ந்தனர். அதற்கு உதாரணம் இஸ்ரயேல் மக்கள்.

கடவுளின் வார்த்தை இவ்வுலகை ஒன்றுமில்லாதவற்றிலிருந்து படைக்க ஆற்றல் படைத்தது. "கடவுள், 'ஒளி தோன்றுக'! என்றார்; ஒளி தோன்றிற்று" (தொ.நூ. 1:3). கடவுள் வார்த்தையை மீண்டும் மீண்டும் கேட்காத மக்களை மீட்க வேண்டுமென்று வார்த்தையின்  வடிவான இறைவன் மனுவுரு எடுத்தார். மனுவுரு எடுத்த இயேசு தன்னுடைய போதனைகள் வழியாக எல்லா மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் வார்த்தைகளை பயன்படுத்தினார்.

இன்றைய நற்செய்தியில் விதைப்பவர் உவமை வழியாக இறைவார்த்தையின் ஆழத்தை இயேசு நமக்கு சுட்டிக்காட்டியுள்ளார். நம்முடைய இதயத்தை பண்பட்ட நிலமாக மாற்றி நூறு மடங்கு பலன் கொடுக்க அழைப்பு விடுக்கிறார். இயேசு மூன்றாண்டுகள் போதனைகள் செய்தார். அவர் அதிக முக்கியத்துவம் கொடுத்தது சாதாரண ஏழை, எளிய, பாமர மக்களுக்குத் தான். எனவே தான் அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் உவமைகளை பயன்படுத்துகிறார்.

இயேசு தன்னுடைய பணி காலங்களில் தான் போதிக்கும் பொழுது கிட்டத்தட்ட 42 உவமைகள் பயன்படுத்தியதாக விவிலிய அறிஞர்கள் கூறுகின்றனர். விவிலிய நற்செய்தி எழுத்தாளர்களான மத்தேயு 17 உவமைகளையும், மாற்கு 5 உவமைகளையும், லூக்கா 19 உவமைகளையும், யோவான் 2 உவமைகளையும் குறிப்பிட்டுள்ளனர். விவிலியத்தில் கூறப்படாத மேலும் பல உவமைகள்  இருப்பதாக விவிலிய அறிஞர்கள் கருதுகின்றனர். இயேசுவின் நற்செய்தியை எழுதிய நற்செய்தியாளர்கள் ஏன் இவ்வளவு உவமைகளை தங்களுடைய நூல்களில் பதிவு செய்துள்ளனர்?  ஏனெனில் இயேசுவின் உவமைகள் இறையாட்சி மதிப்பீடுகளை புரிந்துகொள்ளும் வகையிலும் இறைவார்த்தையின் ஆழத்தை அறிந்து கொள்ளும் வகையிலும் இருந்தது.

இன்றைய திருவழிபாடு நற்செய்தியானது விதைப்பவர் உவமையை தியானிக்க அழைப்பு விடுக்கிறது. மறைநூல் தங்களுக்கு மட்டுமே தெரியும் என்று ஆணவம் கொண்ட மறைநூல் அறிஞர்கள், பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்கள்  இயேசுவின் போதனைகளை ஏற்றுக்கொள்ளாமல் விமர்சனப்படுத்தினர். எனவே இயேசு தொழுகை கூட்டத்தை தாண்டி சாதாரண மக்கள் வாழக்கூடிய இடங்களுக்குச் சென்று இந்த விதைப்பவர் உவமை கூறுகிறார்.

பாமர சாதாரண மக்கள் மீது இயேசு கொண்டிருக்க கூடிய அன்பையும் பரிவையும் இரக்கத்தையும் சுட்டிக்காட்டுகிறது. நமக்கு தெரிந்ததை பிறருக்குப் புரியாதவாறு சொல்லிக்கொடுப்பது உண்மையான போதனை அல்ல; மாறாக, தெரிந்ததை பிறருக்கு புரியும் வகையில் சொல்லிக் கொடுப்பதுதான் உண்மையான போதனை. இந்த இயேசுவின் மனநிலை கடவுளுடைய வார்த்தை அறிவிக்கின்ற ஒவ்வொரு போதனையாளர்களும் அவர்களுடைய மனநிலையாக இருக்க  வேண்டும்.

இறைவார்த்தை என்னும் விதையானது இதயம் என்ற நல்ல நிலத்தில் விதைக்கப்படும் பொழுது நம்முடைய வாழ்வு இறைவனுக்கு உகந்த வாழ்வாக மாறுகிறது. நான் கடந்த 3 ஆண்டுகளாக திருச்சி புனித பவுல் குருத்துவக் கல்லூரியில்  இறையியல் படித்து வந்தேன். அப்பொழுது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திருச்சி மறைமாவட்டதோடு இணைந்து சிறைப் பணி செய்து வந்தேன். ஒவ்வொரு வாரமும் சிறைவாசிகளை சந்தித்து ஆற்றுப்படுத்தல் பணியினை செய்து வந்தேன். ஒரு சிறைவாசியோடு பேசிக்கொண்டிருக்கும் பொழுது "எனக்கு நல்ல வார்த்தைகள் சொல்ல நபர்கள் இல்லை. எனவே என்னுடைய சூழ்நிலையின் காரணமாக நான் தவறு செய்து விட்டு சட்டத்திற்கு முன்பாக குற்றவாளியாக நிற்கிறேன்" என்று கூறினார். ஆம்! அன்புக்குரியவர்களே, வார்த்தைகள் தான் ஒரு மனிதனை நல்லவனாகவும் கெட்டவனாகவும் மாற்றுகிறது. அதேபோல நல்ல வார்த்தைகளை நல்ல மனநிலையோடு கேட்கும்பொழுது நம் வாழ்வு வளம் பெறுகிறது. நல்ல வார்த்தைகளை கெட்ட மனநிலையோடும் உறுதியற்ற மனநிலையோடும் கேட்கும் பொழுது நம் வாழ்வு தளர்ச்சி அடைகிறது. 

எனவே நம்முடைய அன்றாட வாழ்விலே வழியோரம் விழுந்த விதைகள் போலவோ, முட்செடிகளில்  விழுந்த விதைகளைப் போலவோ  அல்லது பாறையின் மீது விழுந்த விதைகளைப் போலவோ இல்லாமல் நல்ல நிலத்தில் விழுந்த விதைகளைப் போல இருக்க அழைக்கப்பட்டிருக்கிறோம். எனவே இறைவார்த்தையை வாசிக்கின்ற பொழுதும் அதைக் கேட்டு தியானிக்கின்ற பொழுதும்  இவ்வுலகம் சார்ந்த தீய எண்ணங்களையும் உறுதியற்ற மனநிலையையும் மாயக் கவர்ச்சிகளையும் விட்டுவிட்டு தூய எண்ணங்களை நம் இதயத்தில் பதிய வைப்போம். தூய்மையான இதயத்தில் இறைவனின் வார்த்தைகள் ஆழமாக பதியும். நம் இதயம் பண்பட்ட நிலமாக மாறி முப்பது, அறுபது, நூறு மடங்காக நமக்கும் பிறருக்கும் பலன் கொடுக்கும்.

கடவுளின் வார்த்தைகள் நம் நல்ல இதயத்திற்கு வந்தபிறகு அது பலன் கொடுக்காமல் திரும்பிப் போகாது. இதைத்தான் இன்றைய முதல் வாசகம் "வானத்திலிருந்து விழும் மழைத்துளி பலன் தராமல் திரும்புவதில்லை. அவ்வாறே என் வாயினின்று வெளிவரும் வார்த்தையும் இருக்கும்" (எசா: 55:10-11) என்று சுட்டிக்காட்டுகிறது. எனவே நம்முடைய தூய்மையான வாழ்வின் வழியாக நம் இதயத்தை நல்ல நிலமாக பண்படுத்தி நாமும் பலன் பெற்று பிறரும் பலன் பெற அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல்
அன்பான இறைவா!  நாங்கள் எங்களுடைய தீய வாழ்வை விட்டுவிட்டு நல்ல நிலமாக மாற எங்கள் இதயத்தைத் தூய்மைப்படுத்தியருளும்.  உமது இறைவார்த்தையைக் கேட்டு பலன் கொடுக்க அருளைத் தரும். ஆமென்.

அருள்சகோதரர் குழந்தைஇயேசு பாபு
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

3 + 6 =