பகிர்தலில் நற்செய்தி மதிப்பீட்டிற்கு சான்று பகர்வோமா! | குழந்தைஇயேசு பாபு | Sunday Reflection


பொதுக்காலம் 17 ஆம் ஞாயிறு; I: 1அர:   4: 42-44; II  : தி.பா: 145: 10-11. 15-16. 17-18; III: எபே: 4: 1-6; IV:  யோவா:    6: 1-15

பகிர்தல் என்ற பண்பானது இந்த உலகத்திலே உன்னதமான பண்பு. நம்மிடம் இருப்பதை பிறரோடு  பகிரும் பொழுது நம் வாழ்வு நிறைவு பெறுகின்றது. நம்மிடம் இருப்பதை பிறரோடு பகிர மனம் இல்லாமல் இருக்கும் பொழுது நம் வாழ்வு நிறைவற்ற வாழ்வாக இருக்கின்றது. இன்றைய நாள் நற்செய்தி வழியாக ஆண்டவர் இயேசு நம்மை பகிர்தலுள்ள மக்களாக வாழ அழைப்பு விடுகிறார்.  பகிர்தல் என்பது இழப்பல்ல ; மாறாக,  அது நீரூற்று. கிணற்றில் ஊற்றின் வழியாக தண்ணீரை எடுக்கும் பொழுது அது மீண்டும் மீண்டும் ஊற்றெடுக்கும். கல்வியை பிறருக்கு பகிரும் பொழுது அது பன்மடங்கு கற்பிப்பவர்களுக்கும் கற்றுக் கொள்பவர்களுக்கும் அதிகமாகும்.   பகிரும் பொழுதுஅதை பன்மடங்காக கடவுள் எனக்கு கொடுப்பார்.இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு அப்பம் பகிர்தல் வழியாக மக்களுக்கு உணவு அளித்தார்.

பகிர்தலின் வழியாக தன்னுடைய தியாகம் நிறைந்த மனநிலையையும் பரிவு நிறைந்த உள்ளத்தையும் ஆயருக்குரிய மனநிலையையும் இயேசு வெளிப்படுத்தினார். இயேசு தன் பணி வாழ்வு முழுவதும் பகிர்வு நிறைந்த மனநிலையை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக தான் கொண்டிருந்த இறையாற்றலை தன்னுடைய இறையாட்சி பணியில் வழியாக  இயேசு வெளிப்படுத்தினார்.  தன்னுடைய குணமளிக்கும் ஆற்றலை நோயாளர்களை குணப்படுத்துவது வழியாக வெளிப்படுத்தினார். தன்னுடைய போதிக்கும் ஆற்றலை மக்கள் மீட்புப் பெற வழிகாட்டுவது வழியாக வெளிப்படுத்தினார். தன்னுடைய வழிநடத்தும் ஆற்றலை சீடர்களை தனது இறையாட்சி பணிக்கு பக்குவப்படுத்தி வழிநடத்துவதன் வழியாக வெளிப்படுத்தினார். தன்னுடைய மனிதநேயம் நிறைந்த மனநிலையை தன்னுடைய அன்றாட வாழ்வின் வழியாகவும் மனிதநேய செயல்பாடுகள் வழியாகவும் வெளிப்படுத்தினார். இவ்வாறு இயேசுவின் வாழ்வு முழுவதுமே பகிர்தலின் மனநிலையை காணமுடிகிறது.

பழைய ஏற்பாட்டிலும் பகிர்தல் நிறைந்த வாழ்வுக்கு சான்றுகள் இருக்கின்றன. கடவுள் இந்த உலகத்தை படைத்ததே பகிர்தலின் உச்சத்தை சுட்டிக்காட்டுகிறது. கடவுள் தன்னுடைய இறை ஆற்றலை தனக்குள்ளே வைத்துக்கொள்ளாமல் உலகத்தைப் படைத்தது வழியாக வெளிப்படுத்தினார். ஆபிரகாம் தன்னுடைய சகோதரர் லோத் தோடு  சொத்துக்களை பகிர்ந்தார். குறிப்பாக நல்லவற்றை அவருக்கு கொடுத்து பகிர்ந்தார். எனவே கடவுள் ஆபிரகாமை உயர்த்தினார். இறைவாக்கினர்களும் கடவுளிடமிருந்து பெற்ற இறைவாக்குகளை தங்களுக்குள்ளே  வைத்துக்கொள்ளாமல் பிறரோடு பகிர கூடிய மனநிலை கொண்டவராக இருந்தனர். ஆண்டவருடைய இறைவார்த்தையைக் கேட்டு மக்கள் அனைவரும் நலமோடும் வளமோடும் கடவுளுக்கு உகந்த  வாழ்வு வாழ  வழிகாட்டினர்.  அன்னை மரியாள் "இதோ ஆண்டவரின் அடிமை. உன் சொற்படி நிகழட்டும் "என்று தன்னையே பகிர்ந்து இவ்வுலகம் மீட்புப் பெற ஒரு கருவியாகப்  பயன்பட்டார். மீட்பராக இயேசுவை இந்த உலகிற்கு கொண்டு வர அன்னை மரியாவின் பகிர்தல் நிறைந்த வாழ்வு அடிப்படையாக இருந்தது. ஆண்டவர் இயேசு  தன்னுடைய இறையாட்சி பணியை தொடர்ந்து செய்ய தன்னுடைய ஆற்றலையும் வல்லமையையும் சீடர்களோடு பகிர்ந்து,  அவர்கள் நோய்களை போக்கி பேய்களை விரட்ட அதிகாரம் அளித்தார். இது இயேசுவின் பகிர்தலுக்கு மிகச்சிறந்த உதாரணம். இயேசுவும் தன்னுடைய இறையாட்சி பணியினை தொடர்ந்து செய்ய  தன்னுடைய உடலையும் இரத்தத்தையும் உணவாகக் கொடுப்பதன் வழியாக புது வாழ்வையும் புது மாற்றத்தையும் கொடுத்துள்ளார்.

நமது அன்றாட வாழ்வில் சிந்தித்து  பார்ப்போம். பகிர்வு நிறைந்த உள்ளத்தோடு நாம் வாழ  தயாரா? கொரோனா என்ற இந்த இக்கட்டான சூழலில் எத்தனையோ மனிதர்கள் உண்ண உணவில்லாமலும்  உடுத்த உடையில்லால்லாமலும்  இருக்க இடமில்லாமலும் இருக்கின்றனர். அவர்களுக்கு நம்மாலான உதவிகளை செய்யும் பொழுது நாம் பகிர்வு நிறைந்த உள்ளத்தோடு வாழ முயற்சி செய்வோம். அப்பொழுது நிச்சயமாக நம்முடைய வாழ்வு இயேசுவின் பார்வையில் முழுமை பெற்றதாக இருக்கும். பகிர்தல் வழியாக நற்செய்தி  மதிப்பீட்டிற்கு  சான்று பகர தயாரா?

இறைவேண்டல் : 
அன்பான இறைவா! பகிர்தலின் வழியாக இந்த நற்செய்தி மதிப்பீட்டிற்கு சான்று  பகரவும்  பிறர் வாழ்வு வளம் பெற மனிதநேய சிந்தனையோடு உழைத்திடுவும் தேவையான அருளைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

9 + 4 =