Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
நெருக்கடி வேளையிலும் கைகொடுப்பார் நம் இறைவன்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
தவக்காலம் -ஐந்தாம் திங்கள்
I: தானி 2: 1-9, 15-17, 19-30, 33-62
II : திபா 23 1-3a. 3b-4. 5. 6
III : யோவான்: 8: 12-20
வேடிக்கையாக பலர் சொல்லும் ஒரு வாசகம் " ஆண்டவர் நல்லவங்கள சோதிப்பார். ஆனா கை விடமாட்டார்". ஆனால் இவ்வாசகம் வேடிக்கையானதல்ல. உண்மையானது. அதற்கு பல சான்றுகள் உண்டு. ஏன் நம் விழ்விலே கூட "ஐயோ நான் தொலைந்தேன் " என்று எண்ணிய தருணங்களில் திடீரென யார் மூலமாவது கடவுள் நமக்கு உதவுவார். எனக்கென்று யாருமில்லை என எண்ணிய நேரத்தில் முன் பின் தெரியாத ஒருவர் நமக்கு துணையாக வருவார். ஏனெனில் நாம் நெருக்கடி வேளையில் துன்புறும் போது நம்மை அப்படியே விட்டுவிட்டு போகிறவர் அல்ல நம் கடவுள். அந்நெருக்கடி நேரங்கள் நம் நம்பிக்கையை புடமிடும் நேரமாகக் கூட அமையலாம்.
இன்றைய முதல் வாசகம் இதனை நமக்கு மிக அழகாக விளக்குகிறது. எந்தத் தவறும் செய்யாமல் சூசன்னா தண்டனைத் தீர்ப்புக்குள்ளாகிறார்.அவருடைய வழக்கு சரியாக விசாரிக்கப்படவில்லை. சமூகத்தில் பெரியவர்கள் என்று சொல்லித்திரியும் ஒருசிலரின் சூழ்ச்சியால் ஒரு நேர்மையான குற்றமற்ற பெண் பாதிக்கப்படுகிறாள். அந்நேரத்தில் கூட சூசன்னா தன் குரலை கடவுளை நோக்கி எழுப்புகிறார். அந்நேரத்தில் அவளுடைய நம்பிக்கையையும் நேர்மையையும் பிறருக்கு எடுத்துக்காட்ட தானியேலின் உருவிலே கடவுள் வருகிறார். நெருக்கடியான நிலையினின்று விடுவிக்கின்றார்.
இன்றைய நற்செய்தி வாசகத்திலும் இயேசுவுக்கு நெருக்கடி கொடுக்கும் யூதர்களை நாம் காண்கிறோம். இல்லாத பொல்லாத குற்றங்களை எல்லாம் சுமத்தி அவரை எப்போது பிடிக்கலாம் என கண்ணிலே எண்ணெய் ஊற்றி காத்திருந்தனர் பரிசேயர்கள், சதுசேயர்கள், மற்றும் மறைநூல் அறிஞர்கள். ஆனால் அத்தகைய நெருக்கடி வேளையிலும் தன்னை அனுப்பிய தந்தை தன்னோடு உடனிருக்கிறார் என்ற நம்பிக்கையில் தனக்குத் தானே சான்று பகர்கிறார் இயேசு.அத்தோடு நின்றுவிடவில்லை தந்தை தனக்கு சார்பாக பேசி தனக்காக சான்று பகர்வார் என ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார்.
எனவே அன்புக்குரியவர்களே நெருக்கடி வேளையில் கலங்க வேண்டாம். ஏனெனில் ஆண்டவர் நிச்சயம் நமக்கு உதவ காத்திருக்கிறார். திருப்பாடல் ஆசிரியர் செபிப்பது போல "இருள்சூழ் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும், நான் எதற்கும் அஞ்சிடேன். "என்ற நம்பிக்கையோடு நம் வாழ்விலே தொடர்ந்து பயணிப்போம்.
இறைவேண்டல்
அன்பு இறைவா! எத்தகைய நெருக்கடியான சூழல் வந்தாலும் நீர் கரம் கொடுப்பீர் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து பயணிக்க வரமருளும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment