நீதியை நிலைநாட்டும் ஊழியர்களாவோம்! | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


புனித வாரம்- திங்கள்; I: எசாயா 42: 1-7; II: தி.பா திபா 27: 1. 2. 3. 13-14 ; III: யோ: 12: 1-11

புனித வாரத்தில் நாம் அனைவரும் அடி எடுத்து வைத்துள்ளோம்.
இயேசுவின் பாடுகளையும் இறப்பையும் தியானித்து அவரோடு ஒன்றிணைந்து இறுதியில் அவருடைய உயிர்ப்பின் மகிழ்விலும் பங்குபெறும் உன்னதமான வாரம் இது. 

இன்றைய முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் துன்புறும் ஊழியரின் பண்புகளைக் குறித்துக் கூறுகிறார். 
"உலகில் நீதியை நிலைநாட்டும்வரை அவர் சோர்வடையார்; மனம் தளரமாட்டார்; அவரது நீதிநெறிக்காகத் தீவு நாட்டினர் காத்திருப்பர்" எசாயா 42:4 .நீதி என்பது என்ன?  நீதி என்பதற்கு நடுநிலை என்ற பொருள் உண்டு. ஒரு மனிதன் தன் தேவைகளை மற்றவர்களைப் போல் நிறைவேற்றிக்கொள்ளுதல்,மதிக்கப்படுதல், சம உரிமை,ஏற்றத்தாழ்வு இன்மை,பாதுகாப்பு என எல்லாவற்றையும் பெற்றுக்கொள்வதுதான்  நீதி. சருக்கமாகச் சொன்னால் எல்லாரும் எல்லாவற்றையும் சமமாகப் பெற்று மகிழ்வுடன் இருப்பதே  நீதி. இத்தகைய நீதியை நிலைநாட்டுவது தான் துன்புறும் ஊழியரின் பணி.  அந்நீதியை நிலைநாட்டும் வரை அவர் சோர்வடையமாட்டார். அதற்காக எத்தகைய துன்பங்களையும் அவர் ஏற்றுக்கொள்வார். ஏனெனில் ஆண்டவர் தாமே அவருக்கு ஆதரவு அளிக்கிறார் என முதல் வாசகத்தில் விளக்கப்பட்டுள்ளது. 

இத்தகைய பணிக்குத்தான் நாமும் இன்று அழைக்கப்பட்டுள்ளோம். நாம் வாழும் இன்றைய சமுதாயத்தில் நடுநிலை இருக்கிறதா? ஏற்றத்தாழ்வும்,உரிமை வலுக்கட்டாயமாகப் பிடுங்கப்படுதலும் நம் கண்முன்னே அன்றாடம் நடந்தேறுகின்றன. அவற்றை எதிர்த்து குரல் கொடுத்தால் நமக்குக் கிடைக்கும் பெயர் தேசத்துரோகி. இவை ஒருபுறம் இருக்க நம்முடன் வாழ்வோரை நாம் நீதியோடு அல்லது நடுநிலையோடு நடத்துகிறோமா என்றால் அதுவும் கேள்விக்குறிதான்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் நறுமணத்தைலத்தை விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே என்று கூறிய யூதாசுக்கு ஏழைகள் எப்போதும் உங்களோடு இருப்பார்கள் நான் இருக்க மாட்டேன் என்று இயேசு கூறியதை நாம் வாசிக்கிறோம். இவ்வாறு இயேசு கூறியது எதற்காக எனில் அதைவிற்று அந்தப் பணத்தை தான் எடுத்துக் கொள்ளலாம் என அவனுக்கு இருந்த மனநிலையை இயேசு அறிந்ததாலேயே. இங்கு இயேசு மரியாவுக்கு அவர் விருப்பத்தை செய்ய சுதந்திரத்தையும் உரிமையையும் அளித்ததோடு யூதாசின் தவறான ஆசைக்கு ஒரு முற்றும் புள்ளி வைத்து நீதியை நிலைநாட்டுகிறார்.

அன்புக்குரியவர்களே நீதையை நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர் என மத்தேயு நற்செய்தியின் மலைப்பொழிவில் நாம் வாசிக்கிறோம்.நீதியற்ற இவ்வுலகில் நீதியை இயேசுவைப் போல நிலைநாட்ட நமக்குக் கடமை உண்டு என்பதை நினைவில் கொள்வோம்.ஆண்டவர் நமக்கு ஆதரவு அளிப்பார்.

இறைவேண்டல்

நீதியின் இறைவா! நாங்கள் வாழும் இடங்களில் நடுநிலை தவறாது வாழ்ந்து பிறரை நீதியுடன் நடத்தும் ஊழியர்களாக வாழ வரம் தாரும். ஆமென்.

Add new comment

1 + 1 =