நாம் கடவுளுக்கு ஏற்புடையவற்றை எண்ணுகிறோமா? | குழந்தைஇயேசு பாபு | SundayReflection


பொதுக்காலத்தின் 24 ஞாயிறு; I: எசா: 50: 5-9; II: தி.பா: 116: 1-2. 3-4. 5-6. 8-9; III: யாக்: 2: 14-18; IV: மாற்: 8: 27-35

பொன்விழா கொண்டாடும் தம்பதியினரிடம் "உங்களுடைய திருமணவாழ்வு இவ்வளவு மகிழ்வானதாக, வெற்றியானதாக அமையக் காரணம் என்ன? " என்ற கேள்வி கேட்கப்பட்டது. அப்போது இருவரும் ஒருவர் மற்றவரைப் பார்த்து சிரித்தவாறே பின்வரும் பதிலைக் கூறினர். "எங்கள் இருவருக்குமிடையில் பல முரண்பாடுகள் இருந்தன. சின்னச் சின்ன சண்டைகளும், புரிதலற்ற தன்மையும் இருந்தது உண்மைதான். ஆனால் இவை அனைத்தையும் சரிசெய்ய நாங்கள் கையாண்ட ஒரு உத்தி ஒருவர் மற்றவருடைய தேவை என்ன, விருப்பம் என்ன என அறிந்து அதற்கேற்றபடி நடந்து கொண்டதுதான். இச்சூழ்நிலையில் என் கணவர் என்ன செய்திருப்பார்?  அல்லது இப்பிரச்சினைக்கு என் மனைவி என்ன முடிவு எடுத்திருப்பார்?  என நாங்கள் எண்ணி அதற்கேற்றவாறு செயல்பட்டோம். அதனாலேயே எங்கள் மணவாழ்வு வெற்றியானது. ஆனால் அவ்வாறு வாழ்வது பலவேளைகளில் எளிதானதாக இல்லை. இருப்பினும் நாங்கள் வாழ்ந்து காட்டிவிட்டோம் " என்றவாறு அவர்களுடைய பதில் அமைந்தது. இதைக்கேட்ட அனைவரும் அத்தம்பதியரை வியந்து பாராட்டினர்.!

 ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் இவ்வாழ்க்கையில் நாம் மற்றவர்களை மகிழ்விக்கும் வகையில் அவர்களுடைய எண்ணங்களுக்கு ஏற்றவாறு வாழ முயற்சிக்கிறோம். ஆனால் எப்போதும் எல்லாராலும் மற்றவர்களை மகிழ்விக்கும் வகையில் அவர்களின் எண்ணத்திற்கு ஏற்ப வாழவோ அல்லது சிந்திக்கவோ முடிவதில்லை. ஏனெனில் நாம் நமக்கு எது நன்மைதரும், நமக்கு எது மகிழ்வைத்தரும் என்பவற்றையே எண்ணி செயல்படுகிறோம்.
 அதே சமயத்தில் நமது ஆன்மீகக் காரியங்களில் கடவுளுக்கு ஏற்றவாறு வாழத் தவறுகிறோம். கடவுளை மகிழ்விக்கும் வகையில் அவருக்கு ஏற்புடையவற்றை நம் சிந்தையில் நிறுத்தி வாழ்ந்தால் நாம் நிச்சயம் மகிழ்வடைவோம், மகிமையடைவோம் என்ற கருத்தை ஆழமாக எடுத்துரைக்கிறது இன்றைய நற்செய்தி.

"நான் யாரென்று நீங்கள் கூறுகின்றீர்கள்" என இயேசு கேட்டபோது "நீர் மெசியா வாழும் கடவுளின் மகன் " என்று கூறி இயேசுவிடம் பாராட்டைப் பேதுரு,  இயேசு தன் சாவைப்பற்றி முன்னறிவித்த போது  தன் வருத்தத்தைத் தெரிவித்ததால் இயேசுவால் கடிந்து கொள்ளப்பட்டார் . அவ்வாறு கடிந்து கொள்ளும் போது " நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்” என்ற வார்த்தைகளைக் கூறுகிறார்.இவ்வார்த்தைகளை ஆழ்ந்து தியானிக்கும் போது மனித எண்ணங்களுக்கும் கடவுள் எண்ணங்களுக்கும் உள்ள வேறுபாட்டை நாம் அறிய இயலும். 

யூதர்களைப் பொறுத்த வரை மெசியா என்பவர் அரசருக்கு ஒப்பாவார். அவர் தங்களுக்கு விடுதலை அளித்து தங்கள் வாழ்க்கையை மேன்மைப்படுத்துவார் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்தது. இவ்வுலக மன்னரைப் போல மெசியாவும் சுகபோக வாழ்க்கை வாழ்வார் எனவும் அவருடைய அரசின் கீழ் உள்ள மக்களையும் அவ்வாறு இன்பமாக வாழவைப்பார் என்பதும் அவர்களுடைய எண்ணம்.இதே மனநிலையில் தான் பேதுருவும் இருந்தார். இயேசுவின் வல்ல செயல்களையெல்லாம் நேரில் கண்டதால் ,அற்புதங்களை நிகழ்த்தி தமக்கு இன்பம் தருவார் என பேதுரு எண்ணியிருக்கலாம். ஆம். அவர்  மனிதருக்கு ஏற்புடையவற்றை எண்ணியிருக்கிறார்.

ஆனால் கடவுளின் விருப்பமோ மெசியா துன்பங்களை ஏற்க வேண்டும் என்பதாகும். தன்னையே இழந்து தம் மக்களை மீட்பதே மெசியாவின் வருகையின் நோக்கம்.  இயேசு கடவுளின் எண்ணத்தை நிறைவேற்றுவதில் உறுதியாய் இருந்தார். இவ்வுறுதி மனிதருக்கே உரிய எண்ணங்களைக் கொண்ட பேதுருவுக்கு முரணாக இருந்ததால் இயேசுவால் கடிந்து கொள்ளப்படுகிறார்.

 நாம் துன்பப்பட வேண்டும் என்பது கடவுளின் விருப்பமல்ல. நாம் நிறைவான மகிழ்வான வாழ்வு வாழ வேண்டுமென்றே அவர் விரும்புகிறார். ஆனால் அவ்வாழ்வை அடைய சில நேரங்களில் நாம் துன்பத்தின் வழியில் செல்ல வேண்டியிருக்கிறது. அத்தகைய தருணங்களை நாம் இறைத் திருஉளமாக ஏற்றுக்கொள்ளும் போது நாமும் கடவுளுக்கு ஏற்புடையவற்றை சிந்தித்து வாழும் மாந்தர்களாகிறோம். எப்போதும் இன்பத்தையும், மகிழ்வையும், வெற்றியையும் தேடி வாழ்ந்தோமெனில் நம் வாழ்வு நிறைவெய்தாது. எனவே எத்தகைய சூழலிலும் கடவுளுக்கு ஏற்புடையவற்றை எண்ணி வாழும் மனநிலையைப் பெற இறையருள் வேண்டுவோம்.

இறைவேண்டல்

அன்பு இறைவா! உமது எண்ணங்களைப்போல எமது எண்ணங்களை மாற்றும். உமக்கேற்ற எண்ணங்களால் எமை நிரப்பும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

 

Add new comment

1 + 1 =